சவுதி எண்ணெய் தொழிற்சாலை மீதான தாக்குதல்: இந்தியாவிற்கு எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்கலாம்?


உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் உற்பத்தி ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலால் உலக பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. மசகு எண்ணெயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதேவேளை உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 
20 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலின் மூலம் சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் ஐந்து சதவீதமான தொகை பாதிக்கப்பட்டுள்ளது. 
சவுதி அரசிற்கு சொந்தமான அரம்கோ எமெர்ஜென்சி நிறுவனத்தின், புக்கியாக் நகரில் உள்ள அப்கைக் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லா விமானம் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, குர்அய்ஸில் உள்ள அதே நிறுவனத்தின் எண்ணெய் வயலிலும் தாக்குதல் நடந்தது. 
இதனால் இரு இடங்களிலும் தீப்பற்றி எரிந்தது. ஏமன் அரசிற்கு எதிராக உள்நாட்டு போரில் ஈடுபட்டுவரும் ஹூவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளனர். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் போன்ற நாடுகள் ஏமன் அரசிற்கு ஆதரவாக உள்ளதால் சவுதி மீது ஏறக்குறைய 100 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 
தற்போது நடந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு ஈரான் பின்புலமாக இருந்து செயல்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. எண்ணெய் வளமிக்க ஈரான் நாட்டுடன் ஏற்பட்ட மோதல் போக்கால் அமெரிக்கா அந்த நாட்டிற்கு பொருளாதார தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
98 லட்சம் பேரல் மசகு எண்ணெய் உற்பத்தியாகும் சவுதியில் தற்போது நடத்தப்பட்ட தாக்குதலால் 
57 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கிடங்கில் இருந்த 50 சதவீத எண்ணெய் அழிந்ததாக கூறப்படுகிறது. 53 லட்சம் டன் மசகு எண்ணெய் சேமிப்பு கிடங்கு வைத்துள்ள இந்தியாவால், 
22 நாட்கள் வரை இறக்குமதியில்லாமல் நிலைமையை சமாளிக்க முடியும். 
இந்நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வது மட்டுமின்றி, இறக்குமதியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பொருளாதார மந்த நிலை நிலவிவரும் சூழலில், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சவுதியை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும் உலக எண்ணெய் சந்தை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் தாக்குதல் என்றும் சவுதி அரசு குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி) 
சவுதி எண்ணெய் தொழிற்சாலை மீதான தாக்குதல்: இந்தியாவிற்கு எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்கலாம்? சவுதி எண்ணெய் தொழிற்சாலை மீதான தாக்குதல்: இந்தியாவிற்கு எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்கலாம்? Reviewed by irumbuthirai on September 16, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.