இலங்கையில் சிதைந்த இந்தியாவின் துறைமுகக் கனவு: அடுத்த திட்டம் ஜெயிக்குமா?
irumbuthirai
August 30, 2020
கடந்த பொதுத் தேர்தலுக்கு சில வாரங்கள் இருக்கையில் இலங்கையின் அரசியல் புலத்தில் சூடு பிடித்த விவகாரம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான பிரச்சினை.
கடந்த நல்லாட்சி அரசில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை, இந்தியா, ஜப்பான் கூட்டு வர்த்தக முயற்சியாக முன்னெடுக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமையே சிக்கலுக்கான மூல காரணம்.
கொழும்பு துறைமுகம் பன்னெடுங்காலமாகவே கப்பல் போக்குவரத்திற்கு புகழ் பெற்றதாக காணப்பட்டது. இதன் ஆதிக்கத்திற்காக ஒரு காலம் ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் சண்டையிட்டுக் கொண்டன. காலனித்துவ யுகத்தின் பின்னர் இத்துறைமுகம் தேசிய மயப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்தன.
ஒரு காலம் உலகில் கொள்கலன் கையாள்கையில் உலகின் 7 ஆம் இடத்தில் இத்துறைமுகம் இருந்தது. காலப் போக்கில் பிராந்திய பொருளாதார நிலைமை மாற்றங்கள் இந்த நிலையில் மாற்றங்களைக் கொண்டு வந்த போதிலும் கொழும்பு துறைமுகமானது உலக அளவில் மிக முக்கிய துறைமுகமாக உள்ளது. கொள்கலன் கையாள்கையில் அமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்தின் அளவு விசாலமானதாக உள்ளது. ஜப்பானின் டோக்கியோ, இந்தியாவின் மும்பை துறைமுகங்களை விட அதிக கொள்கலன்களைக் கையாள்கிறது.
#சீனாவின் ஆதிக்கம்#
இவ்வாறான நிலையில் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் கேந்திர ஸ்தானத்தில் இருக்கும் இலங்கையின் அமைவிடம் காரணமாக பல்வேறு சர்வதேச சக்திகள் இலங்கை துறைமுகங்களை இலக்கு வைத்து காய் நகர்த்தி வருகின்றன.
அவ்வகையில் சீன அரசு இலங்கையின் ஹம்பாந்தோட்டையை மையப்படுத்தி துறைமுகம் ஒன்றை அமைக்க கடன் வழங்கியதுடன், அந்த கடனை மீள செலுத்துவதில் உள்ள சிரமத்தை கருத்திற் கோண்டு, அதை 99 வருட குத்தகைக்கும் எடுத்துள்ளது. அத்துடன் கொழும்பு தெற்கு முனையத்தையும் குத்தகைக்கு பெற்றுக் கொண்டுள்ளது.
#கிழக்கு முனையத்திற்காக இந்திய முயற்சி#
இந்நிலையிலேயே இந்தியா கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை கையகப்படுத்த கடும் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இணங்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் துறைமுகத்திற்கு உரிமை கோர முடியாது. அதற்காக பிரிதொரு
ஒப்பந்தம் அவசியம் என்ற போதிலும் இராஜதந்திர அழுத்தங்கள் வாயிலாக அதனை அடைந்து கொள்ள இந்தியா பாரிய பிரயத்தனங்களை மேற்கொள்கிறது.
ஒப்பந்தம் அவசியம் என்ற போதிலும் இராஜதந்திர அழுத்தங்கள் வாயிலாக அதனை அடைந்து கொள்ள இந்தியா பாரிய பிரயத்தனங்களை மேற்கொள்கிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செல்லப் பிள்ளையான அதானி குழுமமே இதன் உரிமையை பெற முயன்றது. ஏற்கனவே, பல இந்திய உற்பத்திகள் கூட இலங்கையின் துறைமுகங்கள் வாயிலாகவே சர்வதேச சந்தைக்கு செல்லும் நிலையில் இந்திய அரசு இவ்வாறான ஒன்றுக்கு முயற்சிப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
இந்தப் பின்னணியிலேயே துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட இரட்சத பழு தூக்கிகள் மூன்றும் இறக்கப்படாமல் கப்பலில் வைக்கப்பட்டிருந்தன. துறைமுக ஊழியரின் கடும் எதிர்ப்பினால் அது தரையிறக்கப்பட்டது.
அதன் பின்னர் அப்போதைய துறைமுகங்கள் அமைச்சர் திரு. ஜொன்ஸ்டன் பெர்னான்டோவினால் துறைமுகத்தை அதானி குழுமத்திற்கு வழங்கி துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் கடன்களை நீக்க வேண்டும் என்று ஒரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, மீண்டும் துறைமுக ஊழியர்கள் சத்தியாக்கிரகம் இருக்கும் நிலை வரை சென்றது.
இவ்வாறு பல வழிகளில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை கையகப்படுத்த முயன்ற இந்தியா அது சாத்தியமில்லாமல் போகும் நிலை உருவாகி வருவதை உணர்ந்துள்ளது.
#இந்தியாவின் பிரமாண்ட மாற்றுத் திட்டம்#
இந்நிலையில் இந்தியா அதன் மாற்றுத் திட்டத்தை முன்வைத்துள்ளது. அதுவும் மிகப் பிரமாண்டமாக.
இந்தியாவுக்கு சொந்தமான நிகோபார் தீவுகளில் பிரமாண்டமான துறைமுகம் ஒன்றை சுமார் 10 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார்.
பழைய பட்டுப் பாதை வர்த்தகத்தை மீளமைத்தல், கடல் வழி பட்டுப் பாதை, இணைக்கப்பட்ட முத்துமாலை என்ற பெயர்களில் கப்பல், வர்த்தக ஏகாதிபத்தியத்தை பிராந்தியத்தில் நிலை நிறுத்தும் சீனாவின் திட்டத்திற்கு இது பாரிய சவாலாக மாறலாம் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் புதிய திட்டத்தின் அடிப்படையில் நிக்கோபார் தீவுகளில் தீர்வையற்ற சுதந்திர களஞ்சியசாலை வசதிகளுடன் கூடிய துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
#வங்கக்கடலில் இந்திய சீனப் பலப் பரீட்சை#
உருவாகும் இந்த துறைமுகமானது கிழக்கு, மேற்கு கப்பல் போக்குவரத்தில் முக்கிய துறைமுகங்களாகக் காணப்படும் உலகின் மிகப் பெரிய துறைமுகமாக ஷங்ஹாய் போன்றவற்றிற்கு பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாத போதும் இலங்கையின் கொழும்பு மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களுக்கு கடும் போட்டியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது,
ஏற்கனவே, சீனா இலங்கை, பங்களாதேஷ், மியன்மார் போன்ற நாடுகளில் துறைமுகங்களை உருவாக்கி வங்காளவிரி குடாவில் இந்தியாவின் செல்வாக்கையும், அதிகாரத்தையும் ஒடுக்க முயற்சிக்கும் நிலையில் இந்தியாவின் இந்த நடவடிக்கை சீனாவின் மேற்படி துறைமுகங்களின் வர்த்தக முக்கியத்துவத்தை பெருமளவு குறைக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.
உலக சனத்தொகையில் 36% ஐத் தன்னகத்தே கொண்ட மேற்படி இருநாடுகளுக்கும் இடையே இராணுவ, பொருளாதார ரீதியாக பல முரண்பாடுகள் உள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர் இந்திய எல்லையில் சீன இராணுவ பிரவேசம் நிகழ்ந்ததாக தெரிவித்த இந்தியா பதில் தாக்குதல்களையும் நடாத்தி இருந்தது. அவ்வாறே சீனாவின் பல மென்பொருள்களுக்கு இந்தியாவில் தடையும் விதிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் வளைகுடாவில் அதிகரித்து வரும் சீன செல்வாக்கை கட்டுப்படுத்துவது, இலங்கையில் துறைமுகங்களில் சீனா மேற்கொண்டுள்ள பொருளாதார முதலீடுகளை பலனற்றதாக ஆக்குவது, துறைமுகத்தை தர மறுக்கும் இலங்கையை தமது பிடிக்குள் கொண்டு வருவது அல்லது துறைமுகத்திற்கு உணரக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்துவது போன்ற பாரிய திட்டங்களுடன் இந்தியா இந்த பிரமண்டமான திட்டத்திற்கு தயாராகி வருகிறது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வருமா? அது வங்காளவிரி குடா கடலில் இராணுவ சமநிலையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது?, இலங்கையின் பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் போன்ற விடயங்களுக்கு காலம் பதில் சொல்லும்.
- fபயாஸ் MA fபரீட்.
இலங்கையில் சிதைந்த இந்தியாவின் துறைமுகக் கனவு: அடுத்த திட்டம் ஜெயிக்குமா?
Reviewed by irumbuthirai
on
August 30, 2020
Rating: