பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொலப் புலமைப் பரிசில் நிலுவை வழங்கல்...



மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர்களுக்கான உதவித்தொகை ஆகியவற்றை அதிகரித்தல் உள்ளிட்ட 06 வேண்டுகோள்களை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று (09) பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஊர்வலமாக வந்த மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். இவ்விடயம் பற்றி அறிந்த ஜனாதிபதி 

மாணவர்களுக்கு எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது அவர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வருகை தருவதற்கு வழிவிடுமாறு பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை வழங்கினார். ஜனாதிபதியும் ஜனாதிபதியின் செயலாளரும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட கடமையின் நிமித்தம் அலுவலகத்திற்கு வெளியே சென்றிருந்தமையினால் மாணவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்வு காண வேண்டிய பொறுப்பு ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.  ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோஹன அபேரத்ன, உயர்கல்வி அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். 
மாணவர்களின் வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரை தெளிவுபடுத்திய அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை உடனடியாகப் பெற்றுக்கொண்டனர். 
இதன்போது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குரிய மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர் உதவித்தொகையினை எதிர்வரும் திங்கட்கிழமை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. விரிவுரைகளுக்கான 80 சதவீத வரவினை பூர்த்தி செய்யாத மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசினை வழங்குதல், மாணவர் உதவித்தொகை மற்றும் மஹாபொல புலமைப்பரிசில் ஆகியவற்றை சமமான மட்டத்திற்கு கொண்டு வருதல், சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் தொடர்பான பிரச்சினைகள், மாணவர் உதவித்தொகையை வழங்கும்போது கருத்திற் கொள்ளப்படும் பெற்றோரின் வருமானத்தை 7 இலட்சம் வரை அதிகரித்தல், தொழில்புரியும் மக்களின் சம்பளத்தினை அதிகரித்தல் ஆகிய முன்மொழிவுகளுக்கு விரைவில் தீர்வுகளை பெற்றுக் கொடுத்தல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. கலந்துரையாடப்பட்ட விடயங்களை எழுத்து மூலமாக வழங்குவதற்கு அதிகாரிகள் 

இணக்கம் தெரிவித்தனர். குறித்த பிரச்சினைகள் தொடர்பில் மாதத்திற்கு ஒரு தடவையோ அல்லது மாணவர்களின் விருப்பப்படி இரண்டு வாரங்களுக்கொரு தடவையோ கலந்துரையாடுவதற்கு முன்மொழியப்பட்டதுடன், அவ்விடயம் தொடர்பில் மாணவர் சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானிப்பதாக மாணவ பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஒன்றுகூடியிருந்த மாணவர்கள் மிக அமைதியான முறையில் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
(அ.த.தி.)
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொலப் புலமைப் பரிசில் நிலுவை வழங்கல்... பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொலப் புலமைப் பரிசில் நிலுவை வழங்கல்... Reviewed by irumbuthirai on January 10, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.