செய்தி சுருக்கம் 4/4/2025 - வெள்ளிக்கிழமை


உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று மாலை இலங்கை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான உத்தியோபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை(5) காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. இந்த விஜயத்தின் போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறு சீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்களும் ஏற்படுத்திக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

---‐-------------------

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சதீவு விவகாரத்தில் இடைக்கால தீர்வு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். அதாவது கச்சதீவு மீட்பில் நிரந்தர தீர்வை எட்டும் வரை இடைக்கால தீர்வாக 99 வருட குத்தகையாக கச்சதீவை பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை இந்திய அரசு எவ்வித சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

---------------------

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட 37 வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று(4) உத்தரவிட்டது. அதாவது பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதி இணைத்தல் சத்திய கடிதம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் நகல் தொடர்பான பிரச்சனையின் என்பவற்றால் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பிலேயே மேற்படி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.   

---------------------

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கடந்த 20ம் தேதி முதல் இன்று(4) வரை மொத்தமாக 527 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் 482 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டதாகவும் 45 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  

----------------------

மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்காக முப்படைகளின் மூன்று குழுக்கள் நாளை விசேட விமானத்தில் மியன்மாருக்கு செல்ல உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை மருத்துவ உதவிகளை வழங்க வைத்தியர் குழு ஒன்றும் செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நில நடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3145 ஆக உயர்ந்துள்ளதுடன் 221 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

----------------------

உலகின் மிகச் சிறிய Pacemaker, அதாவது இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்த பயன்படுத்தும் கருவியை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அரிசியை விட சிறிய அளவில் காணப்படும் இது உடலில் செலுத்தப்படும் ஊசியின் முனைக்குள் சென்று விடக் கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் கண்டுபிடிப்பாக இது கருதப்படுகிறது. இதய பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கும் பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

---------------------

புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 1 முதல் 13 வரை சதோச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் அரசினால் வழங்க திட்டமிடப்பட்டிருந்த நிவாரண பொதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தலுக்குப் பின்னர் குறித்த நிவாரண பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளது.  

-------------------

காங்கேசன்துறைக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான சிவகங்கை கப்பல் சேவையானது செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் சீராக இடம்பெறுவதாக அந்தக் கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

------------------------

டொனால்ட் டிரம்ப் அறிவித்த 34 சதவீத பரஸ்பர வரிகளுக்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரியை அடுத்த வாரம் முதல் அமுல்படுத்த இருப்பதாக சீனா அறிவித்துள்ளது இது இரு நாட்டு வர்த்தகத்தையும் பெருமளவு பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது இதே வேலை அமெரிக்காவின் பங்குச் சந்தையானது வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                   xxxxxx
செய்தி சுருக்கம் 4/4/2025 - வெள்ளிக்கிழமை செய்தி சுருக்கம்  4/4/2025 - வெள்ளிக்கிழமை Reviewed by Irumbu Thirai News on April 05, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.