- A.F. Fayas.
புதிய அரசின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளும் நிகழ்வு கடந்த புதன் கிழமை கண்டி வரலாற்று சிறப்பு மிக்க மகுல் மடுவவில் நடந்தது.
அரச ஆட்சியின் பின்னர் அங்கே சத்தியப்பிரமாணம் நிகழ்வது இதுவே முதல் முறை. எனவே, அரச தரப்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த எல்லா உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். பொதுவாக எல்லோரும் அதில் பங்கு பற்றிய அதே நேரம் ஆளும் தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தமக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்து முண்டியடித்ததை காணக்கிடைத்தது.
அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு உட்பிரவேசிக்கும் போதே ஒரு கோவை வழங்கப்பட்டது. அதில் அவர் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு அவசியமான ஆவணங்கள் காணப்பட்டன. அவற்றை வழங்கிய ஜனாதிபதி செயலக அதிகாரிகள் அவர்களை சத்தியப்பிரமாணம் செய்பவர்களுக்காக ஒத்துக்கப்பட்டிருந்த இடத்திற்கு அனுப்பி வைத்தனர். தமக்கும் ஏதேனும் அமைச்சு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருந்த பல சிரேஷ்ட உறுப்பினர்கள் தமக்கு கோவை தேடியத்தையும், அதிகாரிகளிடம் விசாரித்து பின்னர் மீண்டும் ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூட விசாரிப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. இதனால் தமது அபிலாஷைகள் நிறைவேறாத அதிருப்தியுடனே பல சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளே நுழைந்தனர்.
ஒரு சிரேஷ்ட உறுப்பினர் அமைச்சர்களுக்கு ஒத்துக்கப்பட்டிருந்த இடத்தில் போய் அமர்ந்து பின்னர் பாதுகாப்பு தரப்பினர் தலையிட்டு அவரை அப்புறப்படுத்தினர். இதனால் பல சிரேஷ்ட உறுப்பினர்கள்
பின் வரிசையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
விழாவிற்கு வந்த எஸ்.பி திஸாநாயக்கவிற்கு ஒரு கோவை வழங்கப்பட்டது. அவர் அதை எடுத்துக்கொண்டு போய் தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்தது குறைந்த பட்சம் இராஜாங்க அமைச்சாவது இருக்கும் என்ற நம்பிக்கையிலாகும். எனினும் அவருக்கு கிடைத்தது பெரும்பாலும் புதிய உறுப்பினர்களுக்கு பகிரப்பட்ட மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவியாகும்.
முக்கியமாக ஜோன் செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாபா, சுசில் பிரேம்ஜெயந்த, டிலான் பெரேரா, ரஞ்சித் சியபலாபிடிய, சந்திம வீரக்கொடி போன்றோர் பின் வரிசைகளில் அமர்ந்திருந்தனர்.
மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவிகள் முதலில் வழங்கப்பட்டன. பின்னர் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. விமலவீர திஸாநாயக்க சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் உடனடியாகவே வெளியேறிச் சென்றதாகவும் தகவல் உள்ளது. லொஹான் ரத்வத்தே மற்றும் பிரியங்கர ஜயரத்ன ஆகிய இருவரும், விமல வீரதிஸாநாயக்கவும் கூட்டாக எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு கூட நிற்காமல் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போன்று விஜயதாஸ ராஜபக்ஸவிற்கு இராஜாங்க அமைச்சர் பதவி ஒத்துக்கப்பட்டிருந்தது. அதில் அதிருப்தியடைந்த அவர் விழாவில் பங்கேற்காமலே திரும்பிச் சென்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 4 கேபினட் அமைச்சுக்களையும், 4 இராஜாங்க அல்லது பிரதி அமைச்சுக்களையும் வேண்டி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் அவர்களுக்கு 2 கேபினட் அமைச்சுக்களையும், 3 இராஜாங்க அமைச்சுக்களையும் மட்டுமே பெற முடிந்தது. அதிலும் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு இராஜாங்க அமைச்சே கிடைக்கப் பெற்றது. இது தொடர்பில் அவரும் திருப்தியுடன் இல்லை என்றே கூறப்படுகிறது.
மைத்ரிக்கும் கேபினட் அமைச்சு ஒன்று கோரப்பட்டிருந்தது. எனினும் செவ்வாய்க்கிழமை ஆகும் போது அமைச்சர் பட்டியலில் அவர் சேர்க்கப்படவில்லை என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்தது. பின்னர் வெளியான தகவல்களின் படி அவர் அமைச்சுப் பதவி வேண்டாம் என்று சொன்னதாக சொல்லப்படுகிறது.
அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் வேகமாக பேசப்படும் நிலையில் நிறுத்தப்படும் யாப்பில் புதிதாக உருவாக்கப்படும் பதவி ஒன்று அவருக்கு வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
எது எப்படியோ அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் பற்கோவிலின் எண்கோண மண்டபத்தின் முன்னின்று அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் பற்கோயிலுக்கு கூட்டாக சென்று ஆசிர்வாதம் பெற்றதுடன் கண்டியில் உள்ள பிரதான பெளத்த பீட தலைவர்களான மல்வத்த, அஸ்கிரிய மற்றும் ராமஞ்ஞ பீடாதிபதிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றனர்.
ஜனாதிபதி, பிரதம கெட்டம்பெ விகாரைக்கும் சென்றனர்.
இவற்றுக்கிடையே சகலருக்கும் கண்டி ஜனாதிபதி மாளிகையில் மதிய விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எப்படியோ பல வாத விவாதங்கள், திருப்தி அதிருப்திகள் மத்தியில் 8 ஆவது பாராளுமன்ற தேர்தலின் பின் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் நிறைவுக்கு வந்தது.
திங்கட்கிழமைக்கு முன்னர் கடமையை பொறுப்பேற்க வேண்டும் என்று சகலருக்கும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் அடுத்த நாளே பலர் தமது கடமைகளை பொறுபோற்றனர்.
சுற்றுலா அமைச்சர் காலை 6.15 க்கு கடமையேற்றார். அவரின் இராஜாங்க அமைச்சர் டி.வி சானக வேறு வழியின்றி அப்போது இணைந்து கொண்டார். ஜி.எல்.பீரிஸ் இசுருபாயவில் கடமையை பொறுப்பேற்ற போது அவருக்கு முன் கல்வியமைச்சராக இருந்த டலஸ் அலஹபெருமவும் கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்ட டலஸ் நேரடியாக தனது அமைச்சில் சென்று கடமையை பொறுப்பேற்றது தனக்கே உரிய பாணியில். ஆம் எல்லோரும் உறவினர் நண்பர்கள் சூழ கடமை ஏற்கும் போது தனியாக சென்று கடமையை ஏற்றுக கொண்டார்.
அரசியலமைப்பின் 19 ஆம் சீர்திருத்தம் கடந்த தேர்தலில் மிகப் பெரிய பேசு பொருளானது. மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்று அதை இரத்து செய்வோம் என அரசின் முன்னணி தலைவர்கள் எல்லோருமாற் போல் கூறினார்.
தற்போது நீதியமைச்சர் கெளரவ அலி சப்ரி அவர்களின் கூற்றின் படி அது இரத்து செய்யப்பட மாட்டாது என்றே கருத முடிகிறது.
இவ்விடயத்தில் அரசினால் 3 நடைமுறைகளை பின்பற்றி நடைவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.
1. பூரணமாக இரத்து செய்வது. இதன் மூலம் 18 ஆம் சீர்திருத்தம் மீண்டும் வலுவுள்ளதாக மாறும்.
2. புதிதாக சில சீர்திருத்தங்களை கொண்ட 20 ஆம் சீர்திருத்த சட்டத்தை கொண்டு வருதல்.
3. பூரணமாக புதிய யாப்பு ஒன்றை வரைதல்.
இதில் 3 ஆவது இப்போதைக்கு சாத்தியமில்லை. அதற்கு காலம் தேவைப்படும். ஜனாதிபதி பதவிக்காலம், பதவி வகிக்க கூடிய முறைகள் மாற்றப்பட மாட்டாது என்று நீதியமைச்சர் சொல்வதை வைத்து பார்க்கும் போது பெரும்பாலும் 20 ஆம் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் சாத்தியமே மிக அதிகம்.
எதிர்க்கட்சிகளின் தேசியப்பட்டியல் விவகாரம் கடந்த வார அரசியல் அரங்கில் சூடு பிடித்த மற்றோரு விவகாரமாகும். இதில் ஒரு ஆசனம் பெற்ற ஐதேக தலைமைச் சண்டையில் யார் என்று தீர்மானிக்க கூட்டம் கூடுவதும் களைவதுமாக உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்ட அம்பாறைக்கு அதை வழங்க தீர்மானம் மேற்கொள்ள, அது தனக்கு வேண்டும் என்று மாவை. சேனாதிராஜா தரப்பு சொல்ல, பெண் பிரதிநிதித்துவம் என்று மறைந்த பா.உ. ரவிராஜின் மனைவிக்கு என்று இன்னொரு தரப்பு சொல்ல கடைசியில் சுமந்திரனின் ஆதிக்கம் வென்றது. ஆசனம் அம்பாறைக்கு கிடைத்தது.
தேசிய மக்கள் சக்தி எவ்வித சிக்கலும் இன்றி தெரிவு செய்ய ஐக்கிய மக்கள் சக்தியின் சிறுபான்மை கட்சிகள் ஆசனத்திற்காக கொடி பிடிக்க ஆரம்பித்தது. ஏற்கனவே, மாவட்ட ரீதியாக வெல்லப் போகும் ஆசனங்களை ஓரளவு கணித்த தலைமை அவ்வாறு வெல்லும் போது சில முக்கிய தலைமைகள் தோல்வி கண்டு விடாதிருக்க அவர்களை தேசிய பட்டியலில் இட்டு வைத்திருந்தது. அவர்களில் முக்கியமானவர்கள் ஹரின் பெர்னாண்டோ, ரஞ்சித் மத்துமபண்டார, எரான் விக்ரமரத்ன போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களோடு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் க்கும் பதவி கொடுப்பது அவர்கள் தேவையாக இருந்தது.
மறுபுறம் கூட்டணிக்கு அதிக வாக்குகளை ஈட்டிக்கொடுத்த கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலமுகா, அஇமகா போன்றவை எம்பி சீட் ஐ எதிர்பார்த்து இருந்தனர். இவர்களில் ஒருவருக்கு வழங்கினால் மற்றவருக்கும் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற நிலை. மூவருக்கும் வழங்கினால் கட்சிக்கான மறுபுறம் ஆசாத் சாலி. எனவே பிரதான கட்சிக்கு ஒன்றும் இல்லாமல் போகும் நிலை இருந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இவற்றை விட சுவாரசியமாக சென்று கொண்டு இருப்பது இம்முறை முதல் முறையாக களம் இறங்கிய எங்கள் மக்கள் சக்தி கட்சியின் நிலை. கடைசி வரை மொட்டுவில் இடம் கிடைக்கும் என காத்திருந்த சில அரசியல் செயற்பாட்டு பிக்குகள் "பிக்குகளுக்கு வேட்புமனு வழங்குவதில்லை" என்று அக்கட்சி எடுத்த முடிவின் காரணமாக போட்டியிட கட்சி இன்றிய நிலையில் இருந்தனர். அப்போது எப்போது எவராலோ பதிவு செய்யப்பட்டு இருந்த இக்கட்சியில் கேட்க இவர்கள் தீர்மானிக்கின்றனர். செயலாளராக தமக்கு வேண்டிய பிக்கு ஒருவரை போட்டுகொண்டு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்றை இலக்காக கொண்டு பிரசாரங்களை ஆரம்பித்த குறித்த கட்சிக்கு கொழும்பு மற்றும் குருணாகல் மாவட்டங்களில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை பாரிய பின்னடைவை உருவாக்கியது.
ஏனென்றால் அவர்களின் இரு முக்கிய தலைவர்களான அதுரலியே ரத்ன தேரர் மற்றும் கலபொடஅத்தே ஞானசார தேரர் ஆகிய இருவரும் முறையே குறித்த மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். எனினும் அந்த சவாலை எதிர்கொண்டு ஏற்கனவே முஸ்லீம் வெறுப்பு பிரசாரம் வாயிலாக தாம் பெற்றிருந்த பிரபல்யத்தை பயன்படுத்தி எல்லா மாவட்டங்களிலும் சிறுக சிறுக சேர்த்த வாக்குகளால் ஒரு ஆசனம் அவர்களுக்கு கிடைத்தது. அதற்கு ஞானசார தேரரை நியமிப்பதாக ஏற்கனவே உடன்பாடு காணப்பட்டிருந்த போதிலும் தனக்கு முன்னனுபவம் உள்ளமையால் தான் செல்வதே பொருத்தம் என்று ரத்ன தேரர் தேர்தலின் பின் பல்டி அடித்தார். இவர்கள் இருவரிடையே ஆசன சண்டை நடக்க மறுபுறம் செயலாளராக இருந்த வேந்தினிகம விமலரத்ன தேரர் தன் பெயரை தேசியப்பட்டியல் உறுப்பினராக இட்ட கடிதத்தை ஆணைக்குழுவிற்கு அனுப்பி விட்டு தலைமறைவானார்.
பின்னர் குறித்த கட்சியின் தலைவர் செயலாளரை பதவி நீக்கம் செய்ததாக அறிக்கை விட, தலைமறைவாக இருக்கும் பிக்கு ஊடகங்களுக்கு தொடர்பு கொண்டு விளக்கங்கள் கூற விடயம் இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
குறிப்பாக ஞானசார தேரரை பாராளுமன்றம் செல்ல விடாமல் தடுக்க ஒரு குழு இயங்குவதாகவும், அந்த சதியை முறையடிக்கவே தான் செல்வதாகவும், சதி முறையடிக்கப்பட்ட பின்னர் தான் விலகி ஞானசார தேரருக்கு குறித்த ஆசனத்தை வழங்குவதாக அவர் கூற, ஞானசார தேரர் மற்றும் ரத்ன தேரர் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட, இன்னும் ஒரு வேட்பாளர் காலியில் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்க வார இறுதிவரை சுவாரஸ்யமான சம்பவங்களுக்கு குறைவிருக்கவில்லை.
புதிய வாரம் ஐதேக தலைமை விவகாரம், ஐதேக தேசியப்பட்டியல் விவகாரம், புதிய அமைச்சர்களின் செயற்பாடுகள், எமது மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் விவகாரம் என்பன சூடு பிடிக்கும். அத்துடன் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற அரசியல் குழுக்களின் பிரதி தலைவர் பதவிகள் தெரிவு செய்யப்படவுள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் என்று உறுதியான போதிலும் எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் பதவிக்கு உள்ளே ஓரளவு போட்டி நிலவுகிறது. உள்ளே தீர்க்கப்படாவிட்டால் அடுத்த வாரம் ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாகலாம்.
A.F. Fayas.
தலதா மாளிகையின் பதவியேற்பும்... இலங்கையில் பரபரப்பான அரசியலும்....
Reviewed by irumbuthirai
on
August 16, 2020
Rating:
No comments: