அரசியல் களத்தில் திரைக்கு பின்னால்...... - சமகால அரசியல் பார்வை..
irumbuthirai
October 11, 2020
கடந்த வாரங்களில் மிக சூடாக இருந்த அரசியல் தலைப்பு அரசியலமைப்பிற்கு முன் மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம். எனினும் கடந்த வார இறுதியில் திடீர் என்று ஏற்பட்ட கோவிட் 2 ஆம் அலை காரணமாக 20 இன் அரசியல் சூட்டை தாண்டி கோவிட் அரசியல் அரங்கில் சூடான பேசு பொருளாக மாறியது.
கடந்த மார்ச் இல் ஆரம்பித்த முதல் அலை வெற்றிகரமாக நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதில் அரசாங்கம், இராணுவம், சுகாதார அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்பு மெச்சத்தக்கது. இத்தகைய பின்னணியில் எழுந்திருக்கும் இரண்டாம் அலை மிக வீரியமாக எழுந்திருக்கிறது. ஏற்கனவே, மோசமான கடன் சுமையில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஈஸ்டர் தாக்குதல், மத்திய வங்கி பிணை முறி மோசடி, தற்போது கோவிட் என நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த இரண்டாவது அலை குறித்து அரசு கரிசனையுடன் செயலாற்ற ஆரம்பித்துள்ளது.
லொக்டவுன் போன்ற ஒன்றிற்கு செல்வதால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பு, மேலதிக சுமை ஒரு புறமும், சமூக பரவல் ஏற்படாமல் கட்டுப்படுத்தலில் எதிர்நோக்கும் சவால் மறுபுறமும் என பாக்கு வெட்டிக்கு அகப்பட்ட பாக்கு போல அரசின் நிலை உள்ளது.
கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அத்துடன் சுகாதார சேவையில் ஈடுப்பட்டுள்ளோருக்கு எவ்வித விஷேட சலுகைகளும் வழங்கப்படாமை குறித்தும் அரசின் கவனத்தை ஈர்த்ததுடன், தனிமைப்படுத்தப்படும் சுகாதார ஊழியர்களுக்கு தனியான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். அத்துடன் சுகாதார துறை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டமை குறித்தும் அவர் பாராளுமன்றில் பேசினார்.
#ஆளும் தரப்புக்குள் தொடரும் 20 சர்ச்சைகள்#
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கூட்டம் கடந்த வாரம் கூட்டப்பட்டிருந்தது. ஜனாதிபதியினால் கூட்டம் கூட்டப்பட்டிருந்த போதிலும் கோவிட்-19 2 ஆம் அலை காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலைமையினால் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அமைச்சர்களான தினேஷ் மற்றும் ஜோன்ஸ்டன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இறுதியாக இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர 20 தொடர்பில் கேள்வி எழுப்பினார். "என்ன இந்த 20. நிறைய பேர் எம்மிடம் இது பற்றி கேட்கின்றனர். எனக்கு என்றால் 20 பற்றி ஒன்றும் தெரியாது. இது தொடர்பில் எமக்கு தெளிவூட்டுங்கள். 19 க்கு எதிராக வாக்களித்த ஒரே உறுப்பினர் நான். இப்போது 20 ஐயும் எதிர்க்குமாறு சில அமைப்புக்கள் எம்மிடம் சொல்லி வருகின்றன" எனத் தெரிவித்தார்.
இதற்கென பிரதமருடன் தனியான பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்து தருவதாக தினேஷ் மற்றும் ஜோன்ஸ்டன் தெரிவித்தனர்.
அரச தரப்பு பா.உ விஜயதாச ராஜபக்ஷ 20 தொடர்பில் அரசுடன் முரண்பட்ட கொள்கையில் உள்ளார். தனது மனசாட்சிப்படி 20 க்கு ஆதரவு வழங்க முடியாத நிலை இருப்பதாக அவர் ஜனாதிபதிக்கு நீண்ட கடிதம் ஒன்றை கடந்த வாரம் எழுதினார். அதன் பிரதி பிரதமருக்கு வழங்கப்பட்டது. கடந்த வாரம் இடம்பெற்ற ஆளும் கட்சி பா.உ கூட்டத்திலும் இவர் கலந்து கொள்ளவில்லை.
#20 தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவு படுத்தல்#
20 தொடர்பில் தெளிவுபடுத்த கோரி ஆளும் தரப்பு உறுப்பினர்கள் ஊடகங்கள் வாயிலாக பேசும் அளவிற்கு சென்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அது தொடர்பில் கூட்டம் ஒன்றை கூட்டியிருந்தார் பிரதமர்.
அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் அலி சப்ரி ஆகிய இருவருக்கும் 20 தொடர்பில் தெளிவு வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
#ஆளும் கட்சி பின்வரிசை உறுப்பினர்களின் நலன்புரிச் சங்கம்#
ஆளும் கட்சியின் பொறுப்புக்கள் எவையும் அளிக்கப்படாத பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தமக்கு பொறுப்புக்கள் வழங்கப்படாமை குறித்து அதிருப்தியுடனேயே உள்ளனர்.
குறைந்த பட்சம் பிரதேச ரீதியான அபிவிருத்திக் குழுக்களின் தலைவர் பதவிகளையாவது பெற்றுத்தர வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. இது தொடர்பில் பாராளுமன்ற ஓய்வறையில் ஓரிரு சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன. பிரமித பண்டார தென்னக்கோன், சுமித், திஸ்ஸகுட்டி ஆரச்சி, ஜகத் குமார, நளின் பெர்னாண்டோ, அஜித் ராஜபக்ஷ போன்றவர்கள் இதில் முன்னணியில் இயங்கினர். இவர்கள் கடந்த புதன் கிழமை பாராளுமன்ற ஓய்வறையில் சந்தித்து கலந்துரையாடினார்.
தம்முடைய தனிப்பட்ட ஆளணியினரை கூட முறையாக நியமித்துக் கொள்ள முடியாமல் தாம் இருப்பதாகவும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்கள் முழு அதிகாரங்களையும் எடுத்து செயற்படுவதால் பின்வரிசை உறுப்பினர்களுக்கு செய்வதற்கு எதுவுமே இல்லை என்று குறைப்பட்டுக் கொண்டனர்.
பதுளை பா.உ சாமர சம்பத் தசநாயக்க எழுந்து "என்ன பிரச்சனை இருப்பினும் நாம் அரசுக்காக முன்வந்து பேசுகிறோம். நான் சு.க உறுப்பினர். ஆனால் அரசுடன் எப்போதும் நிற்கிறோம்" என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சியில் இருந்து வரும் சவால்களை முறியடிக்க ஒரு குழுவாக நாம் முகம் கொடுக்க வேண்டும் என்று பிரமித கூற, பின்வரிசை உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்திருப்பது அரசைப் பாதுகாக்கும் அதே வேளை மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காகவுமே என்று திஸ்ஸகுட்டி ஆராச்சி கூறினார்.
இந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அவ்விடத்தால் பிரதமர் வந்தார். "என்ன எல்லோரும் சேர்ந்திருக்கிறீர்கள்" என்று பிரதமர் கேட்டார். "இல்லை sir. நாங்கள் நலிவுற்றோர்கான நலன்புரி சங்கம் ஒன்றை உருவாக்கினோம்" என்று திஸ்ஸகுட்டிஆராச்சி கூற, "நல்லது. ஏதாவது இருப்பின் எனக்கும் சொல்லுங்கள்" என்று கூறிவிட்டு பிரதமர் நகர்ந்து சென்றார். இவர்கள் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, ஆளும் கட்சி பிரதான கொரடா ஜோன்ஸ்டன் ப்ராணாந்து ஆகியோரிடம் தமது சோகக்கதைகளை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் பசில் ராஜபக்ஷவிடமும் சொல்வதற்கு முடிவு செய்து, ஜகத் குமார பா.உ அவர்கள் அது தொடர்பில் தொலைபேசி ஊடாக அறிவித்தார்.
#பந்துலவின் முகக் கவச விற்பனை#
கோவிட் 19 தொற்றினால் முகக் கவச விற்பனை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட முகக் கவசங்களுக்கு பதிலாக உள்ளூர் உற்பத்தியாளர்களால் மேற்கொள்ளப்படும் தயரிப்புக்களை ஊக்குவிக்க வணிக அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை மேற்கொண்டார்.
பொதுவாக சந்தையில் 50, 60 ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படும் முகக் கவசம் ஒன்றை 20 ரூபாய் விலையில் விற்பனை செய்யும் நடவடிக்கைய அமைச்சர் முன்னெடுத்துள்ளதுடன் கடந்த புதன் கிழமை ஒரு பெட்டி முகக் கவசங்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பாராளுமன்றத்துக்கு சென்று ஒவ்வொரு பா.உ. கும் 5 முகக் கவசம் வீதம் பங்கிடுமாறு ஊழியர் ஒருவரிடம் வழங்கினார்.
#கொரானாவின் முன் பின் தங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் தினமு (வெல்வோம்)#
ஐ.ம.ச. இன் பா. உ. கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. "தற்போது நாடு அபாயகரமான நிலையில் உள்ளமையால் நாம் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்" என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் ஆரம்பித்து வைத்தார்.
"நீங்கள் முதல் அலை ஏற்பட முதலே பாராளுமன்றத்தில் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்தீர்கள். அரசு அதனை கணக்கில் எடுக்கவில்லை. அதன் விளைவாக மாதக் கணக்கில் நாட்டை முடக்கி வைக்க வேண்டி ஏற்பட்டது. தற்போது இரண்டாம் அலை உருவாகியுள்ளது.
இம்முறையும் அரசு இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை" என்று பா.உ ஜே. சி அலவதுவல கூறினார்.
சற்று தாமதமாக வந்து இணைந்து கொண்ட பா.உ ஹரின் 'தினமு' வேலைத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தார். கடந்து 3 வாரங்களாக வார இறுதியில் நடந்த சிறு கூட்டங்கள், அதன் நன்மைகள் குறித்து இங்கே கலந்துரையாடப்பட்டது. முடிவில் அரசியல் ரீதியாக இக்கூட்டங்கள் பாரிய நன்மைகளை கொண்டு வந்ததாக பரவலாக சொல்லப்பட்டது.
எனினும் நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு அவற்றை ஒத்தி வைக்க சஜித் கேட்டுக் கொண்டதுடன், சஜித் ஐ மையப்படுத்தி விகாரைகளில் நடைபெறும் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
#கோவிட் நிழலில் 20 ஐ நகர்த்தல் தொடர்பில் எதிர்க்கட்சியின் நகர்வு#
கோவிட் அவலங்களிடையே 20 ஐ நகர்த்தி செல்ல அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்க்கட்சி ஆலோசனை செய்தது.
20 ஆம் திருத்தத்தின் வாயிலாக கணக்காய்வு நடவடிக்கைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று பிரதமர் சொல்கிறார். ஆனால், விமல் வீரவங்ச கணக்காய்வு அவசியம், கணக்காய்வு ஆணைக்குழு அவசியம் என்கிறார். கடிதம் எழுதுகிறார். உடனே பிரதமர் பதில் அறிக்கை விடுக்கிறார். அரசினுள் பிளவுகள் உள்ளது என்பது இதன் மூலம் புலப்படுகிறது.
அவ்வாறே அரசில் இருக்கும் அரசியலமைப்பு நிபுணரான விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதுதி 20 ஆவது திருத்தத்திற்கு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். அது மட்டுமல்ல இது மிகப் பயங்கரமான ஒரு திருத்தம் என்றும் சொல்லி இருக்கிறார் என மனுஷ நாணயக்கார எம். பி. குறிப்பிட்டார். கணக்காய்வு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மிகுந்த அவதானமாக உள்ளது. பிரதமரின் அறிக்கைக்கு பதிலும் அளித்தது. அதில் 20 திருத்தம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
#சீன உயர்மட்ட ராஜதந்திரியின் வருகை#
கடந்த ஓரிரு நாட்களில் அரசியல் அரங்கில் பேசப்பட்ட முக்கிய விடயம் சீன கமியூனிஸ்ட் கட்சியின் பொலியுட் பியூரோ உறுப்பினரும், வெளிவிவகார ஆலோசனை கமிட்டி தலைவருமான இராஜதந்திரி ஒருவரின் திடீர் விஜயமாகும்.
கோவிட் நிலை காரணமாக உலக அளவில் இராஜதந்திர பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சீன இராஜாதந்திரிகள் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றால் வருகை தந்தமை குறித்து பாராளுமன்றத்தில் காரசாரமான வாத விவாதங்கள் எழுந்தன.
குறிப்பாக குறித்த இராஜாதந்திரியை சந்திக்க செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாயிலாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோவிட் தொற்று ஏற்படலாம் என்று எதிர்க்கட்சி தொடர்ந்தும் சொன்னதுடன், இந்த அவதானம் மிக்க சூழலில் இந்த அவசர சந்திப்பு எதற்கு என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
இவை எல்லாம் ஒருபுறம் நடக்க சீன இராஜதந்திரி இலங்கைக்கு வந்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து விட்டு சென்றார்.
#முற்றும் அமெரிக்க - சீன முறுகல். பலிகடா இலங்கையா?#
பொதுவாக அமெரிக்காவில் ரிபப்ளிகன் கட்சி ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும் வன்முறை மூலம் பிரச்சனைகளை தீர்க்க முயல்வது இயல்பு.
இம்முறை அந்த எல்லையையும் தாண்டி டிரம்ப் இன் செயற்பாடுகள் சென்று கொண்டிருக்கின்றன. பகிரங்கமாக சீனாவுடன் முரண்பட்ட கொள்கையை அவர் கடைபிடிக்கிறார். குறிப்பாக சீன நிறுவனங்கள் மீது விதித்த தடைகள், கொரானா வைரஸ் ஐ சீன வைரஸ் என்றது, சீனாவை மட்டம் தட்ட இந்தியாவுடன் மிக நெருங்கிய உறவை உருவாக்கி வருவது என நிறைய. அந்த வகையில் அண்மையில் அமெரிக்க, இந்திய, அவுஸ்திரேலிய, ஜப்பானிய கூட்டு ஒன்று உருவாகி இருக்கிறது.
சுதந்திர இந்து பசுபிக் போக்குவரத்து இதன் நோக்கம் என்று சொல்லிக் கொண்ட போதிலும், அமெரிக்க, சீன தூதரக மட்ட அதிகாரிகள் எதிர் எதிர் நாடுகளை பகிரங்கமாக விமர்சனம் செய்யும் அளவுக்கு நிலைமைகள் சீரின்றி உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பெரும்பாலும் இந்து சமுத்திரக் கடல் பரப்பில் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாக இருக்கலாம். இங்கேதான் இலங்கை பலியாடாக வருகிறது. மேற்படி எல்லா வல்லரசுகளுக்கும் இலங்கை மீது ஒரு கண் உண்டு. நாம் ஏற்கனவே குறிப்பிட்ட சீன இராஜதந்திரியின் விஜயத்திற்கும் மேற்படி நாளு வலய வல்லரசுகளின் கூட்டத்திற்கும் தொடர்பு இருக்கலாம்.
1990 ல் சோவியத் வீழ்ச்சியின் பின்னர் தற்போது மீண்டும் ஒரு அமெரிக்க, சீன பனிப்போர் உருவாகி வருகிறது. இது இந்து சமுத்திரத்தை மைய்யப்படுத்தி உருவாகி உள்ளது.
தொடர்ந்தும் அணிசேரா கொள்கையை கடைப்பிடித்து வந்த இந்தியா அமெரிக்கவுடன் ஒரு அச்சில் வந்து இணைந்தது சீனாவுடன் உள்ள போட்டியில் வெல்ல முடியாத இயலாமையின் வெளிப்பாடா? மோடி போன்ற பாசிச ஆட்சியாளரின் மற்றோரு முட்டாள் முடிவா அல்லது இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றமா என்பது புரியாத புதிர்.
எனினும் இந்த புதிய பனிப்போர் நிலைமையில் இலங்கை முக்கிய புள்ளியாய் திகழப் போகிறது.
13 திருத்தம் தொடர்பில் இந்திய பிரதமரின் கருத்து, அதற்கான இலங்கை அமைச்சரின் பதில்கள், அமெரிக்க MCC ஒப்பந்தம், அமெரிக்க இராஜாதந்திரிகள் வருகை, இலங்கை மீதான சீன அக்கறைகள் என்பன இந்த பனிப்போரின் இலங்கையின் வகிபாகத்தை முற்கூட்டியே வெளிக்காட்டி நிற்கின்றன.
எதிர்வரும் நாட்கள் மிக தீர்மானம் மிக்கவையாக மாறும். 20 ஆம் திருத்த சட்டம், சீன பிரசன்னத்திற்கான இந்திய, அமெரிக்க எதிர்வினைகள், கோவிட் இன் நிலை, இந்திய பிரதமர் மீது இலங்கை அமைச்சர் சொன்ன குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான இந்திய எதிர்வினைகள் என்பன அரசியல் அரங்கை சூடுபிடிக்க செய்யும். கோவிட் நிலைகள் பொருளாதார செயற்பாடுகள் மீது ஏற்படுத்தப் போகும் தாக்கம் இவை எல்லாவற்றையும் விட அடித்தட்டு மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும். பார்க்கலாம் அடுத்த வாரம்.
fபயாஸ் MA fபரீட்.
அரசியல் களத்தில் திரைக்கு பின்னால்...... - சமகால அரசியல் பார்வை..
Reviewed by irumbuthirai
on
October 11, 2020
Rating: