பிரதமருடனான சந்திப்பில் நடந்தது என்ன? அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வருமா? (முழு விபரம் இணைப்பு)


அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் இன்றைய தினம்(12) தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. 
 
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களை இங்கு தருகிறோம். 
 
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில், 
 
இன்று பிரதமருடனான சந்திப்பு நண்பகல் 12:30 மணி அளவில் ஆரம்பித்து சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக இடம்பெற்றது. இதில் அமைச்சர்கள் சிலரும் அமைச்சுக்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 
 
அன்று முதல் இன்று வரை எமது கோரிக்கை என்னவென்றால் அமைச்சரவை உப குழுவின் தீர்வை சுபோதினி அறிக்கையில் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டு அதை ஒரே தடவையில் தர வேண்டும் என்பதாகும். நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்று கட்டங்களாக செலுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய பேச்சுவார்த்தையில் பிரதமர் பல தரப்பினருடன் பேசியபின் கடைசியாக மூன்று கட்டங்களாக தருவதை இரு கட்டங்களாக தருவதாகச் சொன்னார். 
 
அதாவது முதலாவது கட்டம் அடுத்த வருடம் ஜனவரியிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் 2023 ஜனவரியிலும் தருவதாக தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இரு கட்டங்களிலும் சமமான அதிகரிப்பு கிடைக்காது. முதலாம் கட்டத்தில் மூன்றில் ஒரு (1/3) பங்கு அதிகரிப்பும் இரண்டாம் கட்டத்தின் போது மூன்றில் இரண்டு (2/3) பங்கு அதிகரிப்பும் கிடைக்கும். 
 
இது தொடர்பில் நாம் எமது முடிவை அறிவிக்கவில்லை. எமது தொழிற்சங்க ஒன்றியத்தில் அங்கம்வகிக்கும் சகல தொழிற்சங்கங்களுடனும் நாளைய தினம் பேச்சு வார்த்தை நடத்தி நாளையதினம் முடிவு அறிவிக்கப்படும். அதுவரை எமது தொழிற்சங்க நடவடிக்கைகள் அவ்வாறே தொடரும் என தெரிவித்தார். 
 
 
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜெயசிங்க கருத்து தெரிவிக்கையில், 
 
இன்று பேச்சுவார்த்தைக்கு பகல் 12:00 மணிக்கு நாம் அழைக்கப்பட்டிருந்தோம். அந்த வகையில் 12:30க்கு பேச்சுவார்த்தை தொடங்கி சுமார் 03 மணித்தியாலம் வரையில் நீடித்தது. 24 வருடங்களாக எமக்கு மறுக்கப்பட்டிருந்த சம்பள முரண்பாடு தொடர்பில் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். 
 
அமைச்சரவை உப குழுவின் சிபாரிசை 3 கட்டங்களாக வழங்க நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாம் அவர்களுக்கு தொடர்ச்சியாக சொன்னோம் அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானத்தை அவ்வாறே ஏற்றுக்கொள்வதென்றால் நாம் இந்த பேச்சுவார்த்தைக்கு வந்ததில் எந்த அர்த்தமும் இல்லை என்று சொன்னோம். நாம் தொடர்ச்சியாக கூறினோம் இது ஒரே தடவையில் தரப்பட வேண்டுமென்று. 
 
ஆனால் இது தொடர்பில் பிரதமர், கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் அதிகாரிகள், நிதி அமைச்சின் அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் போன்ற சகல தரப்பினரும் கலந்துரையாடி இறுதியாக முதலாம் கட்டத்தை 2022 ஜனவரியிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களை 2023 ஜனவரியிலும் தருவதாகச் சொன்னார்கள். 
 
இதற்கு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க சம்மேளனம் என்ற வகையில் ஆதரவையோ எதிர்ப்பையோ நாம் தெரிவிக்கவில்லை. இது தொடர்பிலான முடிவு ஏனைய தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி நாளைய தினம் எடுக்கப்படும். அதுவரை எமது தொழிற்சங்க போராட்டம் அவ்வாறே தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை. 
 
நாம் ஒரே தடவையில் தர வேண்டும் என்று கோரிய போது, அதற்கான நிதி வசதியோ பொருளாதார நிலையோ தற்போது இல்லை என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசேடமாக நிதியமைச்சின் அதிகாரிகள் இந்த முறை வரவு செலவுத் திட்டத்திற்கு மேலும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எந்த வகையிலும் முடியாத நிலை காணப்படுகிறது என தெரிவித்தனர். 
 
எனவே இந்த சகல நிலைமை தொடர்பாகவும் நாம் விரிவாக கலந்துரையாட வேண்டும். அவ்வாறு கலந்துரையாடி எமது தொழிற்சங்க நடவடிக்கையின் எதிர்காலம் பற்றி நாளைய தினம் நாம் தீர்மானம் எடுப்போம் என தெரிவித்தார்.
பிரதமருடனான சந்திப்பில் நடந்தது என்ன? அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வருமா? (முழு விபரம் இணைப்பு) பிரதமருடனான சந்திப்பில் நடந்தது என்ன? அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வருமா? (முழு விபரம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on October 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.