மலேசிய பிரதமரிடம் ஜாகிர் நாயக் குறித்து உண்மையிலேயே பேசினாரா மோதி?
irumbuthirai
September 07, 2019
அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற மாநாட்டின்போது இந்திய பிரதமரும் மலேசிய பிரதமரும் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது
மலேசியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெற்றுள்ள மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மலேசிய அரசு மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோதி வலியுறுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்தக் கோரிக்கையை மலேசியப் பிரதமர் ஏற்றாரா என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்தியா மற்றும் மலேசியாவின் பிரதமர்கள் இருவரும் சந்தித்துப் பேசினர் என்றும், இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் மட்டுமே மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார் மகாதீர். அங்கு கியோடோ நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியப் பிரதமர் மோதியுடனான பேச்சுவார்த்தையின் போது, ஜாகிர் என்ற பெயரை மட்டுமே மோதி உச்சரித்ததாகவும், மேற்கொண்டு ஏதும் கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டார். அவர் (மோதி) பெயரை மட்டுமே குறிப்பிட்டாரே தவிர, என்ன பிரச்சினை என்பது குறித்தோ, அல்லது என்ன தேவை என்பது குறித்தோ ஏதும் தெரிவிக்கவில்லை. விரிவாக எதையும் கூறவில்லை என்று தெரிவித்தார்.
முன்னதாக, மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லாவும் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு தலைவர்களும் சந்தித்த போது ஜாகிர் நாயக் விவகாரம் குறித்து இந்திய பிரதமர் ஏதும் வலியுறுத்தவில்லை என்றே கூறியிருந்தார். மேலும், ஜம்மு காஷ்மீர் குறித்து தெளிவுபடுத்துவதற்கே பிரதமர் மோதி அதிக நேரம் எடுத்துக் கொண்டார் என்றும், இவ்விவகாரத்தில் மலேசியாவின் நிலைபாட்டை மகாதீர் தெளிவாக எடுத்துக் கூறினார் என்றும் அமைச்சர் சைஃபுதின் அப்துல்லா தெரிவித்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்திய மகாதீர்,"இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஐநா தீர்மானங்களின்படி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் மகாதீர் தெரிவித்தார். பேச்சுவார்த்தை மூலமாகவே இந்த விவகாரத்துக்கு தீர்வு காண முடியும் என்றும் மலேசியப் பிரதமர் கூறினார்," என்றார் அமைச்சர் சைஃபுதின் அப்துல்லா.
தேவை ஏற்படும் பட்சத்தில் மூன்றாம் தரப்பின் உதவியைக் கோரலாம் என்றும், இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லலாம் என்றும் பிரதமர் மகாதீர் தெரிவித்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
(பீபீசி)
மலேசிய பிரதமரிடம் ஜாகிர் நாயக் குறித்து உண்மையிலேயே பேசினாரா மோதி?
Reviewed by irumbuthirai
on
September 07, 2019
Rating:
