திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 4ம் நாள் அதாவது வியாழக்கிழமை (08) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- சீனாவின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும், தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யங் ஜீச்சி அவர்களின் தலைமையிலான உயர் அதிகாரமுள்ள சீனத் தூதுக்குழுவினர் 8 ஆந் திகதியாகிய இன்று கொழும்பை வந்தடைந்தனர். உலகளாவிய கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர், தெற்காசியப் பிராந்தியத்தில் இடம்பெறும் சீனாவின் முதலாவது விஜயமாக இது அமைகிறது. எனினும் இலங்கையின் தற்போதைய சூழலில் இவ்வாறான பயண அனுமதியை இலங்கை அரசு ஏன் வழங்கியது? தற்போது இந்த விஜயம் தேவைதானா? வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லையா? என்றெல்லாம் சமூக ஊடகங்களில் மாத்திரமன்றி பாராளுமன்றத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
- கந்தளாய் வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு கந்தளாய், தெஹிஅத்தகண்டிய, மஹா ஒய வலயங்களில் கொரோனா பரவும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் இது பிரதான ஊடகங்களில் வெளியாகவில்லை.
- மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் இருந்து வவுனியாவிற்கு சிலர் சென்றதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து வவுனியா தோணிக்கல், தேக்கவத்த ஆகிய பிரதேசங்களில் சில குடும்பங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியும் பிரதான ஊடகங்களில் வெளியாகவில்லை.
- நிலைமை மோசம்... கொரோனா மரணங்கள் அதிகரிக்கலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு.
- சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரான் பிரஜை ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை, நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதியானது. குறித்த ஈரான் பிரஜை, உமா ஓயா திட்டத்தில் பணியாற்றியவர் எனத் தெரிவிப்பு.
- கடந்த 22ம் திகதி இந்தியாவின் விசாகப்பட்டிணத்தில் இருந்து, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் 60 ஊழியர்கள் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இது குறித்து விளக்கமளித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ப்ரெண்டிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள தங்களது நிறுவனத்தில் பணியாற்றிய இலங்கையர்களையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவவதற்காக, விசாகப்பட்டிணத்தில் இருந்து 3 விமான சேவைகள் இயக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. அவ்வாறு நாடுதிரும்பிய அனைவரும், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் கட்டாய தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின்கீழ், மேலும் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டதாக ப்ரெண்டிக்ஸ் நிறுவனம் தெரிவிப்பு. கடந்த மாதம் 22ஆம் திகதி இந்தியாவில் இருந்து விமானத்தின் மூலம் சிலர் வந்ததாகவும் அவர்களுக்கு சுகாதாரத்துறையினரின் உரிய வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன என்றும் மிஹின் லங்கா அறிக்கை வெளியிட்டது.
- சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாத மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றிய ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 0113456548 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
- நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய இடங்களுக்கு செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
- கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள ICBT Campus இன் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த 4 ஆம் திகதி அந்நிறுவனத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொடர்பில் சுயாதீன விசாரணையை ஆரம்பிக்குமாறு தொழில் ஆணையாளருக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தரவு.
- தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தினால் நடாத்தப்படவிருந்த கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் தெரிவிப்பு. நாளை மறுதினம் 10ம் திகதி சனிக்கிழமை முதல் நடாத்தப்படவிருந்த 2014/2015ம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் வருட முதலாம் பருவ கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகளே . தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக உதவிப் பதிவாளர் தெரிவித்துள்ளார். குறித்த பரீட்சை நடைபெறும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும், உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் தெரிவிப்பு.
- கம்பஹா பிரதேசத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக இன்று தொடக்கம் மேலதிகமாக 40 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு.
- மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. இவரது மகன் குறித்த ஆடை தொழிற்சாலையில் பணி புரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சகல போலீசாரும் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
- மறு அறிவித்தல் வரை கம்பனி பதிவாளர் திணைக்களம் மூடப்படுவதாக கம்பனி பதிவாளர் தெரிவிப்பு.
- பத்தரமுல்லை, பெலவத்தையிலுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்; ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவிப்பு. இதனால் வெளிநபர்கள் அங்கு பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மேலும் தெரிவிப்பு.
- தாதி மாணவர் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கான தகுதிகளை பரிசோதனை செய்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்காலிகமாக மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக பிரிவு தெரிவிப்பு.
- நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 அவசர நிலைமையின் காரணமாக ஓய்வூதிய செயலூக்க நேர்முகப் பரீட்சைக்காக ஓய்வூதியம் பெறுவோரை அழைப்பது மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்காக ஓய்வூதிய திணைக்களத்திற்கு வரும் அனைத்து ஓய்வூதியகாரர்களின் வருகை அக்டோபர் மாதம் 08 ஆம், 09 ஆம் மற்றும் 10 ஆம் ஆகிய திகதிகளில் இடைநிறுத்துவதற்கு ஓய்வூதிய திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக அக்டோபர் மாதம் 08ஆம், 09ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் ஓய்வூதியம் பெறும் எவரும் ஓய்வூதிய திணைக்கள வளாகத்திற்கு வரவேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிப்பு.
- மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் கொத்தணி, வெளிநாட்டில் இருந்து வருகைத்தந்தவர் அல்லது குழுவின் கவனயீனத்தால் உருவாகியிருக்கலாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சமூகத்தில் உள்ள தொற்றாளர் ஒருவரின் மூலம் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று பரவியிருக்க எந்தவித வாய்ப்பும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரச வௌியிட்டு பணியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பணியகம் நாளை (9) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மூடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், அரச அச்சிட்டு திணைக்களத்தின் பதிப்பக பகுதியும் மூடப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஜனாதிபதி செயலக கடிதத் தலைப்பையும் (Letter head) மற்றும் அததெரண லோகோவினையும் (Logo) பயன்படுத்தி ஊரடங்கு உத்தரவு தொடர்பான பொய்யான தகவல்களை வௌியிட்ட இளைஞன் கைது.
- தற்போதுள்ள நிலைமையை கட்டுப்படுத்த வேண்டுமானால் நாடு பூராகவும் குறைந்தது 48 நாட்களாவது Lockdown செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான Dr ராஜித சேனாரத்ன தெரிவிப்பு. அரசு தேவையான அளவு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை எனவும் இங்கு அவர் சுட்டிக்காட்டினார்.
- இதுவரை அறிவிக்காமல் மறைந்திருக்கும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு.
- சிலாபம் - அபகந்தவில பகுதியில் ஒருவருக்கு இன்று (08) மதியம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் வேறு ஒரு நோய்க்கு சிகிச்சைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த 06 ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் PCR பரிசோதனை செய்யப்பட்டது. குறித்த நபர் பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிய வந்த நிலையில் குறித்த தேவாலயத்தின் அருட்தந்தையர்கள் இருவர் உட்பட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றாளர் உள்ளிட்ட குழுவினர் கடந்த தினம் சுற்றுலா ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் குறித்த சுற்றுலாவில் கலந்து கொண்டவர்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா உறுதியானதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
- மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள முன்னணி நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானது. வயது 26. இவர் ஜாஎல கப்புவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
- ஊரடங்கு அமலில் உள்ள பிரதேசங்களில் நாளை (9) முதல் சதோச நிறுவனங்களை திறக்க அரசு தீர்மானம்.
- திவுலுபிட்டிய கொத்தணியில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,053 ஆக அதிகரிப்பு. அந்த வகையில் இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 8-10-2020 இரவு 11.30மணி ஆகும் போது 4488 ஆக அதிகரிப்பு.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 08-10-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
October 09, 2020
Rating:
No comments: