2/4/2025 - செய்திச் சுருக்கம்
Irumbu Thirai News
April 03, 2025
2008 முதல் 2024 வரை ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிகக் குற்ற விசாரணை பிரிவால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி நிதியத்திலிருந்து இந்தப் பணம் பெறப்பட்டது தொடர்பான 22 கோப்புகள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
----------------------------------------------------
செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பயன்படுத்தி இரண்டு பெண்களின் சாதாரண புகைப்படங்களை நிர்வாணப் படங்களாகத் சித்திரித்து பரப்பிய சம்பவம் தொடர்பில் அனுராதபுரம், சாலியபுர பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
----------------------------------------------------
உயிர் பாதுகாப்புக்காக வழங்கிய துப்பாக்கிகளை திருப்பித் தருமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்னும் 42 நபர்கள் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று தெரிவித்தார். துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
----------------------------------------------------
ஏப்ரல் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் மற்றும் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக உள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.
----------------------------------------------------
ராஜாங்கனையே சத்தாரதன தேரரை சங்க சபையிலிருந்து நீக்குவதற்கு இலங்கை ராமஞ்ஞ மஹா நிக்காயவின் செயற் குழு தீர்மானித்துள்ளது. ராஜாங்கனையே சத்தாரதன தேரர் யூடியூப் செனலை நடத்தி சமூக ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் அண்மையில் பெரும் சர்ச்சை உருவாகியது.
----------------------------------------------------
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
----------------------------------------------------
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலரை மனிதாபிமான உதவியாக வழங்க உறுதியளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மருத்துவக் குழுக்களும், சுகாதார பிரிவின் ஆதரவும் வழங்கத் தயாராக இருப்பதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
----------------------------------------------------
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
----------------------------------------------------
நுகர்வோருக்கு தட்டுப்பாடு இல்லாமல் அரிசியை வழங்கும் நோக்கில், எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு பரிந்துரைத்துள்ளது. அறுவடை நடந்து கொண்டிருந்தாலும், தற்போது சந்தையில் அரிசியின் விலையில் அதிகரிப்பு இருப்பதாகவும், சந்தையில் சில வகையான அரிசிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
----------------------------------------------------
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
----------------------------------------------------
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
----------------------------------------------------
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தொடர்ச்சியாக நான்காவது முறையாக தடையின்றி தெரிவு செய்யப்பட்ட ஷம்மி சில்வா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) மூன்று குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (01) நடைபெற்ற அந்த பேரவையின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஷம்மி சில்வா, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மனித வள மற்றும் ஊதியக் குழு, நிதி மற்றும் வணிகக் குழு, மற்றும் பரிந்துரைக் குழு ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
----------------------------------------------------
2/4/2025 - செய்திச் சுருக்கம்
Reviewed by Irumbu Thirai News
on
April 03, 2025
Rating:
