திவுலபிட்டிய கொரோனாவும் அதன் பின்னரான அதிரடி நிகழ்வுகளும்
irumbuthirai
October 05, 2020
திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சுகயீனம் காரணமாக கடந்த தினம் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் குணமாகி வைத்தியசாலையில் இருந்து வௌியேறும் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கம்பஹா வைத்தியசாலையின் பணிபுரியும் 15 பேரும் மற்றும் குறித்த பெண் தொழில் புரியும் தனியார் நிறுவனத்தின் சுமார் 40 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நடைபெற்ற அதிரடி நிகழ்வுகள் வருமாறு:
- திவுலபிடிய, மினுவங்கொடை, வெயாங்கொட போன்ற பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிப்பு.
- நாட்டிலுள்ள சகல அரச, தனியார், கத்தோலிக்க மற்றும் சர்வதேச பாடசாலைகளும் திங்கள் (05) முதல் மறு அறிவித்தல் வரை மூடல்.
- கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை தனியார் வகுப்புக்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு தடை.
- அனாவசியப் பயணங்களைத் தவிர்த்து கொள்ளுமாறு நாட்டு மக்களிடம் இராணுவத்தளபதி வேண்டுகோள்.
- மகர சிறைச்சாலை மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு சிறை கைதிகளை பார்க்க வருபவர்களுக்கு மறு அறிவித்தல் வரை தடை.
- களனி பல்கலைக்கழகம், நைவல உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் கம்பஹாவில் உள்ள விக்ரமராச்சி ஆயுர்வேத நிறுவனம் திங்கள் (05) முதல் அடுத்த வெள்ளிக்கிழமை வரை மூடப்படும். மாணவர்களையும் வெளியேறுமாறு அறிவிப்பு.
- திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பிரதேசங்களில் உள்ள இராணுவ, விமானப்படை, கடற்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்த அனைவரையும் மீள் அறிவித்தல் வரை சேவைகளுக்கு திரும்ப வேண்டாமென இலங்கை இராணுவம் அறிவிப்பு.
- சகல பாலர் பாடசாலைகளும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடல்.
- உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கை கேட்பவே பயணிகள் ஏற்றப்பட வேண்டும் என அறிவிப்பு.
- அரச நிறுவனங்களில் திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொது மக்களுக்கான தினம் இந்த வாரம் இடம்பெறமாட்டாது.
- பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும் என புகையிரத திணைக்களம் அறிவிப்பு.
- திவுலபிடிய பெண்ணின் 16 வயதுடைய மகளுக்கும் கொரோனா தொற்று என அறிவிக்கப்பட்டு IDH வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைப்பு.
- திவுலபிடிய பெண் பணிபுரிந்த தனியார் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 1600 பேருக்கு திங்கட்கிழமை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள திட்டம்.
- மதரஸாக்களில் தங்கியிருக்கும் மாணவர்களை வீடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வேண்டுகோள். மற்றும் குர்ஆன் மத்ரஸா, ஹிப்ல் மத்ரஸா, பகுதிநேர மத்ரஸா, மக்தப் மற்றும் அஹதியா பாடசாலை என்பன மறு அறிவித்தல் வரை மூடல்.
- ஊரடங்கு பிரதேசங்களில் வசிக்கும் துறைமுகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு திரும்ப வேண்டாம் என அறிவிப்பு.
- Irumbuthirainews.
திவுலபிட்டிய கொரோனாவும் அதன் பின்னரான அதிரடி நிகழ்வுகளும்
Reviewed by irumbuthirai
on
October 05, 2020
Rating: