பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்து அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கோதாபய ராஜபக்சவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தான் வெளிநாட்டில் இருப்பதால் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாலும் எனவே வெளிநாட்டில் இருக்கும் காலம் வரை தனது கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு தற்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமிக்கிறேன் என அந்த விஷேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாலைதீவிற்கு சென்ற கோத்தாபய ராஜபக்ஷ அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதாகவும் சிங்கப்பூரை சென்றடைந்ததும் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இன்றைய தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவிக்கையில் இன்றைய தினத்திற்குள் ஜனாதிபதியின் ராஜினாமா கடிதம் கிடைக்காவிட்டால் தான் சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அந்தக் கூட்டத்திற்கு சமூகமளிக்க முன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பின்போது அவர்களும் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகும் படி கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்தனர் ஆனால் ரணில் விக்ரமசிங்க வரவில்லை. தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அண்மித்துள்ளதாகவும் அவர்கள் பாராளுமன்றத்தை சுற்றி வளைத்துள்ளதாகவும் எனவே பாராளுமன்றத்திற்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டால் மீண்டும் பதில் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதி தருமாறு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அந்தக் கோரிக்கை கட்சி தலைவர்களினால் நிராகரிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இது மாத்திரமின்றி அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபர் ஒருவரை பிரதமராக பெயரிடுமாறு தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் வகையிலேயே இவ்வாறு பிரதமர் ஒருவரை பெயரிடுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 9ம் தேதி கூட்டத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆளும் கட்சியை சேர்ந்தவரும் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கருதப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். அதாவது ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும். சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்க வேண்டும் என்பதே கடந்த 9ம் திகதி நடைபெற்ற கட்சி தலைவர்களின் அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆகும்.
இது மாத்திரமன்றி தற்போது புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் காணப்படும் பிரதமரின் காரியாலயம் உடனடியாக ஆர்ப்பாட்டக்காரர்களால் விடுவிக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு தாம் எப்போதும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஆனால் அரச அலுவலகங்களை கைப்பற்றி சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ரணில் விக்ரமசிங்க உடனடியாக ராஜினாமா செய்து சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வழி ஏற்படுத்த வேண்டும். மேலும் நாட்டின் நிர்வாகத்தை சபாநாயகருக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும். கடந்த ஒன்பதாம் தேதி ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய செயல்பட வேண்டும் என அரசாங்கத்திலிருந்து அண்மையில் விலகி சுயாதீனமாக செயல்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளது.
இது மாத்திரமன்றி தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கையில் தற்போதைய நெருக்கடியான நிலைமைக்கு பாராளுமன்றத்தால் தீர்வு காண முடியும். எனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் பாராளுமன்றத்தையோ சபாநாயகரின் இல்லத்தையோ முற்றுகையிடுவதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சற்று நேரத்திற்கு முன் சபாநாயகரின் உத்தியோபூர்வ இல்லத்திற்கு அண்மையிலும் போராட்டக்காரர்கள் கூடியமையால் அங்கு கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டு கடும் பதற்ற நிலை தோன்றியது.
இதேவேளை மேல் மாகாணத்திற்கு மாத்திரம் போடப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு முழு நாட்டிற்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினால் இந்த ஊரடங்கு உத்தரவுக்கான அதிவிசேட வர்த்தமானி சற்று நேரத்திற்கு முன் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் ஒவ்வொரு நிமிடமும் கடும் பரபரப்புக்கு மத்தியிலும் போராட்டங்களுக்கு மத்தியிலும் கழிகின்றது. நல்ல முடிவுகள் எட்டப்பட்டு சுமூகமான நிலை உருவாக வேண்டும் என்பதே அனைவரினதும் பிரார்த்தனையாகும்.
No comments: