புலமைப்பரிசில் பரீட்சையில் நடைபெற்ற குளறுபடிகள்! மூன்று மட்டங்களில் விசாரணை!!


கொரோனா காரணமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட 2021ம் வருடத்திற்குரிய புலமைப்பரிசில் பரீட்சை நேற்று முன்தினம்(22) நடைபெற்றது. 
 
உரிய நேரத்திற்கு வினாத்தாள்கள் தரப்படவில்லை என்றும் அதன் காரணமாக விடையளிக்க போதுமான நேரம் இல்லை என்றும் குறித்த சில பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதிய மாணவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். 
 
இது தொடர்பில் நேற்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன இவ்வாறு தெரிவித்தார்... 
 
இது தொடர்பில் மூன்று மட்டங்களில் விசாரணைகளை நடத்துமாறு கௌரவ அமைச்சர் என்னிடம் அறிவுறுத்தி உள்ளார். 
 
வலயக்கல்வி காரியாலய மட்டத்தில் ஒன்றும் மாகாண கல்வி அமைச்சு மட்டத்தில் ஒன்றும் பரீட்சைத் திணைக்கள மட்டத்தில் ஒன்றும் நடத்தப்படவுள்ளது. 
 
விடைத்தாள்களை பொறுப்பேற்கும் மத்திய நிலையத்திற்கு சென்று குறிப்பிட்ட விடைத்தாள்களை மாத்திரம் வேறாக்கும்படி அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன். இதேவேளை இது தொடர்பான விசாரணைகளின் ஆரம்ப இடைக்கால அறிக்கையை அனுப்பி வைக்கும்படி வலயக்கல்வி காரியாலயங்களுக்கு கூறியுள்ளோம். 
 
நாளை அல்லது நாளை மறுதினம் எமது குழுவொன்று குறிப்பிட்ட பாடசாலைகளுக்குச் சென்று சம்பந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் சாட்சியங்களை பெற்று இது தொடர்பான இறுதி அறிக்கை தயாரித்து பெறுபேறுகள் வெளியிடுவதற்கு முன்னர் மாணவர்கள் பக்கத்தில் எடுக்கவேண்டிய தீர்மானங்களை நாம் எடுப்போம். 
 
தாய் தந்தையருக்கு சொல்கிறோம் நீங்கள் இந்த விடயங்கள் தொடர்பில் பிள்ளைகளிடம் அடிக்கடி கதைத்து கவலைகளை உண்டாக்காமல் அவர்களை சந்தோஷமாக இருக்க விடுங்கள். இந்த விடயத்தை எம்மிடம் பொறுப்பு தாருங்கள் நாம் அதை சரியாக செய்கிறோம். 
 
குறிப்பாக செயலாளர் என்னிடம் கூறினார்... இதன்பிறகு வினாப்பத்திரங்கள் வழங்கப்படும் பொழுது அதை வீடியோ எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென கூறினார் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் நடைபெற்ற குளறுபடிகள்! மூன்று மட்டங்களில் விசாரணை!! புலமைப்பரிசில் பரீட்சையில் நடைபெற்ற குளறுபடிகள்! மூன்று மட்டங்களில் விசாரணை!! Reviewed by Irumbu Thirai News on January 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.