மனம் பதற்றமாகி இதயத்துடிப்பு அதிகரிக்கும் போது என்ன செய்ய வேண்டும்?


சென்னையைச் சேர்ந்த 30 வயதான குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது இதயத்தில் கோளாறு இருக்கலாம் என்று ஒரு மாதத்துக்குள்ளாக 10 முறை மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று வந்திருக்கிறார். 

ஆனால் அவருக்கு இதயத்தில் எந்த விதமான கோளாறும் இல்லை என ஒவ்வொரு முறையும் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் திருப்பி அனுப்பி விட்டனர். இந்தப் பிரச்னையைக் கூறிக் கொண்டு மருத்துவமனைக்கு வரக்கூடாது என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறனர். 

உண்மையில் அவருக்கு என்னதான் பிரச்னை? "அவருக்கு ஏற்பட்டது உடல் கோளாறு இல்லை. Anxiety எனப்படும் மனப் பதற்றம்தான். அனைத்தையும் முயற்சி செய்து பார்த்துவிட்டு, உடல் பிரச்னை ஏதும் இல்லை என்று தெரிந்த பிறகு கடைசியாக தயக்கதுடன் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார்" என்கிறார் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன். 
 குமார் நல்ல வேலையில் இருப்பவர். திடீரென ஓர் இரவில் படபடப்புடன், இதயத்துடிப்பு அதிகரித்தது. அதிகமாக வியர்த்தது. சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்ட உறவினர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததும் அவரது நினைவில் இருந்தது. அதனால் தமக்கும் இதயத்தில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்று எண்ணி மருத்துவமனையில் சேர்ந்தார். இப்படிப் பல முறை நடந்திருக்கிறது ஆனால் ஒரு முறைகூட இதயத்தில் கோளாறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

அறிகுறிகளைப் கண்டு அஞ்சியதால் ஏற்பட்ட மனப் பதற்றம் என்கிறார் யாமினி கண்ணப்பன். புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் 5 முதல் 7 சதவிகிதம் பேருக்கு மனப் பதற்றம் இருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு தங்களுக்கு இது இருக்கிறது என்பதே தெரியாது என்கிறார்கள் நிபுணர்கள். 


மனப் பதற்றம் (ANXIETY) என்பது என்ன? 
எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் பயம் வரும். சிலருக்கு குறிப்பிட்ட சூழலில் மட்டும் பயம் வந்து போகும். அதுவே நீடித்திருந்தால் நோயாக மாறுகிறது என மனநோய் ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.  

"மனப் பதற்றம் என்பது ஒரு வகையான பயம். எந்த வகையான எதிர்மறையான உணர்வும் உடனடியாக நோயாகிவிடாது. மனதில் சிறிதளவு பயம் இருப்பதால் பிரச்னையில்லை. உண்மையில் அத்தகைய பயம் திறனை மேம்படுத்துவதற்கும் வெளிப்படுத்துவற்கும் உதவும். 

சிலருக்கு பயம் அதிகமாகி . எப்போதும் பயத்திலேயே இருப்பார்கள் . வருங்காலத்தைப் பற்றியோ, அல்லது ஏதோ விபரீதம் நடந்துவிடும் என்றோ எப்போதும் அச்ச எண்ணத்திலேயே இருந்தால் அதை நோயாகக் கருத வேண்டும். இதுதான் மனப் பதற்றக் கோளாறு" 
நண்பர்களுடன் பழகுவதற்குத் தயங்குவது, வகுப்பறையில் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு அச்சம், நேர்காணல்களின் போது ஏற்படும் பயம் போன்றவையெல்லாம் அன்றாட வாழ்கையை நடத்துவதிலேயே சிக்கல் ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தால் அது மனப் பதற்றக் கோளாறின் அறிகுறிகளாகவே பட்டியலிடப்படுகின்றன. 

அதாவது சாதாரண பயம், பீதியாக மாறி இயல்பு வாழ்க்கையை சிதைக்க முற்படும்போது அதற்கு சிகிச்சை தேவைப்படுகிறது. OCD என்று கூறப்படும் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோயும் இதன் மனப் பதற்றத்தின் ஒரு பிரிவாகவே வரையறுக்கப்படுகிறது. 

"கொரோனா காலத்தில் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோய் அதிகரித்திருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சம் எல்லோருக்கும் இருந்தாலும். சிலருக்கு இது அதிகமாகி அடிக்கடி கைகழுவுவது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். இது ஓசியிடின் அறிகுறி" என்கிறார் யாமின் கண்ணப்பன். 

மனப் பதற்றத்தின் அறிகுறிகள் ஆன்சைட்டி என்பது பெரும்பாலும் மனதளவிலானது. ஆனால் இதன் அறிகுறிகள் அனைத்தும் உடல் வழியாகவே தெரிகின்றன. உடல் உறுப்புகளில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பது போன்ற மாயை ஏற்படுகிறது. இதனால் பலர் மன நல மருத்துவர்களை அணுகுவதற்குப் பதிலாக வேறு உடல்நலக் கோளாறுகளுக்கான மருத்துவர்களை நாடுகிறார்கள். 

 "உச்சி முதல் பாதம் வரைக்கும் பல்வேறு வகையான அறிகுறிகள் மனப் பதற்றத்தால் ஏற்படுகின்றன. இதயம் படபடப்பாக அடித்துக் கொள்கிறது என்று பெரும்பாலும் கூறுவார்கள். அடிக்கடி வியர்த்துக் கொட்டுவது, உள்ளங்கை மற்றும் பாதம் ஜில்லெனக் குளிர்ச்சியாகி விடுவது, அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுவது, அதிகபட்ச உடல் சோர்வு போன்ற உடல் ரீதியான அறிகுறிகள் மனப் பதற்றத்தால் ஏற்படும். 

ஆனால் இதயப் படபடப்புக்கு இதய நிபுணரையும், வயிற்றுப் பிரச்னைக்கு அதற்கான மருத்துவரையும் பார்க்கிறார்கள். ஆனால் அங்கெல்லாம் சரியாகவில்லை என்ற பிறகுதான் மனநல மருத்துவரை அணுகுகிறார்கள்." 

அதிகப்படியான தகவல்கள் கிடைப்பதும் மனப் பதற்றம் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. இதயக் கோளாறு என்று கருதி அடிக்கடி தீவிரச் சிகிச்சைப் பிரிவை நாடிய குமாரும் இதையேதான் செய்திருக்கிறார். 

இதயம் படபடப்பதை உணர்ந்த பிறகு அதிகமாக உடற்பயிற்சி செய்வது, கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது, இதயத் துடிப்பை அளக்கும் உபகரணங்களை வாங்குவது என எண்ணம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார். 

கூகுளில் இதைப் பற்றியே தேடியிருக்கிறார். கோளாறு ஒன்றுமில்லை என்று மருத்துவர்கள் கூறிய பிறகும் தாமாகவே சில இதயப் பரிசோதனைகளையும் செய்து பார்த்திருக்கிறார். 

 தனக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளுக்கு என்ன காரணம் என்று இணையத்தில் தேடி தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுதால், அதுவே அவர்களைப் பீதியடையச் செய்கிறது. மாரடைப்புக்கு உள்ள அனைத்து அறிகுறிகளும் தமக்கு இருப்பதாகவே அவர்கள் எண்ணிக் கொள்வார்கள். பின்னர் அவர்களே அதற்கான சிகிச்சையை முடிவு செய்து கொண்டு அதை மருத்துவர்களிடமும் வலியுறுத்துகின்றனர்" என்கிறார் யாமினி கண்ணப்பன். 


 மனப் பதற்றம் ஏன் வருகிறது? 
குமாரைப் பொறுத்தவரை அவருக்கு திருமணமாகி புதிய வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் வயது. இதயக் கோளாறால் உறவினர் இறந்ததை சமீபத்தில் பார்த்திருக்கிறார். 

அதனால் தமக்கும் அதுபோன்ற நிலைமை தமக்கும் வந்துவிடக்கூடாது என்ற அதிகப்படியான உடல்நல அக்கறையும் கவனமும்தான் அவருக்கு மனப் பதற்றக் கோளாறை ஏற்படுத்தியிருக்கிறது. 

"மனப் பதற்றம் என்பது உடல் சார்ந்ததாகவும் இருக்கலாம். ஏனென்றால் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் தொடர்ந்து நீடித்திருப்பதால் அவை மனப் பதற்றத்துக்கு காரணமாக இருக்கலாம்." என்கிறார் யாமினி கண்ணப்பன். 

எல்லா வயதினருக்கும் மனப் பதற்றக் கோளாறு வருகிறது. ஆனால் வயதானோருக்கு இதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். 


சிகிச்சை என்ன? 

மனப் பதற்றக் கோளாறால் பாதிக்கப்படுவோருக்கு மருந்துகள் மற்றும் ஆலோசனைகள் ஆகிய இரண்டுமே வழங்கப்படுகின்றன. 

மன நோய்க்கு மருந்துகள் ஏன் தேவைப்படுகிறது என்றால் மூளையில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்களைச் சமன் படுத்துவதற்காகத்தான். இவற்றை மருந்துகள் மூலமாகவே சரி செய்ய முடியும்" 

"எல்லோருக்குமே மனப் பதற்றம் இருக்கும். முக்கியமான அல்லது புதிய நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது இது ஏற்படும். ஆனால் சிறிது நேரத்துக்குள் சரியாகிவிடும். 

சிலருக்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றமானது எப்போதும் இயல்பைவிட அதிமாக இருக்கும். அவருக்கு உரிய சிகிச்சை தேவைப்படுகிறது" 

 மனப் பதற்றம் அதிகமாக இருந்தால் அது பல்வேறு உடல் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைகிறது. 

"பதற்றத்தின்போது உருவாகும் கார்டிசால் என்ற ஹார்மோன் தொடர்ந்து அதிகமாக இருப்பது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நீண்ட காலமாக இதைக் கவனிக்காமல் விட்டால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், வயிற்றுக் கோளாறு என பலவகையான சிக்கல் ஏற்படும். உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பையே குலைத்துவிடும் ஆபத்தும் உண்டு" என்கிறார் யாமினி கண்ணப்பன். 

மனப் பதற்றம் வேலையிலும், குடும்ப வாழ்க்கையும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தயங்குவார்கள். தங்களது உறவுகளைத் தவிரித்து உலகத்தைச் சுருக்கிக் கொள்வார்கள் என்கிறார் அவர். 


பதற்றத்தைக் குறைக்க எளிய வழி 
மனப் பதற்றம் அதிகரிப்பதாக உணர்ந்த மாத்திரத்தில் அதை உடனடியாகக் கையாளுவதற்கு சில எளிமையான வழிகள் இருப்பதாகக் கூறுகிறார் யாமினி கண்ணப்பன். இதன் மூலம் பதற்றத்தின்போது ஏற்படும் விபரீதச் சிந்தனைகளை உடைக்க முடியும் என்கிறார் அவர். 

 இதை Grounding Technique கூறுவோம். 5 4 3 2 1 என்றும் கூறலாம். அதாவது இயல்பு நிலைக்குத் திரும்புவது. இதில் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என ஐம்புலன்களையும் பயன்படுத்த வேண்டும். முதலில் உங்களை சுற்றியுள்ள 5 பொருள்களைப் பார்க்க வேண்டும். அது எதிரேயுள்ள தொலைக்காட்சியாகவோ, சட்டப் பையில் உள்ள பேனாவாகவோ இருக்கலாம். அடுத்து அருகேயுள்ள நான்கு பொருள்களை தொட வேண்டும். அது காலுக்கு அடியில் இருக்கும் தரையாகவோ, அருகேயுள்ள மேஜையாகவோ இருக்கலாம். அடுத்து மூன்று ஒலிகளைக் கேட்ட வேண்டும். பின்னர் இரு வாசனைகளை நுகர வேண்டும். ஐந்தாவதாக ஒரு சுவையை உணர வேண்டும். அது நீங்கள் அப்போதுதான் குடித்து முடித்திருந்த தேநீரின் சுவையாகவும் இருக்கலாம். இப்போது நீங்கள் பதற்றம் தணிந்து ஓரளவு இயல்பு நிலைக்கு வந்திருப்பீர்கள்" 

இன்னும் எளிமையாக ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு அதிலேயே மனதைக் குவிப்பதன் மூலமாகவும் மனப் பதற்றத்தைக் குறைக்க முடியும் என்கிறார் மருத்துவர் யாமினி கண்ணப்பன். 

சில வகையான மனப் பயிற்சிகள், உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்கள் போன்றவற்றையும் அவர் பரிந்துரைக்கிறார். 

மதுக்குடிப்பது, சிகரெட் புகைப்பது போன்வற்றின் மூலம் மனம் லேசாகிறது என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் அவை அனைத்தும் போலியானவை, உடலிலும் மனதிலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்கிறார் மருத்துவர். "மதுவும் புகையும் முதலில் மனதை சாந்தப்படுத்துவது போலத் தோன்றும். ஆனால் அது மாயை"
Source: bbc.com
நன்றி: பிபிசிதமிழ்.
மனம் பதற்றமாகி இதயத்துடிப்பு அதிகரிக்கும் போது என்ன செய்ய வேண்டும்? மனம் பதற்றமாகி இதயத்துடிப்பு அதிகரிக்கும் போது என்ன செய்ய வேண்டும்? Reviewed by irumbuthirai on August 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.