திவுலபிடிய கொரோனா எதிரொலி: 07-10-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 3ம் நாள் அதாவது புதன்கிழமை (07) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மேலதிகமாக மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கம்பஹா பொலிஸ் பிரிவில் 14 பொலிஸ் எல்லை பகுதிகளுக்கும், களனி பொலிஸ் பிரிவில் 02 பொலிஸ் எல்லைப் பகுதிகளுக்கும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் ஒரு பொலிஸ் எல்லை பகுதிக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 
  • முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இராணுவத்தினர் எச்சரிப்பு.
  • கொரோனா நோயாளர்கள் சிகிச்சைக்காக செல்லாமல் புறக்கணித்தல், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் குற்றம் என்பதால், அவ்வாறு செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.
  • கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, அவசர சிகிச்சை, கிளினிக் சிகிச்சை மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் வைத்தியசாலைக்கு வருமாறு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். விசேடமாக 14 வயதுக்கும் குறைந்த வயதுடைய சிறுவர்களை அநாவசியமாக வைத்தியசாலைக்கு அழைத்து வருவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வைத்தியசாலை அதிகாரிகள் கோரியுள்ளனர். 
  • தமது வழக்குகளுக்கான புதிய திகதிகளை அறிந்துகொள்ள ஊரடங்குச் சட்டம் முடிந்ததும் உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி உரிய நீதிமன்றங்களுக்கு சென்று அங்கே போடப்பட்டுள்ள அறிவித்தலை பார்த்து புதிய திகதியை அறிந்து கொள்ளலாம் என நீதிச்சேவை ஆணைக்குழு அறிவிப்பு. 
  • சீதுவை பொலிஸ் எல்லைப் பகுதிக்கும் உடன் அமுலுக்கு வரும் வரையில் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு. 

  • ராகம வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகத்தின் பேரின் சிகிச்சை பெற்றுவந்த பேலியகொட பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்று பின்னர் வெளிநோயாளர் பிரிவில் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 
  • கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தவதற்கான வேலைத்திட்டங்களின் அடிப்படையில் மக்கள் நேரடியாக தகவல்களை வழங்க பொலிஸ்மா அதிபர் கட்டுப்பாட்டு அறை மற்றும் பொலிஸ்மா அதிபர் செயற்பாட்டு அறைகள் நிறுவப்பட்டு அதற்கான தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டன. இதன் நேரடி இலக்கம் - 1993 ஆகும். இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு பிரிவிற்குமுரிய இலக்கங்களும் வழங்கப்பட்டன. 
  • கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க போவதில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவிப்பு. 
  • மினுவங்கொட பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் கடமையாற்றும் கம்பஹா பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் தற்போது அப்பகுதியில் தங்கியிருப்பவர்களுக்கு தனிமைப்படுத்தல் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.அந்த உத்தரவின் அடிப்படையில் இன்று (7) மாலை 4 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பிரத்தியேக இடங்களுக்கு அவர்களை வருமாறும் கூறப்பட்டது. 
  • மத்திய, கிழக்கு, தென் மாகாணங்களிலும் மறு அறிவித்தல் வரை தனியார் வகுப்புக்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு தடை விதிப்பு. 
  • கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இனங்காணப்பட்ட மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியரான பெண் முதலாவது கொரோனா தொற்றாளர் இல்லை எனவும் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் குறித்த தொழிற்சாலை ஊழியர்களுக்குள் சுவாச பிரச்சினைகள் இருந்ததாகவும் அதனடிப்படையில் முதலாவதாக கொரோனா தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்ட நபருக்கு தொழிற்சாலையினுள் வைத்தே வைரஸ் தொற்றி இருக்கலலாம் எனவும் தொற்று நோய் தடுப்புப் பிரிவு மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவிப்பு. 
  • 400 கட்டில்களுடன் கூடிய மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை கொரோனா சிகிச்சையளிப்பு நிலையமாக பிரகடனம். 
  • இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 1,032 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு. 
  • இதற்கு வெளியே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணியாளர் ஒருவருக்கும் கொரோனா உறுதியானது. 
  • கொழும்பு ஜோசப் கல்லூரி மாணவனின் தந்தைக்கும் கொரோனா உறுதியானதாக அப்பாடசாலை அறிக்கை வெளியிட்டது. 
  • 7ம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை உள்நாட்டு இறைவரி திணைக்களம் மூடப்படுவதாக அறிவிப்பு. 
  • இந்தியா அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தும் எந்தத் தரப்பினரும் மினுவங்கொடை தொழிற்சாலையை அணுகவில்லை என பிரண்டிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பு. 
  • கம்பஹா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் தான் நடத்திவந்த தனியார் வைத்திய நிலையத்தில் (Dispensary) மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் சிகிச்சை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • தனது மகளுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தாய் 10 நிமிடங்களில் மரணமாகியுள்ளார். 64 வயதுடைய இந்த பெண்மணி யக்கலை பிரதேசத்தை சேர்ந்தவர். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 
  • மினுவாங்கொட பிரெண்டிக்ஸ் தொழிற்சாலையில் முதலாவதாக கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண், தான் கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்படுவதற்கு முன்னதாகவே பலர் அங்கு சுகவீனமுற்றிருந்ததாக அந்தப் பெண் தெரிவிப்பு. எனினும் தொழற்சாலையின் அதிகாரிகள், அதனை சரியாக முகாமை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
  • பள்ளிவாயல்களில் ஆகக்கூடியது 50 பேருக்கு மாத்திரமே தொழலாம் என்பதோடு இன்னும் பல விதிமுறைகளையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டது. 
  • மினுவாங்கொடை ஆடைத் தொழிச்சாலை மூலம் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் தொற்று பரவலில் நோய் தொற்றுக்குள்ளானோர் மத்தியில் உள்ள வைரஸ் இதற்கு முன்னர் பதிவான நோயாளர்களின் வைரஸிலும் பார்க்க கூடுதலான செறிவில் (Concentrations) அமைந்திருப்பதாகவும் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் தலைமை அதிகாரி விசேட வைத்தியர் சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார். 
  • 08 ஆம் மற்றும் 09 ஆம் திகதிகளில் கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் துணை தூதரக பிரிவின் அனைத்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு. 
  • பிரதான புகையிரத பாதையில் பட்டுவத்தயில் இருந்து யத்தல்கொட வரையிலான 18 புகையிரத நிலையங்களில் இன்று (7) நள்ளிரவு 12 மணி முதல் புகையிரதங்கள் நிறுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது. பிரதான புகையிரத பாதையின் கொழும்பு முதல் அம்பேபுஸ்ஸ வரையிலான 15 புகையிரதங்கள் (30 பயணங்கள்) தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் புத்தளம் வீதியில் பேரலந்தயில் இருந்து குரண வரையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாது என தெரிவிப்பு. இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 7-10-2020 இரவு 7.40 ஆகும்போது 4459 ஆக உயர்வு. irumbuthirainews.
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 07-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 07-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 08, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.