குவார்ட் கூட்டமும் மாறிவரும் உலக அரசியல் சமநிலையில் இலங்கையின் வகிபாகமும் - சர்வதேச அலசல்.


காலத்திற்கு காலம் உலகில் வல்லரசுகள் தோன்றி தன் ஆதிக்கத்தின் கீழ் ஏனைய நாடுகளை அடிமையாக்கி வைத்திருப்பது வாடிக்கை. 
மத்திய காலத்தின் பின்னர் உருவான காலனித்துவ யுகத்தில் ஸ்பெயின், போர்த்துக்கல் என ஆரம்பித்து பின்னர் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக பிரித்தானியா உருவானது வரலாறு. அமெரிக்க புரட்சியின் பின்னர் வீறுகொண்டெழுந்த அமெரிக்கா முதல் உலக யுத்தம் நிறைவடையும் போது பிரித்தானியாவுக்கு சமனான வல்லரசாய் மாறி இருந்தது. 
முதல் உலக யுத்தத்தில் பயங்கர அடி வாங்கி யுத்தத்தில் இருந்து விலகி, புரட்சி மூலம் சோஷலிச ராஜ்யமான உருவான சோவியத் ரஷ்யா 2ம் உலக உலக யுத்தம் நிறைவடையும் போது அமெரிக்காவுக்கு சமனான வல்லரசாய் பரிணாமம் கண்டது. ஆயுதம் , பொருளாதாரம், தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, விளையாட்டு என எல்லாத்துறையிலும் இரு நாடுகளும் சமபலத்துடன் திகழ்ந்து, 
1980 ஆம் தசாப்தத்தின் பிற்பகுதி, 90 களின் ஆரம்பத்தில் சோவியத் பல நாடுகளாக உடைந்த தகர்ந்து போனதுடன் அமெரிக்கா தனிப்பெரும் வல்லரசாய் உருவெடுத்தது. 
1990 களில் ஆட்சியில் கமியூனிசத்தை வைத்துக் கொண்டு, பொருளாதாரத்தில் லிபரல் கொள்கையும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்த சீனா அடுத்து வந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு வல்லரசாக உருவாகி உள்ளது. 
 
#சீனாவின் உத்தி# 
அமெரிக்கா தனது நலன்களுக்காக உலகம் பூராக இராணுவத் தளங்களை பேணி வருகிறது. CIA மூலம் பல்வேறு நாடுகளில் அரசியல் செய்தும் வருகிறது. அதன் மூலம் உலக அரங்கில் எல்லா நாடுகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சி செய்கிறது. 
ஆனால் சீனா சற்று வித்தியாசமாக 
இதே செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா போன்று யுத்தம் மூட்டல், தலைவர்களை கொலை செய்தல், உள்நாட்டு சதிகளை உருவாக்கி தன் சொல் கேட்கும் பொம்மை ஆட்சியாளர்களை உருவாக்கல் போன்றவாராக இல்லாமல் பொருளாதார நலன்களைக் கொண்டு நாடுகளை தம் வசப்படுத்தும் கொள்கையை கடைபிடித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்காக மூலதனப் பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு அதிக வட்டியில் கடன் வழங்கி, கடன் சுமையில் சிக்க வைத்து, தன்னுடைய இலக்குகளை அடைந்து கொள்ளும் ஒரு கொள்கையை கடைபிடித்து வருகிறது. 

 #இந்திய சீன முரண்பாடு# 
சீனாவை பொறுத்தவரை ஆசியாவில் சீனாவின் சவால் இந்தியா. சீனாவிற்கு நிகரான தொழிற்படையுடன் இருக்கும் உலகின் ஒரே நாடு. ஏற்கனவே, எல்லைப் பிரச்சினை காரணமாக இரு நாடுகளும் யுத்தம் செய்தும் உள்ளன. மறுபுறம் திபெத் மீது சீனா உரிமை கொண்டாடுவதால் சீனாவை எதிர்க்கும் திபெத் மதகுரு தலாய்லாமா உட்பட பெரும் எண்ணிக்கையானோருக்கு இந்தியா அடைக்களம் வழங்கியும் உள்ளது. 
தெற்காசியா வலயத்தில் இந்தியா எப்போதும் பெரியண்ணன்தான். அதன் நலன்களுக்கு எப்போதெல்லாம் சிக்கல் வருமோ அப்போதெல்லாம் குட்டி வைக்க இந்த அண்ணன் பின்வாங்கியதில்லை. இலங்கையின் அமெரிக்க சார்பு கொள்கை காரணமாக குட்டிய பெரிய குட்டே இலங்கையின் உள்நாட்டு போரை தூண்டி விட்டமை. 
எனினும், இந்தியாவுக்கு பாக்கிஸ்தான் நிரந்தர எதிரி. ஒருபுறம் சீனாவும், இன்னொரு புறம் பாகிஸ்தானும் எதிரிகளாக இருக்க வலயத்தின் சண்டியனான இந்தியாவின் தெற்காசிய பலத்திற்கு சவாலாகவும், இந்து சமுத்திரத்தின் இந்திய நலன்களை கட்டுப்படுத்தும் விதமாகவும் சீனா வியூகம் அமைக்க ஆரம்பித்தது. 
ஏற்கனவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கோட்பாட்டின் பாகிஸ்தானுடன் தேன்நிலவு கொண்டாடிக் கொண்டிருந்த சீனாவுக்கு, அபிவிருத்திக்கான மூலதன பற்றாக்குறையுடன் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி என்று உண்டியல் ஏந்தித் திரிந்த ஷேக் ஹசினாவும், மஹிந்த ராஜபக்ஷவும் நண்பர்களாகி போயினர். விளைவு பங்களாதேஷ், இலங்கை என்று இந்தியாவை சுற்றி தனது அரசியல், பொருளாதார, யுத்த மூலோபாய நலன்களை உருவாக்க ஆரம்பித்தது சீனா. 
எங்கே இலங்கையுடன் முரண்பட்டால் மேலும் சீனா பக்கம் இலங்கை சென்று விடுமோ என்று அஞ்சிய இந்தியா ஏட்டிக்குப் போட்டியாக முதலீடு செய்தும் பார்த்தது. ஆட்சி மாற்றத்திற்கு திரைக்கு பின்னால் இயங்கியும் பார்த்தது. சீனாவின் காய் நகர்த்தலுக்கு மத்தியில் எல்லாமே புஷ்வாணமாய் போனது. 

 #மூக்குடைபட்ட அமெரிக்கா# 
மறுபுறம் உலக அரங்கிலும் சீனா தன் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது. டிரம்ப் போன்ற முன்யோசனை அற்ற தலைவர்கள் அதை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொண்ட சிறுப்பிள்ளைத்தனமான நடத்தைகள் சீனாவை பாதிக்கவில்லை. 
இப்பின்னணியில் அத்திலாந்திக் கரையின் இருமுனைகளை இணைத்து ரஷ்யாவை கட்டுப்படுத்த நேட்டோவை உருவாக்கியது போல இந்துமாக் கடலின் இரு முனைகளை இணைத்து ஒரு இராணுவக் கூட்டை உருவாக்கி சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டம் தீட்டியது. இந்தியப் பெருங்கடலின் இந்தியாவும், பசுபிக் எல்லையின் அவுஸ்திரேலியாவும், ஜப்பானும் இணைந்து ஏனைய நாடுகளை இணைத்துக் கொண்டு முன்னெடுக்க இந்த திட்டம் தீட்டப்பட்டது. 
இதன் முதல் கூட்டம் கடந்த டிசம்பரில் புதுடில்லியில் மேற்படி 3 நாடுகளோடு அமெரிக்கவினதும் வெளிவிவகார, பாதுகாப்பு அமைச்சர்கள் பங்குபற்றும் கூட்டமாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இந்தியா சற்று பின்வாங்கியது. 
சீனாவில் ஆரம்பித்த கோவிட் 19 கொரோணா சீன பொருளாதாரத்தை சுழற்றிப் போடும் என்று இந்தியா கற்பனை பண்ணி இருக்கலாம். எனினும் மார்ச் ஆகும் போது கோவிட் 19 ஐ வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது சீனா. குறிப்பாக வுஹான் நகர் தவிர வேறு இடங்களில் பாரிய தாக்கம் ஏற்படுத்தாமல் இருக்க எல்லாம் செய்து கொண்டது சீனா. 
மறுபுறம் கோவிட் 19 இனால் சீனாவின் பொருளாதாரம் சீரழியும் வரை காத்த இந்தியா, அமெரிக்காவின் நிலை படுமோசமானது. ஏற்கனவே, 1964 ல் சீனாவுடன் யுத்தம் செய்து மூக்குடைபட்ட இந்தியா லடாக்கில் மீண்டும் அவமானப்பட்டது. எனினும், கடும் பொருளாதார நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் வலுவாக உள்ள சீனாவுடன் மேலும் பகைக்க இந்தியா கொஞ்சம் தயக்கம் காட்டியது. 
 இன்னொரு புறம் அவுஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா, சீனாவுடன் மிக நெருங்கிய வர்த்தக தொடர்புகள் உண்டு. அமெரிக்காவுடன் இணைந்து சீனாவுக்கு எதிராக உருவாகும் கூட்டு ஒன்றின் மூலம் சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டு தன்னுடைய இறைச்சி, பால் மற்றும் கனிம வளங்களுக்கான சந்தையை இழக்க அவுஸ்திரேலியா தயாராக இல்லை. 
ஜப்பானின் நிலையும் அதுவே. ஏனென்றால் உயர் தொழில்நுட்ப உற்பத்திகள் தொடர்பில் சீனாவுடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. 
இந்நிலையிலேயே குவார்ட் என்று அறியப்பட்ட மேற்படி நான்கு நாடுகளின் கூட்டம் டோக்கியோவில் நடைபெற்றது. பாதுகாப்பு ஒத்துழைப்பு என்று சொல்லிக் கொண்ட போதிலும் 4 நாடுகளினதும் வெளியுறவுக்கு பொறுப்பான அமைச்சர்கள் மட்டுமே பங்குபற்றினர். கூட்டத்தின் முடிவில் ஒரு கூட்டு அறிக்கை கூட வெளியிட இவர்களால் முடியவில்லை. தனித்தனியான அறிக்கைகள் வெளிப்பட்டிருந்தன. 
 இன்னொரு பக்கம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு மாதத்தை விட குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், டிரம்ப் தோற்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில், ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இராணுவ ஒத்துழைப்புக்களை விட பொருளாதார அழுத்தங்கள் மூலம் சீனாவை கட்டுப்படுத்தும் கொள்கையை செயற்படுத்தலாம் என்பதால் அவசரப்பட்டு இராணுவ கூட்டு ஒன்றுக்கு செல்வதை தவிர்ப்பதே நலம் என அந்த மூன்று நாடுகளும் கணக்குப் பண்ணி இருக்கலாம். அந்த அடிப்படையில் சீனாவுக்கு எதிராக பிராந்தியத்தின் 3 பெரிய பொருளாதார வல்லரசுகளையும் கொம்பு சீவி விட டிரம்ப் அரசு முயன்று தோல்வி கண்டுள்ளது என்றும் சொல்லலாம். 
எனினும், நவம்பரில் நடக்கும் அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வென்றால் இதே திட்டத்தை மீண்டும் தூசு தட்டி எடுக்கும் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை. 

#இலங்கையின் கேந்திர முக்கியத்துவம்
இக்கூட்டம் நடந்த நேரத்திலேயே சீனாவின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் இலங்கைக்கு வந்திருந்தார். அது சர்வதேச அரங்கில் முக்கிய நிகழ்வாக நோக்கப்பட்டது. அவ்வாறே அந்த விஜயத்தின் பின்னர் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை ரூஹுனு மாகம்புற துறைமுகத்தில் அவதானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். 
அதன் பின்னர் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பொம்பியோ முன்னர் திட்டமிடப்படாத ஒரு பயணமாக இலங்கைக்கும் வருவார் என்ற தகவல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. ஏற்கனவே, சீனா இலங்கைக்கு கடன் உதவி என்ற பெயரில் ஏமாற்றி வருகிறது என்ற அர்த்தம் தொனிக்கும் கருத்து ஒன்றை அமெரிக்க உயர் ஸ்தானிகர் கூறியும் இருந்தார். 
 கோவிட் 19 க்கு மருந்துகள் எதுவும் கண்டு பிடிக்க தாமதமாகும் ஒவ்வொரு கணமும் அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் அதே வேளை, கோவிட் 19 ஐ வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ள சீனா வளர்ச்சி இல்லாத போதிலும் நிலையாக நிற்க ஆரம்பிக்கும். இதன் விளைவாக அமெரிக்க, சீன அரசியல் வலுச் சமநிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். அத்தோடு கோவிட் 19 இந்திய பொருளாதாரத்தை அழிக்கலாம். 
ஆசிய அரசியல் அரங்கில் குறிப்பாக இந்து சமுத்திர அரசியலில் இந்தியாவை இலகுவாக விஞ்சும் சக்தியை சீனாவுக்கு வழங்கலாம். மேற்படி பின்னணியில் இலங்கையில் பாத்திரம் உலக அளவில் வலுவாக உணரப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் சீன-இந்திய-அமெரிக்க போட்டியில் உதைக்கப்படும் Football இலங்கை... 
-  fபயாஸ் MA fபரீட்
குவார்ட் கூட்டமும் மாறிவரும் உலக அரசியல் சமநிலையில் இலங்கையின் வகிபாகமும் - சர்வதேச அலசல். குவார்ட் கூட்டமும் மாறிவரும் உலக அரசியல் சமநிலையில் இலங்கையின் வகிபாகமும் - சர்வதேச அலசல். Reviewed by irumbuthirai on October 15, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.