எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் ஆரம்பமான ஒலிம்பிக் போட்டிகள்: முக்கிய தகவல்கள்...
உலகின் மிகப்பெரும் விளையாட்டு போட்டி நிகழ்வான ஒலிம்பிக் போட்டிகள் 04 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கிறது.
அந்த வகையில் கடந்த வருடம் (2020) ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் பரவல் காரணமாக இந்த வருடம் நடைபெறுகிறது.
இந்த வருடமும் அங்கு போட்டிகளை நடத்த வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் ஜப்பான் அரசும் ஒலிம்பிக் கமிட்டியும் உறுதியாக இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து இந்த போட்டிகளை நடத்துகிறது.
இதன் தொடக்க விழா நேற்று(23) ஜப்பான், டோக்கியோ தேசிய விளையாட்டு அரங்கில் இலங்கை நேரப்படி மாலை 04:30 மணிக்கு (ஜப்பான் நேரம் இரவு 08.00மணி) ஆரம்பமானது.
தொடக்க விழாவானது உலக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என சுமார் 1000 பேருக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இலங்கை சார்பாக விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார்.
இம்முறை ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான சில முக்கிய தகவல்களை இங்கு தருகிறோம்.
இது 32வது ஒலிம்பிக்.
ஜப்பானில் நடைபெறும் இரண்டாவது சந்தர்ப்பம். இதற்கு முன்னர் 1964இல் முதல்முறையாக ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது.
33 வகையான விளையாட்டுகளில் 339 போட்டிகள் நடைபெறுகின்றன.
205 நாடுகளை சேர்ந்த 11,326 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
ஜூலை 23 தொடங்கி ஆகஸ்ட் 8 நிறைவு பெறுகிறது.
உணர்வுகளால் ஒன்றிணைவோம் (United by Emotions) என்பது இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கான குறிக்கோள் வாசகம் (Motto) ஆகும்.
இம்முறை புதிதாக 5 விளையாட்டுக்கள் இணைக்கப்பட்டுள்ளன. (Baseball / Softball, Karate, Skateboarding, Sport Climbing & Surfing)
ஜப்பானில் அவசரநிலை பிரகடனம் செய்து பார்வையாளர்கள் அனுமதியின்றி இம்முறை போட்டிகள் நடைபெறுவது முக்கிய விடயமாகும்.
இலங்கையில் இருந்து இம்முறை 9 வீர வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர்.
இம்முறை போட்டிகளில் முதலாவது தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்முறை போட்டிகளில் பட்மின்டன் தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்ற பசறை தமிழ் மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) உடற்கல்வி ஆசிரியை மாரிமுத்து அகல்யா ஜப்பானுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் வரலாற்றிலேயே தொழில்நுட்ப அதிகாரியாக கடமையாற்ற தெரிவான முதல் இலங்கைத் தமிழர் இவராவார்.
அதேபோல் குத்துச்சண்டை போட்டிகளுக்கான பெண் நடுவராக இலங்கையைச் சேர்ந்த நெல்கா ஷிரோமலாவும் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மெய்வல்லுனர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறுவது 1928ல் ஆரம்பமானது.
1948 இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது இலங்கைக்கு முதலாவது பதக்கம் கிடைத்தது. 400M தடைதாண்டலில் Duncan White என்பவர் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.
அதன்பின்னர் 2000 ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 M ஓட்டப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று சுசந்திகா மீண்டும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.
எதிர்ப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் ஆரம்பமான ஒலிம்பிக் போட்டிகள்: முக்கிய தகவல்கள்...
Reviewed by irumbuthirai
on
July 24, 2021
Rating:
No comments: