ஆப்கிஸ்தானில் தலிபான்கள் தலைநகரம் காபுல் மற்றும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை முழுவதும் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கப் படை நாட்டை விட்டு வெளியேறியதும் இந்த தாக்குதல்களை தொடங்கிய தலிபான்கள் வெறும் 10 நாட்களுக்குள் தலைநகருக்குள் நுழைந்து ஜனாதிபதி
மாளிகையையும் கைப்பற்றியுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
உப ஜனாதிபதி அம்ருல்லா சாலே
மற்றும் மூத்த தலைவர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும் காபூலில் இயங்கி வந்த அமெரிக்க தூதரகமும் தற்காலிகமாக விமான நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. விமான நிலைய பாதுகாப்பை தற்போது நேட்டோ படை மற்றும் எஞ்சிய அமெரிக்க துருப்புகள் கவனித்து வருகின்றனர்.
நாட்டை விட்டு வெளியேறும் தமது திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் தலிபான்கள் தலையிட்டால் மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல மாகாணங்களின் ஆளுநர்களும் தமது அதிகாரங்களை தலிபான்களிடம் ஒப்படைத்துவிட்டனர்.
இதனிடையே காபூலில் உள்ள சிறைச்சாலைக்கு அதிரடியாக நுழைந்த தலிபான்கள் தமது சக போராளிகளை விடுதலை செய்துள்ளனர்.
தலைநகரில் உள்ள ராணுவ சோதனைச் சாவடிகளில் இராணுவத்தினர் பின் வாங்கிச் சென்றதாகவும் தலைநகருக்குள் கொள்ளை மற்றும் சூரையாடல்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக தமது போராளிகளை தலைநகருக்குள் அனுப்பியதாகவும் தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்க கூடாது எனவும் அவர்கள் விரும்பியவாறு தமது
உடமைகளோடு வெளியேறிச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் தலிபான்களுக்கு உயர்பீடம் கட்டளை பிறப்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிந்திக் கிடைத்த செய்திகளின்படி காபூல் விமான நிலையத்தில் விமானங்கள் வருகை மற்றும் புறப்படுகை என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவ விமானங்கள் மாத்திரமே தற்பொழுது செயல்பட முடியும் எனவும் நேட்டோ அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய தலிபான்கள்! நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி!! (முழுமையான அப்டேட்)
Reviewed by irumbuthirai
on
August 15, 2021
Rating:

No comments: