இலங்கையில் தற்போது உக்கிரமடைந்துள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சனை என்பவற்றின் காரணமாக பல்வேறு துறைகளின் செயற்பாடுகளும் முடங்கும் நிலையை அடைந்துள்ளது.
இந்நிலையில் நிக்கவெரட்டிய பிரதேசத்தில் வீட்டில் இடம்பெற்ற பிரசவம் பலரின் கவனத்தை திருப்பியுள்ளது.
குறித்த கர்ப்பிணிக்கு சிசேரியன் செய்வதற்கான திகதி குறிக்கப்பட்டிருந்தது. அதற்கு இன்னும் நாட்கள் இருந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 05:10 மணியளவில் நிக்கவரட்டிய, திவுல்லேகொட பிரதேசத்திற்கு பொறுப்பான குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தருக்கு இது தொடர்பில் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக விரைந்து செயற்பட்ட அந்த உத்தியோகத்தர் தனது இல்லத்திலிருந்து 03 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குறித்த கர்ப்பிணியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் தனது கணவர் சகிதம் சென்றுள்ளார்.
தனது மோட்டார் சைக்கிளுக்கு போதியளவு எரிபொருள் இல்லாத நிலையிலும் அதையும் பொருட்படுத்தாது அவர் சென்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கர்ப்பிணியின் வீட்டுக்கு சென்று வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இது குறித்த தாயின் மூன்றாவது பிள்ளையாகும்.
அதன் பின்னர் வைத்தியசாலையில் அவர்களை அனுமதிப்பதற்காக 1990 சுவ செரிய நோயாளர் காவு வண்டியை வரவழைக்க பாரிய பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் அந்த நோயாளர் காவு வண்டியை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில்,
வேறு ஒரு பிரதேசத்திலிருந்து வரவழைக்கப்பட்டது.
சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் அந்த நோயாளர் காவு வண்டி வந்து சேர்ந்ததும் தாயும் பிள்ளையும் குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் குடும்ப சுகாதார சேவை ஊழியர் சங்கத்தின் தலைவி தேவிகா கொடிதுவக்கு கூறுகையில்,
குடும்ப சுகாதார நல உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் அத்தியாவசியமாக காணப்படுகிறது. அவர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பணியாற்ற வேண்டியுள்ளது. தாயையும் பிள்ளையையும் காப்பாற்றும் பொறுப்பு அவர்களுக்குள்ளது. எனவே அவர்களுக்கு உரிய முறையில் எரிபொருள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவை ஊழியர்களுக்கு வரிசையில் நிற்காமல் எரிபொருள் வழங்குவதற்கு ஒரு சில இடங்களில் மக்களிடமிருந்து எதிர்ப்பும் வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவர்களுக்கு எரிபொருள் கிடைக்காத பட்சத்தில் அது நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் விரைந்து செயற்பட்டு, தனது கடமை உணர்வையும் மனிதாபிமானத்தையும் நிரூபித்து, குறித்த தாயையும் ப பிள்ளையையும் காப்பாற்ற நடவடிக்கை எடுத்த அந்த உத்தியோகத்தரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இலங்கையின் எரிபொருள் நெருக்கடி: விரைந்து செயற்பட்ட அரச ஊழியர்! வீட்டில் இடம்பெற்ற பிரசவம்!
Reviewed by Irumbu Thirai News
on
June 26, 2022
Rating:
No comments: