இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக உயர்கல்வி தொழில் நுட்பம் புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். ஹோமாகம தியகம பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச தரத்திலான மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று இப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டபோது இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,நிர்மாணப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் இந்த விளையாட்டு மைதானத்திற்காக 26 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
பகல் இரவு போட்டிகளை நடத்தக்கூடிய வகையில் இந்த விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்படும் என்றும், முதற்கட்டத்தின் கீழ்
போட்டியை பார்வையிடும் சுமார் நாற்பதாயிரம் (40000) பேருக்கான வசதிகளைக் கொண்டதாகவும், இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் இருபதாயிரம் (20000) ஆசனங்களை ஒன்றிணைத்து மொத்தமாக 60 000 பார்வையாளர்களின் ஆசனங்களை கொண்ட வசதிகளை உள்ளடக்கியதாக இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களும் வலம் வருகின்றன. கொரோனாவினால் நாடு எதிர்நோக்கியிருக்கும் இக்கட்டான நிலைமைகளுக்கு மத்தியில் இது தேவைதானா? ஒரு புறம் நிதி நெருக்கடியென சுட்டிக்காட்டி அரச ஊழியர்களின் சம்பளத்தை அன்பளிப்பு செய்ய கோரும் அரசு மறு புறம் இந்த மைதானத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறுவது அரசின் இரு வேறுபட்ட நிலைமைகளைக் காட்டுவதாகவும், மைதானத்திற்கு முன் இலங்கை கிரிக்கெற் அணியை செய்ய வேண்டும், நாட்டில் எத்தனையோ பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில் இது இப்போதைக்கு அவசரமா என்றெல்லாம் பல விமர்சனங்கள் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தயாராகிறதா இலங்கையின் பாரிய கிரிக்கெற் மைதானம்?
Reviewed by irumbuthirai
on
May 18, 2020
Rating:
No comments: