முடிவுக்கு வந்தது யாழ் பல்கலை உண்ணாவிரதம்: நடந்தது என்ன?


யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த வெள்ளிக்கிழமை (08) இரவு இடித்தழிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்று இரவு முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு சனிக்கிழமை காலை முதல் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டங்களையும் ஆரம்பித்தனர். 
 இதற்கு தமிழக முதல்வர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள், வெளிநாடுகளின் பிரதிநிதிகள் பலரும் தமது கண்டனங்களை வெளிப்படுத்தி வந்ததுடன், புலம்பெயர் நாடுகளில் உள்ளோரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 
இதேவேளை நேற்று(11) திங்கட்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் 
ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம் தரப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது பூரண ஆதரவை தெரிவித்தனர். 
 இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை நேற்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் சி. ஶ்ரீ சற்குணராசா மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியைக் கட்டுவதற்கு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார். 
 அதன்படி காலை 7.00 மணியளவில் மாணவர்களுடன் பல்கலைக்கழத்தினுள் செல்ல முற்பட்ட போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் (STF) தடுத்து நிறுத்தினர். அதனையும் மீறி துணைவேந்தர் மாணவர்களை அழைத்துக்கொண்டு வளாகத்தினுள் சென்று ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார். 
 பின்னர் நினைவு தூபி இருந்த இடத்திற்கு மாணவர்களுடன் 
துணைவேந்தர் சென்ற போது அங்கு வந்திருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தடுத்து நிறுத்தினார். அதன் போது துணைவேந்தர் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம், "நாம் தற்போது எந்த கட்டுமான பணிகளிலும் ஈடுபடவில்லை. தூபி இடித்தழிக்கப்பட்ட இடத்தில் கல் நடப் போகிறோம். என்னுடைய மாணவர்கள் 03 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை முடித்து வைக்க வேண்டிய நிலையில் உள்ளேன். எம்மை தடுக்காதீர்கள் என கூறினார். 
 அதனை அடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி அளித்தார். நினைவிடத்திற்கு மாணவர்களுடன் சென்ற துணைவேந்தர், நினைவு கல்லினை நாட்டினார். 
 பின்னர் மாணவர்கள் பல்கலை வளாகத்தினுள் இருந்து வெளியேற முற்பட்ட போது . பல்கலை கழகத்தினுள் இருந்த பொலிஸார் நினைவிடத்திற்கு சென்று வந்த மாணவர்களின் விபரங்களை பதிய முற்பட்டனர். அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, தாம் கொரோனா நோய் தொற்று காரணமாக தான் பதிவுகளை மேற்கொள்கிறோம் என தெரிவித்தனர். 
ஆனால் தமது விபரங்களை பல்கலை வளாகத்தினுள் நின்று பொலிஸார் பதிவதனை மாணவர்கள் எதிர்த்தனர். அவ்வேளை அவ்விடத்திற்கு வந்த துணைவேந்தர் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மாணவர்களை வெளியேற விடுமாறு பணித்தனர். அதனை அடுத்து மாணவர்களை வெளியற பொலிஸார் அனுமதித்தனர். 
உண்ணாவிரத இடத்திற்கு வந்த மாணவர்களுக்கு துணைவேந்தர் கஞ்சி வழங்கி போராட்டத்தை முடித்து வைத்தார்.
Source: தினகரன்.
முடிவுக்கு வந்தது யாழ் பல்கலை உண்ணாவிரதம்: நடந்தது என்ன? முடிவுக்கு வந்தது யாழ் பல்கலை உண்ணாவிரதம்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.