9 மாதங்களின் பின்னர் இலங்கையைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள்


Covid-19 தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி இலங்கையின் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் கடந்த 09 மாதங்களில் எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தரவில்லை. 
மாறாக பயணிகள் பரிமாற்றம், பண்டங்களை எடுத்துச் செல்லல், வெளிநாடுகளில் பணியாற்றிய தொழிலாளர்களை அழைத்துவருதல் போன்ற நடவடிக்கைகளுக்காக மாத்திரமே கடந்த 09 மாதங்களில் விமான நிலையங்கள் பயன்படுத்தப்பட்டன. 
இதேவேளை சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் முப்பது லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டார்கள். இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் விமான நிலையங்களை மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கும் முன்னோட்ட வேலைத்திட்டம் இன்று (28) ஆரம்பமானது. 
இதற்கமைய, இன்று உக்ரேனின் கியுவ் நகரிலிருந்து 186 பயணிகளுடன் இலங்கைக்கு வந்த விமானம் 


மத்தள விமான நிலையத்தில் பிற்பகல் 2.30 மணியளல் தரை இறங்கியது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஜி.ஏ சந்ரசிறி ஆகியோரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். 
இலங்கை வந்த உக்ரேன் சுற்றுலாப் பயணிகளிடம் 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் 
PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, அவர்கள் ஹொட்டல்களில் தங்குவதற்கு முன்னரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருக்கிறார்கள். அவர்கள் 10 நாட்கள் இலங்கையில் தங்கவிருக்கிறார்கள். இந்த சுற்றுலாப் பயணிகள் கொக்கல பிரதேசத்தில் உள்ள ஹொட்டல்களில் தங்கவுள்ளதோடு, அவர்களுக்கு பொதுமக்கள் உள்ள பகுதிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது. 
 சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் முன்னோட்ட நடவடிக்கை அடுத்த மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ரஷ்ய பிராந்தியத்தில் உள்ள நாடுகளிலிருந்து 2,580 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரவிருப்பதாக மத்தள விமான நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
(அ.த.தி)
9 மாதங்களின் பின்னர் இலங்கையைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் 9 மாதங்களின் பின்னர் இலங்கையைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.