கொரியாவில் வேலை வாய்ப்புக்களை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஊடக வெளியீடு
கொரியாவில் வேலை வாய்ப்புக்களை மீளத் திறப்பதற்கு வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன எதிர்பார்ப்பு
இலங்கை மற்றும் கொரியக் குடியரசில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சார்ந்த ஒத்துழைப்புக்களை புதுப்பித்தல் தொடர்பான விடயங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் கௌரவ. தினேஷ் குணவர்தன இலங்கையில் உள்ள கொரியத் தூதுவர் திரு. வூன்ஜின் ஜியோங் அவர்களுடன் 2021 ஜனவரி 04ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடினார்.
கொரியக் குடியரசில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதிலான கொரியக் குடியரசின் பங்காண்மையைப் பாராட்டிய அதே வேளையில், இலங்கை மற்றும் கொரியக் குடியரசில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 தொற்று நிலைமை காரணமாக தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தொழில்களுக்காக இலங்கையில் இருந்து புதிய பணியாளர்களைப் பெற்றுக் கொள்வதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கொரிய அரசாங்கத்தின் உதவியை வெளிநாட்டு அமைச்சர் கோரினார்.
தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையிலிருந்து கொரியாவிற்கான வேலைவாய்ப்பை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கான நோக்கத்துடன் கொரிய அதிகாரிகளுடன் இணைந்து, சுகாதார மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார்.
கொரியக் குடியரசின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு இலங்கை ஊழியர்கள் பெரும் பங்களிப்புக்களை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய தூதுவர் ஜியோங், சவால்களை சமாளிப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்காக தனது முழுமையான ஒத்துழைப்பை வெளிப்படுத்தினார்.
இந்தக் கலந்துரையாடல்களின் போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரியங்கர ஜயரத்ன, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் திரு. கமல் ரத்வத்த, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல், மற்றும் வெளிநாட்டு அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு அமைச்சு.
கொழும்பு.
2021 ஜனவரி 08.
(அரசாங்க தகவல் திணைக்களம் )
மீள ஆரம்பமாகும் கொரியா வேலைவாய்ப்புக்கள்..
Reviewed by irumbuthirai
on
January 08, 2021
Rating:
No comments: