ஜனாதிபதி தெரிவில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள கட்சியான SLPP இன் வாக்குகள் முக்கியத்துவமிக்கவை. மொட்டு யாருக்காக புள்ளடி இடுகிறதோ அவரே ஜனாதிபதியாக வேண்டும்.
ஆனால் மொட்டுக்கு விழுந்த அடி பலமானது. எழுந்து நிற்கவே முடியாத நிலையில் உள்ளது. JVP க்கு 3% என்று கிண்டல் செய்த இவர்களின் வாக்கு வீதம் 3% ஆக குறைந்திருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு சொல்கிறதாம்.
ஆனாலும் ஜனாதிபதி தெரிவு செய்யப்படப் போவது எம்பிக்களின் வாக்கின் அடிப்படையில் என்பதால் மொட்டு பலமாகவே உள்ளது.
எனினும், ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் மொட்டு தரப்பில் யார் போட்டியிடுவார் என்பதெல்லாம் தெளிவில்லாமல் உள்ளது. அநேகமாக டலஸ் ஆக இருக்கலாம்.
டலஸ் அழகப்பெரும போட்டியிடுவார் என்றும் ஜனாதிபதி பிரதமர் பதவிகள் இரண்டும் டலஸ் மற்றும் சஜித் இனால் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் சில கதைகள் கடந்த ஓரிரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருந்தன.
அதனை உறுதிப்பப்டுத்தி டலஸ் தான் போட்டியிடுவதாக இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். எனினும் மொட்டுக் கட்சியின் வேட்பாளரா அல்லது சுயாதீனமாக போட்டியிடுகிறாரா என்பது தொடர்பில் தெளிவில்லாத நிலையே உள்ளது.
யார் இந்த டளஸ்?
1990 களுக்கு முன்பே மஹிந்தவின் தீவிர விசுவாசி. இடதுசாரி பின்னணி கொண்ட அவரை கட்சியில் வளர்த்து விட்டதே மஹிந்த. சந்திரிக்கா அரசில் அமைச்சுப் பதவி வகித்த போதிலும் வெறுப்புற்று அமெரிக்கா சென்ற அவரை மீண்டும் கொண்டு வந்தார் மஹிந்த ஜனாதிபதி.
அதன் பின் மஹிந்த சுலங்க என்ற எழுச்சியில் முக்கிய பங்காளியானார். தன்னை எப்போதும் ஒரு இடது சாரியாக காட்டிக் கொள்ளும் அவர் மொட்டின் இனவெறியில் சீரழிந்து போனார்.
கம்மன்பிலவோடு இணைந்து சிறுபான்மையை குறித்து நிற்கும் கீலங்கள் அற்ற தேசிய கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தார். கடைசியில் கொள்கையாவது மன்னங்கட்டியாவது என்று அவரும் சீரழிந்து நாட்டையும் சீரழிக்க காரணமாகிப் போனார்.
போன இடத்திலும் அவருக்கு உரிய கெளரவம் கிடைக்கவில்லை. ஏராளமான ராஜபக்க்ஷக்களை கொண்டிருந்த பாராளுமன்றத்தில் சூரிய ஒளியில் மறையும் நட்சத்திரம் போலானார் டளஸ்.
நாட்டு நிலைமை மோசமடைய பலம் பொருந்தியதாக கருதப்பட்ட மொட்டின் சுவர்களில் விரிசல் விழ ஆரம்பித்தது. பலமானதாக அவர்கள் கருதிய இனவாதம் என்ற அடித்தளம் பொருளாதார வீழ்ச்சி என்ற பூகம்பம் காரணமாக நிலை குழைய ஆரம்பித்த போது மொட்டுக்குள் உருவான அதிருப்தியாளர் குழுவில் இணைந்து கொண்டார் டலஸ்.
இன்று மொட்டு பல பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது.
SLFP ஒரு பக்கம், SLFP க்குள்ளேயே 2 குழுக்கள், சுசில், அனுர பிரியதர்ஷன குழு, விமல் உடன் உள்ள 10 கட்சி கூட்டு, பசில் குழு, மஹிந்த விசுவாசிகள், கோட்டா அபிமானிகள், வலு சமநிலையை பார்த்து இணைந்து கொள்ள சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டம் என்று பல.
டளஸ் உடன் போட்டிக்கு சஜித் வரலாம். ஏற்கனவே சஜித் கோட்டா எதிர்ப்பு முகாமில் உள்ள பல தரப்பினருடனும் கலந்துரையாடி வருகிறார். SLFP போட்டியிடாது என்ற நிலையில் அவர்களின் ஒத்துழைப்பு சஜித்க்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
இடையில் பொன்சேக்காவுக்கும் யாரோ ஆசை காட்டி விட்டார்கள். அந்தாளும் வரலாம். அதே நேரம் அநேகமாக ரணிலும் போட்டியிடலாம். ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்ட ரணில் என்ன செய்வார்?
அநேகமாக மொட்டின் நிறைய பேரின் ஆதரவு ரணிலுக்கு கிடைக்கலாம். ஏனென்றால் இப்போதைய நிலையில் வலுவானவராக அவரைக் காணலாம் பல மொட்டினர்.
அத்தோடு டலஸ் உடன் சம அந்தஸ்தில் அல்லது அவரை விட கொஞ்சம் மேலே (உதாரணமாக ஆளும் கட்சியின் பிரதான கொறடா, சபை முதல்வர் போன்ற பொறுப்புக்களில்) இருந்தோர் எல்லாம் டலஸ் ஐ ஜனாதிபதி கதிரையில் அழகு பார்க்க மனதளவில் விரும்பமாட்டார்கள்.
அதே போன்று ஆட்சிக்கு சிக்கல் வரும் போது டளஸ் நழுவிக் கொண்டார். பசில் தரப்போடு முரண்பாட்டார். கோட்டவை பதவி விலகுமாறு பகிரங்கமாக சொன்னார் போன்ற காரணங்களால் மொட்டுவில் உள்ள குழுக்களுள் பலவற்றின் ஆதரவு டலஸ்க்கு கிடைக்காமல் போகலாம்.
மொட்டு தரப்பின் ரிமோர்ட் ராஜபக்க்ஷக்கள் வசமே இருந்தது. இப்போது அதில் பெட்டரி இறங்கி விட்டது. எனவே இயக்க யாரும் இல்லை. அதுவா என்ன செய்யும் என்பதை ஊகிக்க முடியாது.
சஜித் தரப்பின் நிலையும் நம்பகமானதாக இல்லை. அவர் கட்சிக்கு பாராளுமன்றத்தில் இருந்த 54 ல் கொஞ்சம் 20க்கு கை தூக்க வெளியே சென்று விட்டது. அதில் ஹாபிஸ் நசீர் இன்னும் அங்கேயே உள்ளார். மற்றவர்கள் சுயதீனமாக இயங்குகின்றனர். அதே போன்று மனுஷ, ஹரின் ரனிலோடு உள்ளனர். எனவே அவரின் பலமும் 45 க்குள். அதில் பொன்சேக்கா கேட்பாரா என்பதை வைத்து கட்சியில் இன்னும் பிளவு வரலாம். அத்தோடு ஹரின், மனுஷ உதவியுடன் ரணில் மேலும் சில SJB உறுப்பினர்களின் ஆதரவை தன்பக்கம் திருப்பலாம்.
மைத்ரி தரப்பில் 14 பேர் உள்ளனர். இவர்களில் சுரேன் ராகவன், நிமல் சிரிபால, மஹிந்த அமரவீர ஆகியோர் கட்சியின் முடிவை மீறி கோட்டா ரணில் ஆட்சியில் அமைச்சு பதவி பெற்றவர்கள். இவர்கள் எப்போதும் நாயின் உடம்பில் உள்ள ஒட்டுண்ணி போன்றவர்கள். எனவே, கட்சி என்ன தீர்மானம் எடுத்தாலும் வெற்றி பெரும் சாத்தியம் அதிகம் உள்ள தரப்பிற்கு கை தூக்குவார்கள்.
அடுத்து சிறு கட்சிகள். JVP அநேகமாக யாரையும் ஆதரிக்காமல் விட அல்லது சஜித்க்கு ஆதரவளிக்கவே சாத்தியம் உள்ளது. சஜித்திற்கான வாய்ப்புக்கள் குறையும் நிலையில் இவர்கள் வாக்காளிக்க மாட்டார்கள் என்பதே என்னுடைய எண்ணம்.
விமல் வீரவன்ஷவின் தலைமையில் உள்ள 10 கட்சி கூட்டு அநேகமாக ரணிலுக்கு ஆதரவு வழங்க மாட்டாது. நடைபெறும் பேச்சுவார்த்தகள் எட்டப்பட்டுள்ள முடிவுகளை வைத்து பார்க்கும் போது அவர்கள் சஜித்தை ஆதரிக்கலாம். தமிழ் கட்சிகள் அநேகமாக சஜித்தை ஆதரிக்கலாம். ரணில் வேட்பாளராக வந்தால் அங்கேயும் திரும்பலாம்.
அதே போன்று SJB இல் பாராளுமன்றம் வந்தாலும் 43 ஆவது படையணி என்று தனியான பாதையில் செல்லும் சம்பிக்க ரணவக்க கூட போட்டியிடலாம் என்ற ஊகம் உள்ளது. அவரும் பல தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
வெற்றி தோல்வியை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளே தீர்மானிக்கும். விதிவிலக்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டாலே தவிர.
பாராளுமன்றம் அநேகமாக 15 க்கும் மேற்பட்ட சிறு சிறு குழுக்களாக பிரிந்தே உள்ளது. நடப்பு பாராளுமன்றம் மக்களின் ஆணையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதே உண்மை. எனவேதான் இத்தனை பிளவுகள்.
இந்த நிலையில் ஒரு கட்சி சார்பாக ஒரு வேட்பாளர் களம் இறங்கினால் அவரின் கட்சியில் இருப்பவர்களே அவருக்கு வாக்காளிப்பார்களா என்ற சந்தேகமே எழுகின்றது.
பெரும்பாலும் ரணில், டலஸ், சஜித் ஆகிய மூவருக்கும் இடையேயான மும்முனைப் போட்டியாக இது அமையலாம்.
இவர்களில் இரண்டு பேர் ஆதரவு தேடித் திரிய மற்றவர் அந்த ரெண்டுபேருக்கும் எதிராக உள்ளோரை தன் கூடையில் போட்டு பதவி பெரும் வாய்ப்பே அதிகம் உள்ளது. காலம் பதில் சொல்லும்.
எவர் வந்தாலும் மக்களின் அவலம் விரைவாக தீர்ந்தால் சரி.
- Fayas M. A. Fareed.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் வாய்ப்பு யாருக்கு?
Reviewed by Irumbu Thirai News
on
July 15, 2022
Rating:
No comments: