செய்திச் சுருக்கம்: 6-4-2025 ஞாயிற்றுக்கிழமை


இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (06) முற்பகல் அநுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவிற்குப் சென்றார். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் மோடி இலங்கை்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்த 4வது தடவை இதுவாகும். 

------------------ 

யாழ், சுழிபுரத்தில் சுடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து, கல்லறைகளையும் உடைத்து அதில் சுற்றுலா மையம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். 150இற்கும் மேற்பட்ட உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் , அச்சிறுமியின் உடலம் நீதிமன்ற உத்தரவில் குறித்த சுடுகாட்டிலையே புதைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதே வேளை சுடுகாட்டுக்காக வேறு பகுதியில் இரண்டு ஏக்கர் காணி ஒதுக்கி தருவதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

------------------  


வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. 

 ------------------ 

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த போது சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் OIC ஐ பதவி நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவத்தில் கடமை தவறியதாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

------------------ 


தேசிய மக்கள் சக்தியின் (NPP) கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். உயிரிழக்கும் போது வயது 38 ஆகும். 

------------------ 

நல்லாட்சி காலத்தில் தாம் தொடங்கிய திட்டமான 5,000 மெற்றிக் தொன் கொள்ளளவு கொண்ட நாட்டின் முதல் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்பாட்டு விவசாய சேமிப்பு களஞ்சியத்தை தம்புள்ளையில் இந்திய பிரதமர் மோடி இலங்கை ஜனாதிபதி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ தி சில்வா அறிக்கை ஒன்றை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். நல்லாட்சியின் தோல்வியால் குறித்த திட்டத்தை நிறைவு செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

------------------ 

அரச நிறுவனங்களில் திடக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக, அனைத்து அரச நிறுவனங்களும் நிலையான கழிவு முகாமை முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. அனைத்து அரசு நிறுவனங்களையும் 3R எண்ணக்கருவை கடைப்பிடிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்சுற்றறிக்கை நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் நிறுவனங்களுக்கு முறையான கழிவு முகாமைத்துவ திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

------------------ 

வவுனியா சிறைச்சாலைக்குள் பற்பசையினுள் போதைப் பொருளை மறைத்து எடுத்துச் சென்ற ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


------------------ 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் திரண்டு பெரியளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஹேண்ட்ஸ் ஆஃப்" (Hands Off) எனும் பெயரில், அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் 1,200 இடங்களில் பேரணிகள் நடந்துள்ளன. டிரம்ப் அமெரிக்க அதிபரானதிலிருந்து அவருக்கு எதிராக நடக்கும் மிகப்பெரிய போராட்டம் இது. ட்ரம்பின் புதிய வரிக் கொள்கைகள் குடிவரவு கட்டுப்பாடுகள் வெளியுறவு கொள்கை மாற்றங்கள் வேலைய இழப்புக்கள் போன்ற பல்வேறு காரணங்களை வைத்து இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன. 


------------------ 


இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு சென்ற பிரதமர் மோடி மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே அமைக்கப்பட்ட செங்குத்து தூக்கு பலமான பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார். இது கீழால் கப்பல் செல்லும்போது தானாக உயர்ந்து வழிவிடக்கூடிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது. 


------------------ 


தெற்கு காசாவில் கடந்த மார்ச் 23ஆம் தேதி அவசர கால ஊழியர்கள் 15 பேர் கொல்லப்பட்டமை தமது ராணுவ வீரர்களின் தவறு என இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. ஹெட் லைட் அல்லது ஒளிரும் விளக்குகள் இல்லாமல் சந்தேகத்திற்கிடமான முறையில் இரவு வேளை வாகனங்கள் நெருங்கி வந்ததால் ராணுவம் தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால் அதில் கொல்லப்பட்ட ஒரு அவசர கால ஊழியரால் பிடிக்கப்பட்ட காணொளி தற்போது வெளியாகி உள்ளது. அதில் குறித்து வாகனங்கள் ஒளிரும் விளக்குகளை எரிய விட்டிருப்பதை காண முடிகிறது. இதில் இஸ்ரேலின் பொய்யும் பொறுப்பற்ற தன்மையும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட நிலையில் தவறை ஒப்புக் கொண்டுள்ளது.
செய்திச் சுருக்கம்: 6-4-2025 ஞாயிற்றுக்கிழமை செய்திச் சுருக்கம்: 6-4-2025 ஞாயிற்றுக்கிழமை Reviewed by Irumbu Thirai News on April 07, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.