திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 5ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள் விற்பனை நிலையங்கள் என்பவற்றை திறக்க இன்று (9) முதல் அனுமதி.
- இம்முறை புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக சுகாதார பாதுகாப்புடன் கூடிய விசேட ரயில் பெட்டிகளை இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவிப்பு.
- கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் 5 மாத குழந்தையின் தந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தை கடந்த ஆகஸ்ட் முதல் அங்கே சிகிச்சை பெற்று வருகிறது. எனினும் தாய்க்கும் பிள்ளைக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கண்டியைச் சேர்ந்த இவர்கள் தற்காலிகமாக கொடிகாவத்த பிரதேசத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
- தாதியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹொரணை ஆதார வைத்தியசாலையின் 5 ஆம் மற்றும் 9 ஆம் வார்டுகளை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தாதியரின் கணவர் மினுவங்கொடை பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் பணி புரிவதாகவும் அவருக்கும் மற்றும் மேலும் ஒரு குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவிப்பு.
- கம்பஹா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிப்பு.
- நாட்டில் 18 பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று அவதான நிலைமை காணப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும் பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அவதானம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதன் காரணமாக பண பரிவர்த்தனையின் போது மிகவும் கவனமாக செயற்படுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பு.
- உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் அனர்த்த நிலையினால் ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்த்து அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக செயற்பாட்டு மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், பரீட்சை திணைக்களம், முப்படை மற்றும் பொலிஸார் ஆகியோரை இணைத்து இந்த மத்திய நிலைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் துரித தொலைபேசி இலக்கமான 117 மற்றும் பரீட்சை திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கமான 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் இக் காலப்பகுதியில் 24 மணித்தியாலமும் செயற்படும். பரீட்சைகள் தொடர்பில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளையும் இந்த தொலைபேசியூடாக அறிவிக்க முடியும் என தெரிவிப்பு.
- கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள நெக்ஸ்ட் (Next) ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக Covid-19 செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் அங்கு பணிபுரியும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. குறித்த பெண் சீதுவ பிரதேசத்தை சேர்ந்தவர்.
- பா.உ. ஹரீன் பெனாண்டோவின் பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக அவரது பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் நெகட்டிவ் (Negative) என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் கடந்த புதன்கிழமை தனியார் வைத்தியசாலையில் இந்த பரிசோதனையை மேற்கொண்டார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை வழங்கும் முகமாக தாமாகவே முன்வந்து இந்த பரிசோதனையை செய்திருந்தார்.
- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.
- மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் சிலருடன் சேர்ந்து கடந்த 29ஆம் திகதி முதல் 04ம் திகதி வரை கதிர்காம பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற கம்பளை, உடகல்பாய என்ற இடத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்பளை வைத்தியசாலையில் வைத்து இவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஊரடங்கு சட்டத்திற்கான அனுமதிப் பத்திரம் தொடர்பில் பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன்படி, தமது பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு சட்டத்திற்கான அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் என பொலிஸார் அறிவிப்பு.
- தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக பிரத்தியேக பரீட்சை நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகார பிரிவுகளில் பரீட்சைகளுக்கு தோன்றும் மாணவர்களுக்கு விசேட பரீட்சை மத்திய மத்திய நிலையங்களை ஏற்படுத்தி கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- நேற்றைய தினம் (08) தற்காலிகமான மூடப்பட்ட மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் பணிகள் இன்றைய தினம் (09) மீண்டும் வேறு உத்தியோகத்தர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 85 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- covid-19 தீவிரமாக பரவியுள்ள கம்பஹா மாவட்டத்தில் தபால் சேவைகளை முன்னெடுக்கும் பணிகளை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தற்காலிக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார் . அதேபோல், கொழும்பு டி ஆர் விஜயவர்த்தன மாவத்தை மத்திய தபால் பரிமாறல் வாடிக்கையாளர் சேவையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்படுகிறது.
- வடமேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. வடமேல் மாகாண பிரதம செயலாளர் பி.பீ.எம். சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.
- ஒக்டோபர் 12, 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கும் பிராந்திய அலுவலகத்திற்கும் பொது மக்கள் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
- மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களின் எண்ணிக்கை 1083 ஆக அதிகரிப்பு. அந்த வகையில் இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 9-10-2020 இரவு 9.15 ஆகும்பொழுது 4,523 ஆக அதிகரித்தது.
- irumbuthirainews.
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 09-10-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
October 10, 2020
Rating:
No comments: