பிரான்சின் இஸ்லாமிய வெறுப்பூட்டலும் கொதித்துப் போன இஸ்லாமிய உலகமும்...


#பிரான்சில் கோவிட்-19 ஐ மிஞ்சிய இஸ்லாமோபோபியா
கோவிட் 19 இன் தாக்கம் ஐரோப்பாவில் மோசமாக பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக எதிர்நோக்கியிருக்கும் குளிர் காலத்தில் இது உச்சமடையலாம் என்று எதிர்வு கூறப்பட்டு வரும் நிலையில் ஐரோப்பாவில் தற்போது மோசமாக கோவிட் 19 தாக்கம் உள்ள பிரான்ஸ் அநாவசியமான இராஜதந்திர சிக்கல் ஒன்றிற்குள் தள்ளப்பட்டுள்ளது. 
சில தினங்களுக்கு முன்னர் பிரன்சிய கேலிச்சித்திர பத்திரிகை ஒன்று இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக அன்பு வைத்துள்ள இறைத்தூதர் முஹம்மத் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) இன் கேலிச்சித்திரங்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து அந்த கேலிச்சித்திரங்களை வைத்து கல்லூரி ஒன்றில் பாடம் நடத்தியுள்ளார் ஒரு பேராசிரியர். அந்த வகுப்பில் உள்ள முஸ்லீம் மாணவர்களை மிக இழிவுபடுத்தி பேசியும் உள்ளார். தொடர்ந்து அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

#இஸ்லாமோபோபிய பிடித்த பிரான்சிய அதிபர்
குறித்த நிகழ்வுகளை தொடர்ந்து பிரன்சிய அதிபர் இமானுவேல் மக்ரோன் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பல கருத்துக்களை பகிரங்கமாக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். 
முஸ்லிம்களாக பிரான்சின் பிரிவினைவாதிகள் என்றும், மத சகிப்புத் தன்மையற்றவர்கள் என்றும் மிக மோசமாக அவரது வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. 
 
#முஸ்லீம் நாடுகளில் எதிர்வினை
அதன் தொடர்ச்சியாக முஸ்லீம் நாடுகளில் பிரான்ஸ் மீது கடும் எதிர்ப்பு அலை உருவாக ஆரம்பித்தது. துருக்கி பிரான்ஸிற்கான தனது தூதரை திருப்பி அழைத்து தூதரக உறவுகளை முறித்துக் கொண்டதுடன் பிரான்சிய அதிபர் இமானுவேல் மக்ரோன் ஐ மிகக்கடுமையான விமர்சித்தார் துருக்கி அதிபர் எர்டோகான். 
அத்துடன் தன்னுடைய உரையில் 
பிரான்சிய பொருட்களை புறக்கணிக்குமாறு முஸ்லீம் உலகிடம் பகிரங்க வேண்டுகோளை விடுத்தும் உள்ளார். பிரான்சிய அதிபரும் இதற்கு பதிலடி கொடுக்க விவகாரம் தீவிரமடைய ஆரம்பித்தது. 
குறிப்பாக மத்திய கிழக்கின் முஸ்லீம் நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் பிரான்சிய பொருட்களை அகற்ற ஆரம்பித்தன நிர்வாகங்கள். இந்த அலை மத்திய கிழக்கை தாண்டி பாக்கிஸ்தான், பங்களாதேஷ், மலேஷியா என முழு முஸ்லீம் உலகிலும் பரவ ஆரம்பித்த போது பிரான்ஸ் "பொருள் புறக்கணிப்பை கைவிட அரசுகள் மக்களிடம் கோர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் விடயம் இன்னும் தீவிரமானதே தவிர குறையவில்லை. 

#இஸ்லாத்தை ஏற்ற பிரான்சிய பணயக் கைதி
ஏன் திடீர் என்று இவ்வாறான சிக்கல் ஒன்றில் பிரான்ஸ் வலிந்து சிக்கியது என்பது ஒன்றும் புதிரல்ல. 
மாலி என்பது ஒரு ஆப்பிரிக்க நாடு. ஒரு காலத்தில் அது பிரான்சின் காலனித்துவ நாடாக இருந்தது. சுதந்திரம் அடைந்த பின்னரும் அதன் வளங்களை உறிஞ்சும் அட்டையாகவே பிரான்ஸ் இருந்து வந்தது. மாலியில் உருவான இஸ்லாமியவாத கிளர்ச்சி ஆயுதக் குழுக்கள் இதற்கு தடையாக இருந்தன. 
இவ்வாறான சூழலில் பிரான்சிய பெண் ஒருவர் மாலி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்படுகிறார். 4 ஆண்டுகள் பணயக் கைதியாக இருந்த அவர் சில நாட்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்படுகிறார். விடுதலை பெற்று பிரான்ஸ் வந்த அவர் கோலாகலமாக வரவேற்கப்பட்டதுடன், அந்த நிகழ்வின் பின் இஸ்லாம் மதத்திற்கு தாம் மாறுவதாக அந்தப் பெண் தெரிவித்தார். இது பிரான்சில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
அவர் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு அனுப்பியதாக சொல்லப்படும் கடிதம் ஒன்று மிக அவதானத்தை ஈர்த்தது. இந்தப் பின்னணியிலேயே கார்டூன் விவகாரம் பூதாகரமாக மாற்றப்படுகிறது. 

#கேலிச்சித்திரமான எர்டோகான்
இதன் அடுத்த கட்டமாக நேற்றைய தினம் துருக்கிய அதிபர் எர்டோகான் ஐ இழிவுபடுத்தும் கேலிச்சித்திரம் ஒன்றை அதே பத்திரிகை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நாட்டுத் தலைவர்களை வெளிநாட்டு ஊடகங்கள் கேலிச்சித்திரங்களாக வரைவதை நாகரிகமான செயலாக கருத முடியாது. உள்நாட்டில் அரசியல் போட்டியில் அவை வரையப்பட்ட போதிலும் வெளிநாடுகளில் அவ்வாறு வரைவதையும் அதற்கு ஆட்சியாளர்கள் முட்டுக் கொடுப்பதையும் எங்கும் காண முடியாது என்ற போதிலும் பிரான்சிய ஆட்சியாளர்கள் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அதனை சரி கண்டுள்ளனர். 
இதன் விளைவாக துருக்கி கொதித்துப் போயுள்ளது. இது சில வேளை துருக்கியில் உள்ள ஐரோப்பிய முதலீடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
துருக்கி நேட்டோவில் அங்கம் வகிக்கும் ஒரு நாடாகும். பொருளாதார ரீதியான நலிந்து போய் ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்பட்ட தேசம், இன்று ஐரோப்பாவின் மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தையுடைய நாடாக மாறியுள்ளது. இதனால் 
பல ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகள் துருக்கியில் உள்ளன. 
அதேநேரம் அண்மையில் மத்திய தரைக்கடலில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பெரும் இயற்கை வாயுப் படுக்கையின் உரிமை தொடர்பில் ஐரோப்பிய நாடுகளான கிரீஸ், சைப்ரஸ் போன்றவற்றோடு துருக்கி முரண்பாடுகளை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

#பிரான்சில் வெடித்த குண்டு
இந்த பின்னணியில் நேற்றைய தினம் பிரான்சின் நகரொன்றில் குண்டு ஒன்று வெடித்தத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
இது ஒரு பயங்கரவாத நடவடிக்கையே என்று பிரான்சின் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய வெறுப்பு செயற்பாடுகளின் பின்விளைவு இஸ்லாமிய பெயர்தாங்கிய பயங்கரவாத செயற்பாடுகளே என்பதை பிரான்ஸ் போன்ற ஒரு பலம்மிக்க இராணுவக் கட்டமைப்பைக் கொண்ட நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் விளங்காதிருக்க மாட்டார்கள். எனவே, பிரான்ஸ் வேறு ஏதோ ஒன்றை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது. 
-  fபயாஸ் MA f பரீட்.
பிரான்சின் இஸ்லாமிய வெறுப்பூட்டலும் கொதித்துப் போன இஸ்லாமிய உலகமும்... பிரான்சின் இஸ்லாமிய வெறுப்பூட்டலும் கொதித்துப் போன இஸ்லாமிய உலகமும்... Reviewed by irumbuthirai on October 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.