கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள் நாட்டின் பெயரையும் 'ஆப்கான் இஸ்லாமிய எமிரேட்' என்று அறிவித்தனர்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது அரசையும் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். அதில் மூத்த தலைவர்கள் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக முன்னின்று தாக்குதல் நடத்தியவர்களும் அடங்குவர். குறித்த அரசில் பெண்களுக்கு இடம் வழங்கப்படாமையினால் பெண்களின் ஆர்ப்பாட்டமும் அண்மையில் நடைபெற்றது.
இந்நிலையில் ஆப்கானின் புதிய அரசை கட்டியெழுப்புவது சம்பந்தமாக மூத்த தலைவர்களிடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான் இயக்கத்தின் இணை நிறுவனரும் புதிய அரசின் துணைப் பிரதமரும் மூத்த தலைவருமான முல்லா அப்துல் கனி பராதருக்கும்
புதிய அரசின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சரான கலீலுர் ரஹ்மானுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கலீலுர் ரஹ்மான் ஹக்கானி குழுவைச் சேர்ந்தவர்.
இடைக்கால அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பவர்கள் மீது பராதருக்கு அதிருப்தி ஏற்பட்டதே வாக்குவாதத்திற்கான காரணமென தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் பெற்ற வெற்றிக்கு யார் காரணம் என்ற விடயத்தில் தொடங்கி பிளவுகள் விரிவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தன்னைப் போன்று ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமென பராதர் விரும்புகிறார். ஆனால் ஹக்கானி குழுவினர் இதை ஏற்கவில்லை. சண்டைகள் மூலமாகவே
இந்த வெற்றி சாத்தியமானது என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் 2020இல் தொலைபேசி மூலமாக முதன் முதலில் பேசிய தலிபான் தலைவர் பராதர் ஆவார். அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக அமெரிக்காவுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் போது தலிபான்கள் சார்பாக கையெழுத்திட்டவரும் அவரே.
இதேவேளை கடந்த சில நாட்களாக பராதரை பொதுவெளியில் காண முடியாமையினால் குழப்பம் இன்னும் அதிகரித்துள்ளது.
ஆனால் அவர் பேசுவது போன்று ஒலிப்பதிவு ஒன்றை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். "இந்த நேரத்தில் நான் எங்கிருந்தாலும் நாங்கள் அனைவரும் நலமாகவே இருக்கிறோம்" என்று அவர் அந்த ஒலிப்பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது உண்மையிலேயே அவரா என்று உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அவர் தலிபான்களின் உச்ச தலைவரை பார்ப்பதற்காக கந்தஹார் சென்றிருக்கிறார் என்றும்
தலிபான்களின் இன்னுமொரு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இவ்வாறான முரண்பட்ட தகவல்களால் இன்னும் சந்தேகங்கள் அதிகரிக்கின்றன. இவ்வாறு சந்தேகங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் உண்டு.
தலிபான் அமைப்பை உருவாக்கிய முல்லா ஒமரின் மரணத்தை இரண்டு ஆண்டுகள் வரை மறைத்து வந்ததாகவும் அவரது பெயரிலேயே அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகும் தலிபான்கள் பின்னர் ஒப்புக் கொண்டமையே காரணமாகும்.
தலிபான் தலைவர்களிடையே மோதல்: அதிபர் மாளிகையில் குழப்பம்: காணாமல் போன மூத்த தலைவர்!
Reviewed by Irumbu Thirai News
on
September 15, 2021
Rating:
No comments: