திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 12ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் கொரோனா தொற்றாள் பாதிக்கப்பட்டது எவ்வாறு எனப்தனை இனம் காண்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய வெளிநாட்டவர் ஒருவரால் குறித்த தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் எனவும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவிப்பு.
- மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி நாடு முழுவதும் பரவி வருவதாகவும் அத்துடன் அரசாங்கத்தின் அலட்சியமே கொரொனா தொற்று ஏற்படக் காரணம் எனவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு.
- கட்டுநாயக்க முதலீட்டு வலயத்திற்கு அருகாமையில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு.
- கொவிட் 19 பரவல் நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன திணைக்களம் மீண்டும் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு.
- ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு.
- கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையை எந்தவொரு மாற்றமும் இன்றி நடத்திச்செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிப்பு.
- கொரோனா சிகிச்சைக்கான வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு. அத்துடன் நாளொன்றில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 ஆயிரம் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிப்பு.
- கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழமையான தினசரி நடவடிக்கைகளை நிறைவேற்ற வருகை தரும் பொது மக்களுக்கு புதிய வழிகாட்டி விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. இதற்கமைய குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி தகவல்களை பெற்றுக்கொண்டு பிராந்திய அலுவலகங்களினூடாக நிறைவேற்றிக்கொள்ளுமாறு திணைக்களத்தின் கட்டுபாட்டு பிரிவு கேட்டுக்கொண்டது.
- இலங்கை முழுவதும் கொவிட் 19 தொற்றாளர்களுக்கு உட்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும், மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாத பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பின்பற்ற வேண்டும் என பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு.
- கொழும்பு மாநகர சபையின் சகல உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம். நகரசபை அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவிப்பு.
- பொலன்னறுவை, திம்புலாகல, போகஸ்வெவ கிராமத்தை சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் கடந்த 11ம் திகதி பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி தொண்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
- கேகாலை மாவட்டத்தின் ஈரியகொல்ல, எம்புல்அம்பே, அலவத்த, பிங்ஹேன, பொரளுவ, கிரிவல்லாப்பிடிய ஆகிய 6 கிராமங்களுக்கு தற்காலிக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரம்புக்கனை பகுதியில் பெண் ஒருவருக்கு கொவிட் - 19 தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவிப்பு.
- இன்றைய தினம் 110 பேருக்கு கொவிட் 19 உறுதியாகியுள்ளது. இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் கொவிட் 19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,899 ஆக அதிகரிப்பு. இதேவேளை, கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் உள்ள தொழிற்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 180 வரையில் அதிகரிப்பு.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 16-10-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
October 18, 2020
Rating:
No comments: