அதிபர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் நாளை பாடசாலை ஆரம்பமாகுமா? சம்பளம் நிறுத்தப்படுமா? கல்வியமைச்சின் செயலாளர் விளக்கம்
கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா நாளை பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பாகவும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாகவும் பரீட்சை தொடர்பாகவும் சம்பளம் நிறுத்தப்படுவது தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இன்று (20) காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவரது அந்த பேட்டியை உங்களுக்காக irumbuthirainews.com தொகுத்து வழங்குகிறது.
கேள்வி:
21ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என அரசு தெரிவித்தாலும் சில தொழிற்சங்கங்கள் 21ஆம் தேதி 22 ஆம் தேதி பாடசாலைக்கு செல்வதில்லை என தெரிவித்துள்ளனர். அப்படியானால் நாளை அதிபர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் பாடசாலை ஆரம்பமாகுமா? பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவார்களா?
பதில்:
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு நான் பெற்றோர்களிடம் அன்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் விசேட வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
"மகிழ்ச்சிகரமான நாளையை கட்டியெழுப்ப மீண்டும் பாடசாலைக்கு வருவோம்" என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் கல்வி அமைச்சால் தேசிய கல்வி நிறுவகம் மற்றும் குழந்தைகளுக்கான விஷேட வைத்திய நிபுணர்கள் என்பவற்றை இணைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாம் 06 மாத காலத்திற்கு பின்னர் அதாவது இந்த வருடம் ஏப்ரல் 23 க்கு பின்னர் தற்போதுதான் பிள்ளைகளுக்காக பாடசாலையை ஆரம்பிக்க சுகாதார தரப்பினரின் அனுமதி கிடைத்துள்ளது. எனவே பிள்ளைகளுக்காகத்தான் பாடசாலை ஆரம்பிக்கப்படுகிறது. ஆகவே நாம் அழைப்பு விடுக்கிறோம்... எதைச் சொன்னாலும்.. நமது ஆசிரியர்கள் தானே... எனவே நான் நினைக்கிறேன் நீங்களும் விருப்பத்தோடு இருப்பீர்கள் ஆசிரியர்களின் முகத்தை பார்க்க. ஆசிரியர்களும் பார்த்துக்கொண்டிருப்பார்கள் பிள்ளைகளின் முகத்தை பார்க்க.
எனவே நாம் வார்த்தைகளுக்குள் மாட்டிக் கொண்டிருக்காமல் பிள்ளைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று நிறைய ஆசிரியர்கள் கதைக்கிறார்கள். நாங்கள் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை மிகவும் நல்ல வேலை. அப்படி என்றால் நான் பாடசாலைக்கு சென்ற முதல் நாள்.. பாலர் பாடசாலைக்கு சென்ற முதல் நாள்... எனது பிள்ளைகளை சேர்த்த முதல் நாள்.. எனக்கு நினைவுக்கு வருகிறது.
என்னை பார்த்துக் கொண்டதும் ஆசிரியர்கள். உங்களை பார்த்துக் கொண்டதும் ஆசிரியர்கள். அம்மா பாடசாலையில் விட்டுவிட்டு செல்வார். பிள்ளைகள் அழுவார்கள். அந்தப் பிள்ளைகளை பார்த்து கொள்வது ஆசிரியர்களே! யாராக இருந்தாலும் இது தேசிய பொறுப்பு. பாடசாலைக்குச் சென்று பிள்ளைகளை நாம் வரவேற்க வேண்டும்.
எந்த நிலையில் இருந்தாலும் பிள்ளைகள் என்று சொல்லும்பொழுது எல்லோருடைய அவதானமும் குவிகிறது. இலங்கையிலும் சுனாமி வந்த பொழுது சுனாமி பேபி என்று சொல்லப்பட்ட அந்த பிள்ளையின் மீது கவனம் சென்றது. இன்றுவரை அது பேசப்படுகிறது.
எவ்வாறாயினும் பிள்ளைகள் மீதான அவதானம் இருந்தாலும் இவ்வாறான பெருந்தொற்று நிலைமையின் போது அவர்களது கல்வியைப் பற்றி பேசுவது குறைவு. ஆனால் அவர்களது கல்வியைப் பற்றி கவனம் செலுத்தினால்தான் இது போன்ற பெரும் தொற்றுக்கான தடுப்பூசியை தயாரிக்கவோ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவோ முடியும். எனவே இவையெல்லாவற்றுக்கும் கல்வி அவசியம்.
கேள்வி:
தற்போதைய நிலையில் தொழிற்சங்கங்கள் எதைச் சொன்னாலும் நாளைய தினம் அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்வார்கள் என்ற ஒரு நம்பகரமான தகவல் உங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதா?
பதில்:
நானும் எனது கௌரவ அமைச்சரும்தான் தொழிற்சங்கங்களுடன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கதைத்துள்ளோம். நாம் கதைப்பது அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக... அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக... அவர்களுக்கு முன்வைக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக.
நாம் கதைக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் தொழிற்சங்கங்கள் கூறுவது "எங்கள் பிரச்சினைக்கு தீர்வை தாருங்களே செயலாளர்.. நாம் பாடசாலைக்குச் செல்கிறோம்" என்று தான் கூறுவார்கள். அவர்கள் பாடசாலைக்குச் செல்லும் விருப்பத்துடன் இருக்கிறார்கள்.
ஆசிரியர்கள் என்பவர்கள் தொழிற்சாலை ஊழியர்கள் அல்ல. அவர்கள் மூலம்தான் நாட்டின் கல்வியும் உலகின் கல்வியும் உருவாக்கப்படுகிறது. நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன் அவர்கள் பாடசாலைக்குப் போவார்கள் என்று.
நாம் உண்மையில் 02 நாட்கள் (21 & 22) பொறுமை காக்க முடியும் தானே... ஏப்ரல் 23 க்கு பிறகு எங்களுக்கு முதன்முறையாக சுகாதார அமைச்சு இப்பொழுது தான் வாய்ப்பை தந்திருக்கிறது பாடசாலை ஆரம்பிக்கும் தினத்தை தீர்மானிக்க. நான்கு கட்டங்களாக ஆரம்பிக்க எம்மிடம் சொன்னார்கள்.
அதன் பின்னர்தான் நாம் ஒன்று சேர்ந்து கௌரவ அமைச்சர், இராஜாங்க அமைச்சர்கள் 4 பேருடன் கதைத்து அமைச்சரவைக்கு அறிவித்து அரசாங்கத்திற்கு அறிவித்து... பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் 145 பேர் அளவில் இருக்கின்றனர். அவர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்து இதற்கு ஒத்துழைப்பு தருமாறு கோரி... சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சிறுவர்களுக்கான விசேட வைத்தியர்கள் சங்கம், சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழு உட்பட பல தரப்பினரும் இதில் விசேட கவனம் செலுத்திதான் இந்த நடைமுறை உருவாக்கப்பட்டது.
எந்த அளவுக்கு என்றால் யாராவது பிள்ளைக்கு சுகாதாரப் பிரச்சினை ஏற்பட்டால் அதனை பார்ப்பதற்காக வேண்டி ஒவ்வொரு வலயத்துக்கும் ஒவ்வொரு விஷேட சிறுவர் வைத்தியர் நியமிக்கப்பட்டு அவர்களது பெயர், தொடர்பு இலக்கங்கள் என்பனவும் எம்மிடம் தரப்பட்டுள்ளன.
அதேபோன்று பொது சுகாதார பரிசோதகர்கள்... கிராம சேவையாளர்கள்... இது மட்டுமன்றி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் என்னுடன் தனிப்பட்ட முறையில் கதைத்துள்ளனர். அதேபோன்று ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தனிப்பட்டமுறையில் கதைத்துள்ளார். ஆசிரியர்கள் கதைத்திருக்கிறார்கள்.... நீங்கள் பாடசாலைகளை ஆரம்பியுங்கள் என்று கூறுகிறார்கள். எனவே கிடைத்த முதலாவது சந்தர்ப்பத்திலேயே இந்த பாடசாலைகளை நான்கு கட்டங்களாக ஆரம்பிக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கேள்வி:
பேராசிரியரே... கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் நீங்கள் சொன்ன அந்த விசேட வேலைத்திட்டம் எத்தனை நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது?
பதில்:
சுமார் ஒரு வாரத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் ஆரம்பிப்பது ஆரம்பப்பிரிவு என்பதனால் அவர்களுக்கு உரிய சில செயற்பாடுகள் அடங்கிய வேலைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. (ஒவ்வொரு தரத்திற்கும் ஒவ்வொரு தினமும் என்னென்ன செயற்பாடுகள் உத்தேசிக்கப்பட்டுள்ள என்ற விடயத்தை விளக்கமாக சொன்னார்)
கேள்வி:
இவற்றை செயற்படுத்துவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியம். அப்படித்தானே..?
பதில்:
ஆசிரியர்கள் இருந்தால்தான் மிகவும் நல்லது.
கேள்வி:
ஆசிரியர்கள் இல்லாவிட்டால் எப்படி செய்வது என்ற வேலைத்திட்டம் உங்களிடம் உள்ளதா?
பதில்:
ஆம் உள்ளது. அது எப்படி என்றால் 100 வலயங்கள் உள்ளன. 312 கோட்டங்கள் உள்ளன. இவை எல்லாவற்றிலும் பாடரீதியான பணிப்பாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு பாடசாலைக்கும் இவ்வாறான அதிகாரிகளை நாம் பெயரிட்டுள்ளோம்.
200 பிள்ளைகளுக்கு குறைவான ஆரம்ப பிரிவை கொண்ட பாடசாலைகள் 5106 இருக்கின்றன. (ஒரே ஒரு மாணவரை கொண்ட இரண்டு பாடசாலைகள் இலங்கையில் ஊவா மாகாணத்தில் இருக்கும் விடயத்தையும் ஏனைய சில பாடசாலை தரவுகளையும் இதன்போது குறிப்பிட்டார்) எனவே இந்த நடவடிக்கையின்போது தரம் ஒன்றையும் இரண்டையும் இணைத்து அவர்களுக்கான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். மூன்றையும் நான்கையும் இணைத்து அவர்களுக்கான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
கேள்வி:
நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை செல்லாத ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்துவதாக வடமேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆளுனர் என்ற வகையில் அவருக்கு அந்த அதிகாரம் இருக்கிறதா? இரு நாட்கள் பாடசாலை செல்லாத ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை நிறுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சின் நிலைப்பாடு என்ன?
பதில்:
மாகாணசபை இல்லாத சந்தர்ப்பத்தில் அரசியல் யாப்பின் படி ஆளுநர்களுக்கு அதிகாரம் இருப்பது உண்மை. அதுவும் மாகாண பாடசாலைகள் தொடர்பில் அந்த அதிகாரம் இருக்கலாம். ஆனால் அவர் எந்த தொணியில் அதைச் சொன்னார் என்று எனக்கு தெரியாது.
நான் பொதுவாக அரசியல்வாதிகளின் கருத்துக்களை கவனிப்பதில்லை. நான் அவரிடம் இது தொடர்பில் கதைக்க வேண்டும். ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை இதற்கு உரிய ஆலோசனை வழங்கும். ஆனால் நான் நினைக்கவில்லை அவ்வாறு நடக்கும் (சம்பளம் நிறுத்தப்படும்) என்று.
கேள்வி:
நாளைய தினம் முதற்கட்டமாக பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல சாதாரணமாக எவ்வளவு காலம் எடுக்கும்?
பதில்:
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய மாணவர்களின் சுகாதார நிலைமைகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும். அந்தவகையில் ஒரு வார காலத்திற்குள் நாம் எதிர்பார்க்கிறோம் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்க...
இதுமட்டுமன்றி கட்டங்கட்டமாக தேவையில்லை எல்லா வகுப்புகளையும் ஒன்றாக ஆரம்பிக்கும்படி முன்னணி தொழிற்சங்கம் ஒன்று சொன்னார்கள். உண்மையில் அவர்கள் நேர்மறையானவர்கள். அவர்களின் அந்த கருத்தை நினைத்து சந்தோஷம் அடைகிறேன்.
கல்வி அமைச்சர் நான்கு ராஜாங்க அமைச்சர்களுடன் இணைந்துதான் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார். அந்த நால்வரில் இருவர் ஆசிரியர் பணியோடு சம்பந்தப்பட்டவர்கள்.
கேள்வி:
மேல் மாகாண பாடசாலைகள் மாணவர்கள் அதிகம் கொண்ட பாடசாலைகள். ஏனைய மாணவர்களைப் போன்று அவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது முக்கியம். எனவே சகல பாடசாலைகளையும் ஆரம்பிக்க எவ்வளவு காலம் எடுக்கும்?
பதில்:
நாளை முதல் தரம் 10, 11, 12, 13 ஆகிய மாணவர்களுக்கு நாடுபூராகவும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பமாகின்றன. இவ்வாறு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடிந்ததும் ஒரு மாத காலத்திற்குள் சகல பாடசாலைகளையும் ஆரம்பிக்க முடியுமாயிருக்கும்.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைகளும் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நான்கு கட்டங்களுக்கும் காலப்பகுதி குறிப்பிடப்படவில்லை.
கேள்வி:
பாடசாலைகள் ஆரம்பமானதும் பாடவிதானத்தை நிறைவுசெய்ய மேலதிக காலம் வழங்கப்படுமா?
பதில்:
இது தொடர்பில் ஒவ்வொரு பாடத்திற்கும் விசேட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக 100 நாட்களாவது தேவைப்படும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் என்னிடம் தெரிவித்தார்.
கேள்வி:
அப்படியானால் டிசம்பர் மாதமும் நிறைவு செய்ய முடியாமல் இருக்கும்?
பதில்:
ஆம். ஆனால் தொழிற்சங்கங்கள் நேற்று என்னுடன் கதைக்கும் பொழுது சொன்னார்கள் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் அவர்களுக்கு மாலை வேலையா? அல்லது சனிக்கிழமையா? என்றெல்லாம் பிரச்சினை இல்லை. கற்பிக்க முடியும் என்று சொன்னார்கள்.
ஆனால் நாம் பிள்ளைகளுக்கு அதை உள்வாங்க முடியுமா என்று பார்க்கவேண்டும். பிள்ளைகளுக்கு தொடர்ச்சியாக கற்றுக் கொண்டிருப்பது சிரமமாகவே இருக்கும்.
கேள்வி:
டிசம்பர் மாத விடுமுறை இம்முறை குறைக்கப்படுமா?
பதில்:
ஆம் கடந்த வருடத்தைப் போன்று இந்த முறையும் அவ்வாறே நாம் செய்வோம்.
கேள்வி:
உயர்தர பரீட்சை தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன? பொதுவாக ஆசிரியர்களிடம் நேரடியாக சென்று படிப்பவர்களுக்கு பரிட்சை என்று வரும்பொழுது தடுமாறுகின்றனர். ஆனால் இவர்கள் அவ்வாறு படிக்காதவர்கள். எனவே இவர்களது மனநிலையை வைத்து பரீட்சையை எவ்வாறு தீர்மானிக்கலாம்?
பதில்:
இது தொடர்பில் நானும் கல்வி அமைச்சரும் 4 ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பரீட்சை ஆணையாளர் என்பவர்கள் தொடர்ந்து கதைத்து வருகிறோம். மாணவர்களுக்காககவே பரிட்சை. எனவே அவர்களின் நிலையை அறிந்து முடிவு எடுக்க வேண்டும்.
திகதியை அறிவிக்க அவசரப்படமாட்டோம். ஆனால் அறிவிப்போம். ஒரு வகுப்பை எடுத்துக் கொண்டால் உடனே பரீட்சை முடிய வேண்டும் என்று ஒரு தரப்பினர். பிற்போடப்பட வேண்டும் என்று இன்னொரு தரப்பினர். பரிட்சை எப்போது நடந்தாலும் பரவாயில்லை என்று இன்னொரு தரப்பினர் இருப்பர். ஆனால் எப்படியும் இன்னும் இரு வாரங்களில் அல்லது ஒரு மாதத்திற்குள் திகதியை அறிவிக்கும் நிலையிலேயே நாம் இருக்கிறோம்.
ஆனால் எனது தனிப்பட்ட நிலைப்பாடு என்னவென்றால்... அவசரமாக திகதியை அறிவித்து பின்னர் அதை பிற்போடுவது பொருத்தமில்லாத விடயம் என்பதுதான்.
கேள்வி:
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்?
பதில்:
எனக்கு கிடைக்கும் தகவல்களின்படி இந்த பரீட்சை பிற்போட பிற்போட தாய்மார்கள் இன்னும் இன்னும் அதிகமாக பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். உண்மையிலேயே தாய்மார்களின் பரீட்சை போன்று தான் நடந்து கொள்கிறார்கள்.
இந்தப் பரீட்சை தொடர்பில் நாம் விஷேடமாக கதைத்து வருகிறோம். ஆனால் அதை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நாம் உள்ளோம். இவர்களுக்கான பாடவிதானம் எவ்வளவு நிறைவு செய்யப்பட்டுள்ளது? என்ற விடயத்தை மாத்திரம் வைத்து இந்த பரீட்சையை நாம் தீர்மானிக்கலாம். எவ்வாறாயினும் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல் செய்தே திகதியை அறிவிக்கலாம்.
கேள்வி:
பாடசாலைக்கு ஆசிரியர்கள் செல்வார்களா? இல்லையா? என்ற சந்தேகத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்புவதா இல்லையா என்ற தீர்மானம் இன்றி இருக்கலாம். எனவே அந்தப் பெற்றோர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்:
நான் ஆரம்பத்தில் சொன்னதைப் போன்று பிள்ளைகளுக்கு என்றே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட செயற்பாடுகளை நாம் அறிமுகப்படுத்தி உள்ளோம். எனவே இந்த சந்தர்ப்பத்தை உங்களது பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுங்கள். உதாரணமாக மேல் மாகாணத்தை எடுத்துக்கொண்டால் தரம் 1 ஐ சேர்ந்த மாணவர்கள் ஒருநாளாவது பாடசாலைக்குச் செல்லவில்லை. அவர்களுக்கு பாடசாலை இது.. வகுப்பறை என்பது இது என்பதை எல்லாம் காட்ட வேண்டும்.
உண்மையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியர் விசேடமாணவர். ஆனால் அவர் வரவில்லை என்பதற்காக நீங்கள் பிள்ளைகளை அனுப்பாமல் இருக்க வேண்டாம். நாம் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்காக ஆட்களை நியமித்துள்ளோம். அவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி பார்த்துக் கொள்வார்கள்.
---x---
அதிபர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் நாளை பாடசாலை ஆரம்பமாகுமா? சம்பளம் நிறுத்தப்படுமா? கல்வியமைச்சின் செயலாளர் விளக்கம்
Reviewed by Irumbu Thirai News
on
October 20, 2021
Rating:
No comments: