திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 40ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- கொழும்பில் உள்ள மக்கள் குடியிருப்புகளில் தங்கியுள்ள நபர்கள் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காவிடின் பாரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
- தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் வசிக்கும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கு சென்று மருந்து விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு.
- Covid-19 வைரஸ் தொற்று காரணமாக வீதியில் மரணித்திருப்பதாக தெரிவித்து போலியான உடல்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு.
- கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிறைச்சாலை/ விளக்கமறியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்ற அமர்வுகளுக்காக அழைக்காமல் இருக்க நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான செயற்குழு தீர்மானித்துள்ளது. அந்தவகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் இன்றைய (13) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவில்லை.
- இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகம், அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
- வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
- இன்றும் உலங்கு வானூர்திகள் மற்றும் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி முகத்துவாரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இரு வார காலம் அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிருக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்தது.
- இதற்கு பின்னர் பதிவாகும் சிறைச்சாலை கொவிட் தொற்றாளர்களை கந்தகாடு அல்லது கல்லேல்ல சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
- தீபாவளி தினமாகிய நாளைய தினம் (14) மக்கள் ஆலயங்களில் ஒன்று கூடாதீர்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்தார்.
- ஆலயங்களுக்குள் 5 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் என இந்து கலாச்சார திணைக்களம் அறிவுப்பு.
- ஹினிதும பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 16 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஹினிதும பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட 02 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- கொவிட் 19 தொற்றாளர்களை இனங்காண்பதற்கான உடனடி ஆண்டிபயாடிக் சோதனை கருவிகள் இதுவரை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பாராளுமன்றத்தில் இன்று தெரிவிப்பு.
- தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் நபர்களை தேடுவதற்காக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரை ஈடுபடுத்தி விசேட நடைமுறையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு.
- சிறைச்சாலைகளில் பரவிவரும் கொவிட்- 19 தொற்றை தொடர்ந்தும் பரவாமல் தடுப்பதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கொவிட் 19 தடுக்கும் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உப்புல்தெனிய தெரிவிப்பு.
- மேலும் 05 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. (1) கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 83 வயது பெண் (வீட்டில் உயிரிழப்பு) (2) சிலாபம் பகுதியைச் சேர்ந்த 68 வயது ஆண் (முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழப்பு) (3) இரத்மலானை பகுதியை சேர்ந்த 69 வயது ஆண் (வீட்டிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழப்பு) (4) கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 78 வயது ஆண் (வீட்டில் உயிரிழப்பு) (5) கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 64 வயது ஆண். (வீட்டில் உயிரிழப்பு) இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்தது.
- இன்றைய தினம் மாத்திரம் 468 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 16,191 ஆக அதிகரிப்பு.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 13-11-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
November 14, 2020
Rating:
No comments: