சந்திராயன் - 3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது இந்தியா. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (23) 40 நாட்கள் பயணத்தின் பின்னர் மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப் பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது.
சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தரையிறங்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதையடுத்து விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 க்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது
சந்திராயன்-3 ஆனது தனது நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தமையின் ஊடாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு பின்னர், நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு சாதனைகளைப் படைத்த உலகின் 4வது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.
தென் துருவத்தை தொட்ட முதல் நாடு:
நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.
இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் பொதுமக்களுக்காக இஸ்ரோவின் உத்தியோகபூர்வ YOUTUBE தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டமை சிறப்பம்சமாகும்.
சந்திரயான் 3 கடந்து வந்த பாதை:
இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008 இல் 386 கோடி இந்திய ரூபா செலவில் நிறைவேற்றப்பட்டது. சந்திரயான் - 2 திட்டத்திற்கு 978 கோடி இந்திய ரூபா செலவிடப்பட்டது. சந்திரயான்-3 திட்டத்திற்கான செலவு 615 கோடி இந்திய ரூபா.
சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்துகொண்டு LVM3 M4 ஏவுகணை கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
பின்னர், சந்திரயான்-3 விண்கலத்தின் பாதை உயரத்தை உயர்த்தும் (Orbit Raising) நடவடிக்கை 5 முறை மேற்கொள்ளப்பட்டது.
புவியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவந்த சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி இடையிலான நேரத்தில் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.
ஆகஸ்ட் 17 ஆம் திகதி சந்திரயான்-3 உந்து சக்தி கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது.
ஆகஸ்ட் 23: விக்ரம் லேண்டர் நிலவின் நிலப்பரப்பில் தரையிறங்கியது
விக்ரம் லேண்டர் நிலவில் என்ன செய்யப் போகிறது?
நிலவின் தென் துருவப் பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் லேண்டர் தரையிறங்கி, அங்கு சந்திரயான்-3 தனது ஆய்வுகளைச் செய்யவுள்ளது.
நிலவில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண் பகுதியில் நடக்கும் மாற்றங்களை அறிவது, அங்குள்ள பொருட்கள் என்ன நிலையில் உள்ளன, அங்குள்ள வெப்பம் தாங்கும் தன்மை கொண்டதா போன்ற பல தரவுகளை சந்திரயான்-3 கண்டறியவுள்ளது.
தகவல்களை கண்டறிவது ஆகிய பணிகள் மேற்கொள்ளபடவுள்ளன. இதேபோல், பூமியைப் போலவே நிலாவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா, இப்போது இல்லையென்றால் முன்பு இருந்தனவா என்பன போன்ற தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், அதன் உள்ளே இருக்கும் ரோவர் (Rover) எனப்படும் ஊர்திக்கலன் வெளியே வரும்.
இந்த ஊர்திக்கலன் நிலவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து, தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவிற்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களை சேகரித்து அனுப்பும்.
Source: newsfirst.
சந்திரயான்-3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்த இந்தியா! கடந்து வந்த பாதையும் இனி செய்யப்போகும் வேலையும்!
Reviewed by Irumbu Thirai News
on
August 23, 2023
Rating:
No comments: