பதவி நீக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்பு அமைச்சர்! மௌனம் காத்த கல்வி அமைச்சர்!


கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு காணப்படுகின்ற அதிகாரத்தின் அடிப்படையில் இந்த பதவிநீக்கம் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
இதேவேளை பதவி நீக்கம் செய்யப்பட்ட சுசில் பிரேமஜயந்த தனது அமைச்சுக்கு சென்று ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

கேள்வி: என்ன நடந்தது? 
 
பதில்:ஒன்றுமில்லை. என்னை ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிந்தேன். இது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. நான் அமைச்சர் ஆனது 2000 ஆம் ஆண்டில்... பாராளுமன்றத்திற்கு வந்தவுடனேயே அமைச்சரானேன். மூன்று ஜனாதிபதிகளின் கீழ் வேலை செய்துள்ளேன். எனது தொழில் ஒன்றும் இருக்கிறதே... நாளை முதல் அதற்கு செல்வேன். நீதிமன்றத்திற்கு... 
 
கேள்வி: இது தொடர்பில் உங்களுக்கு அறிவிக்கப்பட்டதா? 
 
பதில்: இல்லை. பொதுவாக அப்படி அறிவிப்பது இல்லையே... விலக்கியதை ஊடகங்கள் மூலமாக தான் நாங்கள் தெரிந்து கொள்வது... 
 
கேள்வி: உங்களை விலக்குவதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டதா? 

பதில்: இல்லை. காரணம் தெரிவிக்க வேண்டும் என்று அவசியமில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு யாரை வேண்டுமென்றாலும் நியமிக்கவோ அல்லது விலக்கவோ முடியும். 
 
கேள்வி: உண்மையில் என்ன நடந்துள்ளது? 
 
பதில்: எனக்கு தெரியாது. ஆனால் நேற்று முன்தினம் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பாகவும் பச்சை மிளகாய் 1200 ரூபா வரை உயர்ந்துள்ளமை தொடர்பாகவும் ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் கேட்டார். நான் சொன்னேன் இது முழுமையாக அரசாங்கத்தின் விவசாய கொள்கையின் தோல்வி (fail) மாதிரியே எமக்கு விளங்குகிறது என்று... மக்களுக்காகத்தான் நாங்கள் பேசியது... 
 
கேள்வி: அரசாங்கத்தில் உள்ளவர்களே அரசாங்கத்தை விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் உங்களுக்கு எதிராகத்தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது ஏன்? 
 
பதில்: நேற்று அமைச்சரவை கூட்டத்தின் போதும் ஏதாவது பேசியிருப்பார்கள். துப்புரவு தொழிலாளிக்குரிய தகைமை கூட இல்லாதவர்களுக்கே பாராளுமன்றத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது... அவர்களுக்கு தெரியாது கல்வியின் பெறுமதியை பற்றி... 
 
கேள்வி: உங்களை மாதிரி சிரேஷ்டத்துவமிக்க ஒருவரை விலக்கியிருக்கிறார்களே...? 

பதில்: அரசாங்கத்திற்கு நான் சிரேஷ்டத்துவம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாட்டின் அரசியலின் படி எனது பொறுப்புக்களை உரிய முறையில் ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் நிறைவேற்றியுள்ளேன். 
 
கேள்வி: நடந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 
 
பதில்: எனது எதிர்கால அரசியலுக்கு ஆசீர்வாதமாகவே இதை நினைக்கிறேன். 
 
கேள்வி: ஜனாதிபதி இப்படி ஒரு தீர்மானத்தை எடுப்பார் என நினைத்தீர்களா? 
 
பதில்: அப்படி தீர்மானம் எடுக்காவிட்டால் தான் பிரச்சினை. ஏனென்றால் பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் போகும் போக்கைப் பார்த்தால் எங்களுக்கு விளங்கிக்கொள்ளலாம் எங்கே செல்கிறது என... அவற்றைப் பற்றி நாம் பேசுவது மக்களுக்காக பேசுவதே ஆகும். எனவே மக்களுக்காக பேசவில்லை என்றால் அரசாங்கம் சரி என்று ஆகிவிடுமே... 
 
கேள்வி: அப்படி என்றால் அரசாங்கத்திற்குள் பிரச்சினை இருக்கிறது. அப்படியா..? 

பதில்: அதைப் பற்றி தெரியாது. ஆனால் மக்கள் எம்மை தெரிவு செய்துள்ளார்கள். நாம் அவர்களுக்காக பேசுகிறோம் என்றார். 
 
இதே வேளை அந்த இடத்திற்கு விஜயம் செய்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளைக் கேட்டும் அவர் பதில் எதையும் கூறவில்லை. ஏன் பதில் கூற பயமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, நான் ஏன் பயப்பட வேண்டும்? உங்களுக்கு பற்றவைக்க நெருப்பா தேவைப்படுகிறது? என்று கூறியுள்ளார். 
 
இதேவேளை பதவி நீக்கம் செய்யப்பட்ட சுசில் பிரேமஜயந்த தனது உத்தியோகபூர்வ வாகனங்களையும் கையளித்துவிட்டு முச்சக்கரவண்டியிலேயே அவ்விடத்தை விட்டு சென்றார்.

பதவி நீக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்பு அமைச்சர்! மௌனம் காத்த கல்வி அமைச்சர்! பதவி நீக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்பு அமைச்சர்! மௌனம் காத்த கல்வி அமைச்சர்! Reviewed by Irumbu Thirai News on January 04, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.