அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிளவுபடுகிறதா?

 

அதிபர் சங்கங்களுக்கும் ஆசிரியர் சங்கங்களுக்குமிடையில் பிளவு ஏற்படும் என்ற நிலை உருவாகுவதாக தெரிகிறது. 
 
நேற்றைய தினம் (27) கல்வி அமைச்சரை சந்திப்பதற்காக பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 6 மணி வரை காத்திருந்தும் சந்திப்பதற்கான அவகாசம் கிடைக்கவில்லை என இலங்கை தரப்படுத்தல் அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. 
 
இது தொடர்பில் குறித்த சங்கம் தெரிவிக்கையில், 
 
கல்வியமைச்சர் ஆசிரியர் சங்கங்களை சந்தித்துள்ளார். ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான சம்பளம் ஒரே படிமுறையில் உள்வாங்கப்படுவது பிரச்சினையில்லை. ஆனால் அவர்களுக்கு மேலதிக கொடுப்பனவை மாத்திரம் கொடுக்கலாம் என்று ஆசிரியர் சங்கங்கள் அமைச்சரிடம் கூறியதாக தெரிய வருகிறது. 
 
அவர்கள் எவ்வாறு அப்படி சொல்லலாம்? அமைச்சரவை உப குழு கூட அதிபர்களுக்கு உரிய நிலை வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பது சந்தோஷப்பட வேண்டிய விடயம். 
 
அவ்வாறு இருக்கையில் இந்த ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த சிலர் எவ்வாறு அமைச்சரிடம் இப்படி சொல்லலாம்? அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரே சம்பள அளவுத்திட்டம் சரியா? 
 
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சருக்கு எழுத்து மூலம் நாம் அறிவித்தும் எமக்கு இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 
 
இந்த தொழிற்சங்க போராட்டங்களில் எமது பங்கு உயர்ந்த அளவில் இருந்தது. எமக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் இந்த அரசாங்கத்திற்கு ஆசிரியர் சங்கங்களுக்கும் நாம் யார் என்று காட்ட வேண்டிவரும். 
 
இன்று(நேற்று-27)  எமது இலங்கை தரப்படுத்தல் அதிபர் சங்கம் மற்றும் ஏனைய அதிபர் சங்கங்களும் வருகை தந்துள்ளன. ஆனால் இதுவரை காத்திருந்தும் எமக்கு சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. 
 
இதற்கு முன்னர் இருந்த அமைச்சர்களுக்கும் அதிபர்களையும் ஆசிரியர்களையும் பிரித்தறிய முடியாத பிரச்சினை இருந்தது அது இந்த அமைச்சருக்கும் இருப்பதாக தெரிகிறது. 
 
இது தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக எமது சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள் கூடி முடிவெடுக்க இருக்கிறோம் என்று தெரிவித்தனர். 
 
அமைச்சருடனான சந்திப்பு சாதகமாக அமைந்தது என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன. எனவே இவர்கள் எதிர்பார்க்கும் வகையில் சாதகமான தீர்வு கிடைத்தால் அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இருந்து விலகுவார்கள். இந்நிலையில் உங்கள் முடிவு எப்படி? என ஊடகவியலாளர் கேட்டபோது, 
 
இது தொடர்பில் இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. எமது செயற்குழு உறுப்பினர்கள் கூடி முடிவெடுக்க இருக்கிறோம் என தெரிவித்தனர்.
அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிளவுபடுகிறதா? அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிளவுபடுகிறதா? Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.