இன்றைய தினம் (10) புனித நோன்பு பெருநாளை கொண்டாடும் சகலருக்கும் irumbuthirai News இன் மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். ஈத் முபாரக்!
இலங்கையில் இம்முறை பெருநாள் அறிவிப்பானது நீண்ட இழுபறிக்கு பின்னர் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. (இதற்கு முன்னரும் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான நிலை இருந்தாலும் இம்முறை சம்பவம் சற்று வித்தியாசமானது). சில பிரதேசங்களில் தராவிஹ் தொழுகையும் நிறைவடைந்ததன் பின்னரே பெருநாள் தக்பீர் பள்ளிவாயலில் சொல்லப்பட்டது.
ஷவ்வால் மாத தலைப்பிறை தென்படவில்லை எனவே 30 நோன்புகளாக பூர்த்தி செய்து 11ம் தேதியே பெருநாள் கொண்டாடப்படும் என்று பல செய்திகள் வெளியாகின. பின்னர் பிறை பார்த்தது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தன. அது தொடர்பான காணொளிகளும் வெளிவர தொடங்கின. இதற்கிடையில் பிறை குழுவானது இதுவரை எந்த உத்தியோகபூர்வ முடிவும் எட்டப்படவில்லை என பல தடவை அறிவித்தது. அதன் பின்னர் கிண்ணியா, அக்கரைப்பற்று, புத்தளம் போன்ற இடங்களில் பிறை தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அந்தப் பிரதேசத்திலிருந்து பிறை பார்த்தவர்களின் வீடியோ பதிவுகளும் வெளிவர தொடங்கின. இதில் ஒரு படி முன்னே சென்று கிண்ணியா உலமா சபையானது பிறை பார்த்ததற்கான உறுதிப்படுத்தலின் அடிப்படையில் தைரியமாக சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. இந்த நிலைமைகள் எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் பொழுது பிறை குழுவுக்கு நெருக்குதல்கள் விமர்சனங்கள் அதிகரிக்க தொடங்கின. அதன் பின்னர் நீண்ட இழுபறிக்கு மத்தியில் ஒரு மாதிரியாக பெருநாள் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கிண்ணியா உலமா சபையிடமிருந்து எழுத்து மூல உறுதிப்படுத்தல்களை பிறை குழு கோரி இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
பிறையை தீர்மானிப்பதில் கொழும்பு பெரிய பள்ளிவாயல் வரலாற்று ரீதியாக முக்கிய பங்கை வகிக்கிறது. மற்றும் ஜமியத்தில் உலமா, ஏனைய அமைப்புகள் இவற்றின் வகிபாகம் போன்ற பல விடயங்கள் பிறை தொடர்பான விமர்சனங்களையும் அதிகரிக்காமல் இல்லை.
பிறையை தீர்மானிக்கும் விடயத்தில் நவீன அறிவியல் வளர்ச்சியின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்வது இன்றியமையாத விடயமாக மாறி உள்ளது. எனவே அதை நாம் புறக்கணித்து செல்ல முடியாது என்ற கருத்து பிறை குழுவில் பொதுவாக பின்பற்றப்படுகிறது. இதனை வலியுறுத்தும் வகையில் பிறை குழுவை சேர்ந்த உலமா ஒருவர் நேற்றைய தினம் (9) வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றின் போது கருத்துக்களை முன்வைத்தார். (அதற்கான லிங்க்: தலைப் பிறை மாநாட்டில் என்ன நடக்கிறது? )
அதாவது இதன் விளக்கம் என்னவென்றால் வானியல் அறிஞர்களின் எதிர்வுகூறலின்படி பிறை தென்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா? இல்லையா? அவ்வாறு என்றால் எத்தனை நிமிடங்கள் தென்படலாம்? எந்த பிரதேசங்களில் தென்படலாம்? இதுபோன்ற விடையங்களை ஏற்கனவே பெற்றுக் கொண்டு அதன் அடிப்படையிலேயே தீர்மானத்துக்கு வரவேண்டிய நிலை மறைமுகமாக காணப்படுகிறது. அதாவது பிறை தென்பட வாய்ப்பில்லை என வானியல் அறிஞர்கள் கூறி யாராவது பிறை தென்பட்டது என சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வது கடினம் என்ற நிலைப்பாடு.
பல விடயங்களின் அடிப்படையில் நோக்கும் போது சமூகத்தில் சில கேள்விகள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. அவற்றுள் சில...
முஸ்லிம் சமூகத்தின் மார்க்க விடயங்கள், சமூக கலாசார விடயங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை முன்னோடியாக செயல்பட்டு வழிகாட்டுதல்களை வழங்கி வழங்குகிறது. ஆனால் பிறை விடயத்தில் மாத்திரம் கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிரதான பங்கை வகிக்கிறது. இது ஏன்?
பாரம்பரிய ரீதியாக, வரலாற்று ரீதியாக பெரிய பள்ளிவாயல் இதை செய்து வந்தால் அதை அவ்வாறே தொடர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளதா? அவ்வாறு இல்லாவிட்டால் ஜம்இய்யத்துல் உலமாவின் பொறுப்பின் கீழ் இதை எடுப்பதில் ஏதாவது சட்ட சிக்கல், நடைமுறை சிக்கல் காணப்படுகிறதா?
வெற்றுக் கண்ணால் பார்க்க வேண்டும் என்ற ஹதீஸை சொல்லிச் சொல்லி வானியல் அறிஞர்களின் கூற்றை அடிப்படையாக வைத்து தீர்மானத்துக்கு வர முயற்சிப்பது நியாயமா?
எதிர்வுகூறல் என்பது எதிர்காலம். பிறை பார்த்தல் என்பது நிகழ்காலம். இதில் உண்மை தன்மை எதில் அதிகம்?
பிறை பார்த்த சம்பவங்கள் ஊடகங்கள் மூலம் பரவி அதனால் பிறை குழுவுக்கு ஏற்பட்ட நிர்பந்தத்தின் காரணத்தினால் பெருநாள் அறிவிக்கப்பட்டதா? அவ்வாறு நிர்ப்பந்தம், விமர்சனம் அதிகரித்திருக்காவிட்டால் 30 நோன்புகளாக பூர்த்தி செய்து பெருநாள் கொண்டாடும் தீர்மானமா எட்டப்பட்டிருக்கும்?
அறிவியல் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும் அது தொடர்பான எதிர்வுகூறல்கள் அவ்வாறே நடக்குமா? நடக்கிறதா?
எனவே இது போன்ற நிகழ்வுகள், நடைமுறைகள், விமர்சனங்கள் என்பன சமூகத்தின் மத்தியில் மேலும் பிளவுகளை அதிகரிப்பதோடு அதிருப்தியையும் பரவலாக்கும். பிறைக் குழு, ஜம்இய்யதுல் உலமா என்பவற்றின் மீதான நம்பிக்கையையும் குறைக்கச் செய்யும்.
இது தொடர்பில் உரிய தரப்பினர் மிக விரைவாக ஆக்கபூர்வமாக சிந்தித்து பொருத்தமான தீர்மானங்களை எடுத்து சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய வெளிப்படை தன்மையும் நம்பிக்கையும் கொண்ட நடைமுறைகளை அறிமுகம் செய்ய வேண்டும். இது காலத்தின் தேவை. இல்லாவிட்டால் சாதாரண விடயங்களையும் விமர்சன ரீதியாக கொண்டு போய் பிளவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
எது எப்படியோ இன்றைய தினம் பெருநாளை கொண்டாடுகிறோம். பெருநாள் கொண்டாட்டங்களின் போது வீண்விரயங்களை தவிர்ப்போம். பசித்தோருக்கு உணவளிப்போம். ஏழைகளுக்கு கரம் கொடுப்போம். உறவுகளை அனுசரிப்போம். தமது கஷ்ட நிலைமைகளை பிறருக்கு சொல்லவும் முடியாமல் தமது தேவைகளை பூர்த்தி செய்யவும் முடியாமல் தவிக்கும் மக்கள் ஏராளம். அவர்கள் வெளியில் சொல்வதில்லை. அவ்வாறானவர்களை தேடிச் சன்று உதவி கரம் நீட்டுவோம்.
இந்த பெருநாள் தினத்தில் எமது வீணான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வீண் செலவுகளை தவிர்த்து இவ்வாறான ஆக்கபூர்வமான சமூகம் சார்ந்த விடயங்களுக்கு செலவழிப்போம். எமது பிள்ளைகளுக்கும் அவ்வாறே வழிகாட்டுவோம்.
மற்றுமொரு முக்கியமான விடயம்.... நாம் சந்தோஷமாக பெருநாளை கொண்டாடுகிறோம். ஆனால் பலஸ்தீனில் நமது உறவுகள் எப்போது உயிர் பறிக்கப்படும் என்று அச்சத்துடனே காலங்களை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த நிமிடம் அல்ல அடுத்த செக்கன்கூட அவர்களுக்கு கேள்விக்குறியே!
வீடுகளை, சொத்துக்களை, உறவுகளை இழந்து பரிதவிக்கிறார்கள். ரமழானில் இரவில் கூட நோன்பாளிகள் போல் இருந்தார்கள். அவ்வளவு பசிக்கொடுமை. சில சந்தர்ப்பங்களில் சாப்பாட்டுக்காக ஒரு வகையான புள்ளை அரைத்து வைத்திருந்த காட்சிகளும் நெஞ்சை உலுக்கியது.
பெரும்பாலான முஸ்லிம் நாடுகளின் அலட்சியப் போக்கு, நயவஞ்சகத் தன்மை, இரட்டை வேடம் என்பவற்றுக்கு பெறுபேறு தீர்ப்பு நாளிலே நிச்சயம் அல்லாஹ் வழங்குவான். முஸ்லிம் அல்லாத சில நாடுகள் கூட சியோனிசத்தின் இந்த அநியாயத்திற்கு எதிரான நிலைப்பாட்டை பகிரங்கமாக தைரியமாக எடுத்திருந்தன. அதில் கூட இவர்கள் படிப்பினை பெறவில்லை. ஏன் ரோஷம் கூட வரவில்லை.
உண்ண உணவின்றி உடுக்க உடை இன்றி வருகின்ற சகல கஷ்டங்களையும் சந்தித்துக் கொண்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அவன் மீதே பாரத்தை போட்டு அவனே பார்த்துக் கொள்வான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் அம்மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் இழந்தவை ஏராளம் அந்த உறவுகளுக்காக எமது சகல தொழுகைகளிலும் துஆவை கேட்போம். எம்மால் செய்யக்கூடியது அது மாத்திரமே. ஆரம்பத்தில் குனூத் நாசிலா ஓதச் சொன்ன ஜம்இய்யத்துல் உலமா பின்னர் அதையும் இடைநிறுத்தியது. ஏனென்று காரணம் புரியவில்லை. எவ்வாறாயினும் ஒவ்வொரு தனி மனிதனும் அந்த ஜீவன்களுக்காக துஆ கேட்போம். அவர்களுக்கும் சுதந்திரமான சுய உரிமை கொண்ட வாழ்வு கிட்ட வேண்டும். அந்த மக்களின் வாழ்வு நமக்கு படிப்பினை அந்தப் பிள்ளைகளின் நிலை நமது பிள்ளைகளுக்கு முன்மாதிரி.
இலங்கை அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட காசா நிதியத்திற்கான பங்களிப்புகளை பல தரப்பினரும் வழங்கி வருகின்றனர். ஏன் முஸ்லிம் அல்லாதோரும் வழங்குகின்றனர். எனவே நமது மற்றும் நமது பிள்ளைகளின் வீண் செலவுகளை தவிர்த்து அவ்வாறான பங்களிப்புகளை வழங்க முடியுமா என்பதையும் சிந்திப்பது பொருத்தமாக இருக்கும். அங்குள்ள பிள்ளைகள் சந்திக்கும் இன்னல்கள், கஷ்டங்கள், நெருக்குதல்கள், தவிப்புகள், இழப்புகள் அனைத்தையும் எடுத்துக் கூறி நமது பிள்ளைகளுக்கு வாழ்வின் யதார்த்தத்தை புரிய வைப்போம்.
இறைவன் அந்த மக்களை பாதுகாப்பானாக! அவர்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த வாழ்வை வழங்குவானாக!
மீண்டும் அனைவருக்கும் irumbuthirai News இன் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாரக்!
குறிப்பு: இந்த ஆக்கத்தின் மூலம் யாரையும் விமர்சனம் செய்வது நோக்கமல்ல. ஆனால் ஆக்கபூர்வமான மாற்றங்கள் தேவை என்பதை உணர்த்துவதே இதன் நோக்கமாகும்.
இலங்கையின் நோன்பு பெருநாளும் சிந்திக்க சில விடயங்களும்...
Reviewed by Irumbu Thirai News
on
April 10, 2024
Rating:
No comments: