மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் விதிக்கப்பட்ட நிபந்தனை!

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தற்பொழுது நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இந்த மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பொழுது அவர்களது பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல்.எம்.பி. தர்மசேன தெரிவித்துள்ளார். 
 
நேற்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவது தொடர்பாக அறிவித்துள்ளனர். 
 
அந்த வகையில் இம்முறை தரம் 11 மற்றும் தரம் 12 இல் கற்கும் மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி தற்போது வழங்கப்படுகிறது. இம்முறை தரம் 11 இல் இரண்டாவது தடவையாக பரீட்சைக்கு தோற்றுபவர்களும் இதில் உள்ளடங்குவர். 
 
மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோரின் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தற்போது இந்த வேலைத்திட்டம் நடைபெறுகிறது. 
 
தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் தொடர்பான தகவல்களை சுகாதார வைத்திய அதிகாரிகளையோ அதிபர்களையோ மற்றும் வலயக்கல்வி காரியாலயம் என்பவற்றையோ தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இது மாத்திரமன்றி மாகாண கல்வித் திணைக்களத்தின் இணையத்தளம் கல்வி அமைச்சின் இணையத்தளம் என்பவற்றிலும் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். 
 
மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மாதிரி படிவம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அதை நிரப்பி பெற்றோர்கள் கையொப்பமிட்டு வழங்க வேண்டும். 
 
இது மாத்திரமன்றி நீண்ட கால விடுமுறையில் இருந்ததனால் குறித்த மாணவர்கள் சீருடை அணிந்து செல்வதில் சிக்கல்கள் இருக்கலாம். சீருடை அணிய முடியாத அளவுக்கு உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். எனவே முடியுமாணவர்கள் சீருடை அணிந்து செல்லலாம். ஏனையவர்கள் பொருத்தமான வேறு ஆடையை அணிந்து செல்லலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் விதிக்கப்பட்ட நிபந்தனை! மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் விதிக்கப்பட்ட நிபந்தனை! Reviewed by Irumbu Thirai News on October 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.