60 தோட்டாக்களுடன் ராணுவ வீரரின் துப்பாக்கியை காணவில்லை! இன்னும் மாலைதீவை விட்டு செல்லாத ஜனாதிபதி! இலங்கையில் தொடரும் பரபரப்பு!
நேற்றிரவு பத்தரமுல்ல பொல்துவ சந்திக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் ராணுவ வீரர் ஒருவரும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக போலீஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான போலீஸ் அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து நாரஹேண்பிட்ட போலீஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் இதன் போது வெல்லவாய ராணுவ முகாமில் கடமையாற்றும் ராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கியானது 60 தோட்டாக்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்களால் பறித்தெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்களின்படி, நேற்று பல்வேறு இடங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்த 79 ஆண்களும் 05 பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேலை சிங்கப்பூர் சென்றதும் ராஜினாமா கடிதத்தை அனுப்புவதாக கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக செய்திகள் வெளியானாலும் இன்னமும் அவர் மாலைதீவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கோத்தாபயவிற்கு பாதுகாப்பு வழங்கி அடைக்கலம் கொடுத்தமைக்கு மாலைதீவின் எதிர்க்கட்சி ஆளும் கட்சியை வன்மையாக கண்டித்துள்ளது.
மேலும் கோதாபையவை மாலை தீவில் இருந்து உடனடியாக வெளியேற்றுமாறு கோரி மாலைதீவில் உள்ள இலங்கையர்கள் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். இதன் போது இருவர் கைது செய்யப்பட்டனர்.
நேற்றைய தினம் மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் செல்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மாலைதீவின் வேலானா சர்வதேச விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும் சிங்கப்பூர் செல்லும் இரு விமானங்களை நிராகரித்து அதில் செல்லாமல் அங்கேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கையில் நாடு பூராகவும் போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை ஐந்து மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
இலங்கையின் ஒவ்வொரு நிமிடமும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் நகருகிறது. சரியான முடிவுகள் எடுக்கப்பட்டு அமைதியான நிலைமை திரும்ப வேண்டும் என்பதே சகலரினதும் பிரார்த்தனையாகும்.
No comments: