உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
Irumbu Thirai News
September 20, 2021
தற்போதைய டிஜிட்டல் பொருளாதார உலகில் தரவுகள் என்பது முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகிறது. ஒவ்வொருவரினதும் இப்படிப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெரிய சந்தையே இயங்கிக்கொண்டிருக்கிறது.
எனவே பொருளாதார கருமங்களுக்கு இப்படிப்பட்ட சகல தரவுகள், தகவல்கள் முக்கியமாக தேவைப்படுவதால் தற்போது இது தகவல் பொருளாதாரம் என்ற அடிப்படையில் செயல்படுகிறது.
எது தனிப்பட்ட தரவுகள்?
நாம் எந்த இணையத்தளத்திற்கு சென்றாலும் எம்மைப் பற்றி ஏதோ ஒரு சில தரவுகளை அவை பெற்றுக் கொள்கின்றன.
சில தளங்கள் நாம் எவ்வளவு நேரம் இணையத்தில் செலவழிக்கிறோம்? எந்த நேரத்தில் இணையத்தை பயன்படுத்துகிறோம்? எப்படிப்பட்ட தகவல்களைத் தேடுகிறோம்? என்ற பொதுவான விடயங்களை பெற்றுக் கொள்கின்றன.
இன்னும் சில இணையதளங்கள் இதற்கு மேலதிகமாக எமது பெயர், முகவரி, வயது, இமெயில், தொலைபேசி இலக்கம் போன்ற விடயங்களையும் பெற்றுக் கொள்கின்றன.
பொதுவான தரவுகளை பெற்றுக்கொள்வது பிரச்சினை அல்ல. ஆனால் குறித்த தரவுகளை வைத்து நபர் யார் என்பதை அடையாளம் காண முடியும் என்றால் அவை தனிப்பட்ட தரவுகளாக கருதப்படும். இவ்வாறான தகவல்களை பெறுவது தனிநபர் உரிமை மீறலாகும்.
கவனமாக இருப்பது எப்படி?
மிக முக்கியமான விடயம் என்னவென்றால் தேவைக்கு அதிகமான தகவல்களை வழங்க கூடாது. இதனால் இரு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒன்று, எம்மைப் பற்றிய அதிக தகவல்கள் மூன்றாம் நபருக்கு செல்கின்றன. மற்றையது, எம்மை அவர்களது தளத்தில் அதிக நேரம் செலவழிக்க வைப்பதற்கான வாய்ப்பை நாமே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.
உதாரணமாக, குறித்த தளம் ஒன்றில் மின்னஞ்சல் முகவரி கேட்கப்படாவிட்டால் நாம் அதை வழங்கக்கூடாது. ஆனால் கட்டாயம் மின்னஞ்சல் வழங்க வேண்டுமென்றால்
இப்படிப்பட்ட பொதுவான விடயங்களுக்காக வேறு ஒரு மின்னஞ்சல் முகவரியை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தனிப்பட்ட எமது மின்னஞ்சல் முகவரியை வழங்கக்கூடாது. எனவே பொதுவான விடையங்களுக்கு ஒன்றும் தனிப்பட்ட விடயங்களுக்கு ஒன்றும் என குறைந்தது இரு மின்னஞ்சல் முகவரிகளை பேணுவது சிறந்தது.
VPN பாவிப்பவர்கள் நினைப்பதுண்டு எம்மைப் பற்றிய தரவுகளை வலைத்தளங்களுக்கு பெறமுடியாது என்று. ஆனால் உண்மை அதுவல்ல. நாம் விபிஎன் பாவிக்கும் போது எமக்கு இணைய சேவை வசதி வழங்கும் நிறுவனங்களுக்குதான் அது தெரியாமல் போகும். ஆனால் நாம் செல்லும் வலைத்தளங்கள் எமது தரவுகளை பெற்றுக் கொள்கின்றன. எனவே விபிஎன் பயன்படுத்தும் போதும் கவனமாக செயல்பட வேண்டும்.
சில மென்பொருள்கள் அல்லது செயலிகளை நாம் குறிப்பிட்ட காலம் வரை தான் பயன்படுத்துகிறோம் என்றால் அதற்கென தற்காலிகமான தரவுகளை மட்டும் நாம் வழங்குவது போதுமாகும்.
சமூக ஊடக மென்பொருள் அல்லது செயலிகளை பதிவிறக்கம்(Download) செய்யும் போது நம்பகமான தளத்திலிருந்து மட்டுமே அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது மிகக்கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் எமது தனிப்பட்ட தரவுகளை அதில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
ஒரு மென்பொருள் அல்லது செயலியை நாம் பயன்படுத்த விரும்பினால் அது தொடர்பான தனிநபர் கொள்கை (Privacy Policy) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms and Conditions) மூன்றாம் தரப்பு மதிப்பாய்வு (Review) போன்றவற்றை அவசியம் பரிசோதித்தே முடிவெடுக்க வேண்டும்.
எமது தரவுகளை வழங்குவதால் என்ன நேர்ந்து விடப்போகிறது என்ற அலட்சியத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது வணிகர்களால் தகவலாகவும் பயன்படுத்தப்படலாம். தவறாகவும் பயன்படுத்தப்படலாம்.
எமது தனிநபர் உரிமை குறித்து முதலில் நாமே கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
Reviewed by Irumbu Thirai News
on
September 20, 2021
Rating: