2021 ம் ஆண்டு நடைபெற வேண்டிய கல்வி பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சை கொரோனா பரவல் காரணமாக பிற்போடப்பட்டு இன்றைய தினம் ஆரம்பமானது. எதிர்வரும் 5ஆம் திகதி வரை இந்த பரீட்சை நடைபெறும்.
2,437 பரீட்சை நிலையங்களில் மொத்தமாக 345,242 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இதில் 279,141 பாடசாலை பரீட்சார்த்திகளும் 66,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர்.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவிக்கையில்,
பரீட்சை ஆரம்பமாவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்கு செல்ல வேண்டும். தேசிய அடையாள அட்டை, பரீட்சை அனுமதி அட்டை, பேனா பென்சில் போன்ற எழுதுகருவி பொருட்கள், முக கவசம் (Face Mask), தொற்று நீக்கி திரவம் (Sanitizer) போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக தமது பரீட்சை நிலையத்தில் விசேட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு சென்று பரிட்சை எழுத வேண்டும்.
மேலும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பரீட்சார்த்திகள் வைத்தியசாலையிலிருந்தே பரீட்சைக்கு தோற்ற வேண்டும். அவர்களுக்கு அங்கு பரீட்சை எழுத விஷேட நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களினதும் ஏனையவர்களினதும் பாதுகாப்பை கருத்தில் கொண்டே அவர்கள் அந்த விஷேட மத்திய நிலையத்தில் பரீட்சை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை பரீட்சார்த்திகள் யாருக்காவது நோய் அறிகுறிகள் ஏற்படும் பட்சத்தில் அன்றைய தினம் தமது பரீட்சை நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட இடத்தில் பரீட்சை எழுத வேண்டும். அன்றைய நாள் பரீட்சை முடிவடைந்த பின்னர் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள விசேட நிலையத்தில் பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
மேலும் பரீட்சை காலங்களில் மின்வெட்டை அமல்படுத்த வேண்டாம் என இலங்கை மின்சார சபையிடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போதைய மின்சார நெருக்கடியை கருத்திற்கொண்டு எமக்கு இது தொடர்பில் கோரிக்கையை மட்டுமே முன்வைக்கலாம். மின்வெட்டை அமல்படுத்த வேண்டாம் என எந்தவித உத்தரவாதத்தையும் பெற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
இதேவேளை இம்முறை சிறைக்கைதிகள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவது தொடர்பான தகவலையும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையைச் சேர்ந்த 43 மற்றும் 46 வயதுடைய கைதிகள் இருவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
புதிய மகசீன் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திலேயே இவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
உயர்தர பரீட்சை எழுதும் சிறைக் கைதிகள்!
Reviewed by Irumbu Thirai News
on
February 07, 2022
Rating:
No comments: