திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-10-2020 நடந்தவை...

October 13, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 8ம் நாள் அதாவது திங்கட்கிழமை (12) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயர்தர பரீட்சை இன்று ஆரம்பமானது. இன்று முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் 2648 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்காக 362,824 மாணவர்கள்கள் தோற்றுகின்றனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காக 12 மேலதிக மத்திய நிலையங்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவிப்பு. 
  • ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை குறித்த பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் பானதுறை மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மாணவியும் இவரும் பல்கலைக்கழக விடுதியில் ஒரே அறையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
  • கந்தான, நாகொட பகுதியில் உள்ள இலங்கை மின்சார (தனியார்) நிறுவன ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிறுவனத்தில் கடமையாற்றி அதிகாரி ஒருவரின் மகள் பிரண்டிக்ஸ் கைத்தொழிற்சாலையில் கடமையாற்றியதாக தெரிவிப்பு. 
  • தொழில் திணைக்களத்தின் பொது சேவைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் பிராந்திய அலுவலகங்கள் மூலம் செய்து கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ. விமலவீர தெரிவித்துள்ளார். தற்போதைய கொரோனா வைரஸ் (கொவிட் 19) அச்சுறுத்தல் காரணமாக சேவைகளைப் பெற கொழும்பின் நாரஹன்பிட்டியவில் உள்ள தலைமை அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டே தொழில் ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் பொது சேவைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் பரவலாக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அனைத்து சேவைகளையும் பிராந்திய அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிப்பு. 

  • மன்னார் மாவட்டத்தில் நேற்று மூடப்பட்ட இரு கிராமங்களும் இன்று (12) மீண்டும் திறப்பு. 
  • சிலாபம் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக முதலாவது பிசிஆர் பரிசோதனையில் இனங்காணப்பட்ட போதிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிசிஆர் பரிசோதனைகளின் ஊடாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டதாக அறிவிப்பு. 
  • மாத்தறை, வெல்லமடம பகுதியில் உள்ள ருகுணு பல்கலைகழக மாணவி ஒருவரின் தந்தை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த மாணவி மற்றும் அவருடன் விடுதியில் தங்கியிருந்த மற்றுமொரு மாணவி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த 27 ஆம் திகதி குறித்த தந்தை மாணவியை பார்ப்பதற்காக விடுதிக்கு வருகை தந்ததாகவும் அவர் கந்தான பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றுபவர் எனவும் தெரிவிப்பு. 
  • ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் சீதுவ, ஆண்டியம்பலம பிரதேச பாடசாலை ஒன்றின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியை. இதன் காரணமாக குறித்த பாடசாலையின் மாணவர்கள் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் (கொவிட் 19) அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற்கொண்டு வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு. 
  • தற்போதைய சூழலில் நாம் கொரோனா வைரஸ் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் (கொவிட் 19) ஒரு உலகளாவிய தொற்றுநோய். அதன் பரவல் இன்று அல்லது நாளை முடிவடையாது. இலங்கையில் மட்டும் இதனை கட்டுப்படுத்தி சுதந்திரமாக இருக்க முடியாது. எனவே, கொவிட் - 19 தொற்றுநோய் உலகத்தில் இருந்து ஒழிக்கப்படும் வரை நாம் கொவிட் 19 உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். முழுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து சமூக செயற்பாட்டை இடைக்கிடையே நிறுத்துவதன் ஊடாக அதனை கட்டுப்படுத்த முடியாது என பிரதம தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 
  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய தேவை பொருட்கள் விநியோகிக்கும் மத்திய நிலையங்களை நாளை (13) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 
  • கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஶ்ரீலங்கன் சரக்கு பிரிவின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. 
  • தொம்பே, பூகொட பகுதியை சேர்ந்த ஆடை கைத்தொழிற்சாலை ஊழியரான பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • மினுவங்கொட கொவிட் கொத்தணியின் எண்ணிக்கை 1397 ஆக அதிகரித்தது. அதனடிப்படையில் இலங்கையில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4844 ஆக அதிகரித்தது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 13, 2020 Rating: 5

இன்று முதல் மூடப்படும் வர்த்தக நிலையங்கள்...

October 13, 2020

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் 18 பிரதேசங்களில் இன்று (13) தொடக்கம் 3 தினங்களுக்கு வர்த்தக நிலையங்களைத் திறப்பது மற்றும் மருந்தகங்களை திறப்பது தடை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். 
கம்பஹா பொலிஸ் வலையத்திற்குள் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த பிரதேசங்களில் 
உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையில் திறந்திருப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. 
ஆனால் இந்த பிரதேசங்களில் மூன்று நாட்களுக்கு முழுமையாக பொது மக்கள் போக்குவரத்து மற்றும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுவதை வரையறுப்பதற்காக மீண்டும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக இன்று செவ்வாய், புதன் மற்றும் வியாழன் அகிய மூன்று தினங்களில் இந்த நடவடிக்கை இடம்பெறும். 
இதன் பின்னர் இது தொடர்பான நிலைமை குறித்து அறிவிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இந்த பிரதேசங்களின் ஊடாக வாகனங்கள் பயணிக்க முடியும். இருப்பினும் இந்த பிரதேசத்தில் பயணிகளை வாகனங்களில் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். உயர்தர பரீட்சை பரீட்சாத்திகளுக்கு இதனால் எந்தவித இடையூறும் ஏற்படாது என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் மூடப்படும் வர்த்தக நிலையங்கள்... இன்று முதல் மூடப்படும் வர்த்தக நிலையங்கள்... Reviewed by irumbuthirai on October 13, 2020 Rating: 5

கொரோனா உறுதியான ஆசிரியை...

October 13, 2020

ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் சீதுவ, ஆண்டியம்பலம பிரதேச பாடசாலை ஒன்றின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியை. இதன் காரணமாக குறித்த பாடசாலையின் மாணவர்கள் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா உறுதியான ஆசிரியை... கொரோனா உறுதியான ஆசிரியை... Reviewed by irumbuthirai on October 13, 2020 Rating: 5

தனிமைப்படுத்தலிலிருந்து தப்பிய போலீஸ் இன்னும் மூவரை அழைத்துச் சென்றார்

October 12, 2020

களுத்துறை, இலங்கை போலீஸ் கல்லூரியில் தனிமைப்படுத்தலில் இருந்த மினுவாங்கொடை போலீஸ் நிலையத்தில் போலீஸ் சாரதியாக கடமையாற்றிய நபர் கடந்த வெள்ளி இரவு தப்பிச் சென்றுள்ளார். 
பொலீஸ் கல்லூரி வளாகத்திலிருந்து களுத்துறைக்கு முற்சக்கர வண்டியில் சென்ற இவர் மதுபானம் அருந்தி களுத்துறை, கமகொட, ரஜவத்த பிரதேச வீடொன்றுக்கு அருகாமையில் விழுந்து கிடந்துள்ளார். 
இதைக் கண்ட வீட்டார் 
களுத்துறை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினார். அங்கு வந்த போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதும் தான் விடயம் வெளிச்சத்திற்கு வந்தது. 
பின்னர் இவரையும் இவரை அழைத்து வரச் சென்ற உப பொலிஸ் பரிசோதகர், போலீஸ் கான்ஸ்டபிள், சாரதி ஆகியோர் போலீஸ் கல்லூரிக்கே தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 
தகவல் வழங்கிய குறித்த வீட்டார் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 
அத்துடன் இவர் சென்ற முற்சக்கர வண்டி சாரதியை போலீசார் தேடுகின்றனர். 
இதேவேளை குறித்த போலீஸ் நபர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
நிவ்ஸ்வய.
தனிமைப்படுத்தலிலிருந்து தப்பிய போலீஸ் இன்னும் மூவரை அழைத்துச் சென்றார் தனிமைப்படுத்தலிலிருந்து தப்பிய போலீஸ் இன்னும் மூவரை அழைத்துச் சென்றார்  Reviewed by irumbuthirai on October 12, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-10-2020 நடந்தவை...

October 12, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 7ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது. நாடு பூராகவும் 2,936 மத்திய நிலையங்கள். 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 பேர் பரீட்சைக்கு தோற்றினர். சிங்கள மொழிமூலம் 248,072 மாணவர்கள், தமிழ் மொழிமூலம் 83,622 மாணவர்கள். இதற்கு மேலதிகமாக இம்முறை Covid-19 ற்கு சிகிச்சை அளிக்கப்படும் IDH வைத்தியசாலையிலும் 5 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். 
  • களனி பல்கலைகழக மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. குறித்த மாணவியின் தந்தை மினுவங்கொட கைத்தொழிற்சாலையின் ஊழியர் என தெரிவிக்கப்படுகின்றது. 
  • தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சுமார் 80 கடைகளுக்கு கொரோனா தொற்றாளர்கள் இருவர் சென்றுள்ளதாக நேற்றைய (10) தினம் இனங்காணப்பட்டதை அடுத்து பொருளாதார மத்திய நிலையம் கிருமி தொற்று நீக்கபட்டுள்ளது. பிரண்டிக்ஸ் கைத்தொழிற்சாலை ஊழியருடன் தொடர்பில் இருந்த திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவரும் அவருடைய லொறி ஓட்டுனரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது அவர்கள் இருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டிருந்தது. குறித்த இருவரும் பழகிய தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தை சேர்ந்த 100 இற்கும் அதிகமானவர்களின் பிசிஆர் பரிசோதனைகளை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

  • அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் இன்று முதல் (11) நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவிப்பு. 
  • பொதுமக்களுக்கு தபால் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புகொள்வதற்கு வாய்ப்பளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத் துறை வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளின் படி ஜனாதிபதி செயலகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்கள் கடமையில் ஈடுபடுவதன் காரணமாக, பொதுமக்கள் வருகைத் தருவதன் ஊடாக ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் தபால் ஊடாகவும் தொலைபேசி ஊடாகவும் மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் நோக்கில் இவ்வாறு பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு - தொலைபேசி- 0114354550 / 0112354550 தொலைநகல்- 011 2348855 ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் - 0112338073 ஜனாதிபதி நிதியம் - 0112354354 (4800 / 4814 / 4815 / 4818) தொலைநகல்- 011 2331243 
  • வவுனியா, சிறீபாத மற்றும் மகரகம தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு கொரோனா சிறப்பு தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்துவதற்காக ராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்டது. 
  • மன்னார் மாவட்டத்தின் பட்டிதோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய இரு கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்ட தாக ராணுவ தளபதி அறிவிப்பு. 
  • அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சை பெறும் நோயாளர்களின் மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கு பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை செயற்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானம். அதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமையில் இருந்து குறித்த மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களினுள் முதலில் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பதில் சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.ஶ்ரீதரன் மேலும் தெரிவிப்பு. 
  • கொவிட் தடுப்புக்காக சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள பரிந்துரைகளை சட்டமாக்கி வர்த்தமானியில் வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு. எதிர்வரும் இரு தினங்களில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக புதிய சட்டம், வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வௌியிடப்படும் எனவும், அதன்படி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்க நீதிமன்றத்திற்கு வாய்ப்பளிக்கப் படும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார். குறித்த பிரதேசங்களில் முகக் கவசங்கள் அணியாதவர்களுக்கு, சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு, சில வளாகங்களில் நுழையும் போது உடல் வெப்பத்தை அளவீடு செய்ய இடமளிக்காத நபர்களுக்கு எதிராக குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் நோய் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள பிரதேசங்களில் குறித்த சுகாதார வழிகாட்டல்களை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை ஆகிய இரண்டு தண்டனையோ அல்லது ஒரு தண்டனையோ நீதி மன்றத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 
  • இன்று (11) இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களுள் புதிதாக மூன்று வைத்தியர்களும் அடங்குவர் என Covid-19 தடுப்பு தேசிய மத்திய நிலையம் அறிவிப்பு. மாவனல்லை பிரதேசத்தில் இருவரும் கேகாலை பிரதேசத்தில் ஒருவரும் அடங்குவர். இவர்கள் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியோடு (Cluster) தொடர்புபட்டவர்கள் எனவும் அந்த நிலையம் மேலும் அறிவிப்பு. ஏற்கனவே கம்பஹா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  • இன்றைய தினம் மொத்த தொற்றாளர்கள் 124 ஆகும். இதில் 121 பேர் மினுவாங்கொட தொழிற்சாலையோடு சம்பந்தப்பட்டவர்கள். 3 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 4750 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 12, 2020 Rating: 5

தாய் மரணமானது தெரியாமல் புலமைப்பரிசில் எழுதிய மாணவன்

October 12, 2020

 


எல்பிட்டிய, கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த கவீஷ சதுரங்க தனது அம்மா இறந்த விடையம் தெரியாமல் புலமைப்பரிசில் எழுதிய சம்பவம் பதிவாகியுள்ளது. 
 புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவரது அம்மா பரீட்சைக்கு முந்தைய நாள் (10) மரணமாகியுள்ளார். இந்த விடயத்தை அயலவர்கள் உறவினர்கள் மறைத்து அயலவர் ஒருவரின் வீட்டில் இவரை தங்க வைத்துள்ளனர். 
பின்னர் அடுத்த நாள் மாணவரின் தந்தை பரீட்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரீட்சை முடிந்து இந்த மாணவனை வகுப்பாசிரியை அழைத்து வந்தது மரணமான தாயைப் பார்ப்பதற்கே..
(அததெரண)
தாய் மரணமானது தெரியாமல் புலமைப்பரிசில் எழுதிய மாணவன் தாய் மரணமானது  தெரியாமல் புலமைப்பரிசில் எழுதிய மாணவன் Reviewed by irumbuthirai on October 12, 2020 Rating: 5

மேலும் மூன்று வைத்தியர்களுக்கு கொரோனா...

October 12, 2020

நேற்றைய தினம் (11) இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களுள் புதிதாக மூன்று வைத்தியர்களும் அடங்குவர் என Covid-19 தடுப்பு தேசிய மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 
 மாவனல்லை பிரதேசத்தில் இருவரும் கேகாலை பிரதேசத்தில் ஒருவரும் அடங்குவர். 
இவர்கள் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியோடு (Cluster) தொடர்புபட்டவர்கள் எனவும் அந்த நிலையம் மேலும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே கம்பஹா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Source:Newswire)
மேலும் மூன்று வைத்தியர்களுக்கு கொரோனா... மேலும் மூன்று வைத்தியர்களுக்கு கொரோனா... Reviewed by irumbuthirai on October 12, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 10-10-2020 நடந்தவை...

October 11, 2020

 


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 6ம் நாள் அதாவது சனிக்கிழமை (10) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • ஊரடங்கு உத்தரவை மீறிய 97 பேர் இதுவரை கைது. 27 வாகனங்களும் பறிமுதல் செய்ததாக அறிவிப்பு. 
  • சாதாரண மக்கள் இடையில் கொரோனா கொத்தணி உருவானால் வைரஸ் சமூக மயப்படுத்தப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படும் என தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு. 
  • தற்போதைய கொவிட் தொற்று நிலமையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என இலங்கை முதலீட்டாளர்கள் சபை தெரிவிப்பு. 
  • நாளை (11) நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சையை கொரோனா உறுதி செய்யப்பட்ட 5 மாணவர்கள் எழுதவுள்ளனர். இவர்கள் தாம் சிகிச்சை பெறும் IDH வைத்தியசாலையில் எழுதவுள்ளதாகவும் இதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவிப்பு. அதேபோன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சார்த்திகளுக்கு அந்த நிலையங்களிலேயே பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவிப்பு. 

  • திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாகாணப் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவிப்பு. 
  • நாளைய தினம் (11) நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை என்பன நடைபெறவுள்ள பரீட்சை மத்திய நிலையங்கள் சுகாதார பாதுகாப்புடன் உள்ளதாகவும் எனவே பரீட்சைகள் தொடர்பில் பெற்றோர்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிப்பு. 
  • ஆயுர்வேத திணைக்களமும் ஆயுர்வேத மருந்தாக்கற் கூட்டுத்தாபனமும் இணைந்து கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்ததாகவும் இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெற இருப்பதாகவும் சுதேச வைத்திய துறை அமைச்சர் தெரிவிப்பு. 
  • கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அறிவிப்பு. 
  • பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதி ஒருவரின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து குறித்த அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவிப்பு. 
  • கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்று சிறு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வைத்தியசாலையின் மூன்று வார்டுகளும் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கம் ஒன்றும் மூடப்பட்டது. 
  • கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள Next ஆடை தொழிற்சாலையில் மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அங்கு பணிபுரியும் ஒரு ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஏனைய அனைவரும் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
  • கொரோனா காலத்தில் வெளிநாட்டிலுள்ள இலங்கையரை இலங்கைக்கு அழைத்து வருவதில் திட்டமிடப்பட்ட ஊழல்கள் நிகழ்ந்துள்ளமை அம்பலமாகியுள்ளது. இதில் அரச அதிகாரிகள் மற்றும் தூதரக மட்டத்திலான அதிகாரிகள் உட்பட பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக புலனாய்வு தகவல்களை ஜனாதிபதிக்கு சாட்சி சகிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்பொழுது இந்த பணி Covid-19 தேசிய செயற்பாட்டு மையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • இன்று மாத்திரம் 105 பேருக்கு கொவிட்- 19 தொற்றுறுதியானது. மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் பணியாளர்கள் இரண்டு பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய மேலும் 101 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் நேற்று கொவிட் 19 தொற்றுறுதியானது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 628 ஆக அதிகரித்தது.
Irumbuthirainews.
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 10-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 10-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 11, 2020 Rating: 5

வரலாற்றில் மறக்க முடியாத இன்றைய புலமைப்பரிசில் பற்றி...

October 11, 2020

Covid-19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்றைய புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறுவது முக்கிய விடையமாகும். 
இன்றைய பரீட்சை பற்றி... 
  • நாடு பூராகவும் 2,936 மத்திய நிலையங்கள். 
  • 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 பேர் பரீட்சைக்கு தோற்றவிருக்கிறார்கள். 
  • பரீட்சை  அனுமதி அட்டையே ஊரடங்கு சட்டத்துக்கான அனுமதி அட்டையாக மாறியமை..
  • பகுதி 1 மு.ப. 09.30 - 10.30 மணிவரையும், பகுதி 2 11.00 - 12.15மணி வரையும் இடம்பெறும். 
  • சிங்கள மொழிமூலம் 248,072 மாணவர்கள், தமிழ் மொழிமூலம் 83,622 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
  • கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கு அமர ஏற்பாடு. 
  • இதற்கு மேலதிகமாக இம்முறை Covid-19 ற்கு சிகிச்சை அளிக்கப்படும் IDH வைத்தியசாலையிலும் 5 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகிறார்கள் என்பது முக்கிய விடயமாகும். இந்த சின்ன வயதில் இலங்கையில் மிகவும் அழுத்தத்தை தரக்கூடிய பரீட்சையாக கருதப்படும் இந்தப் பரீட்சைக்கு வாழ்த்தி வழியனுப்ப யாருமின்றி பரீட்சைக்குத் தோற்றுவது அந்தப் பிள்ளைகளினதும் குடும்பத்தவர்களினதும் வாழ்வில் மறக்க முடியாத துயராகும் என்பதோடு இம்முறை பரீட்சையை வரலாறும் மறக்காது.
  • Irumbuthirainews
வரலாற்றில் மறக்க முடியாத இன்றைய புலமைப்பரிசில் பற்றி... வரலாற்றில் மறக்க முடியாத இன்றைய புலமைப்பரிசில் பற்றி... Reviewed by irumbuthirai on October 11, 2020 Rating: 5

பரீட்சார்த்திகள் Online பதிந்தபின் தனது அல்லது குடும்பத்தின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது.....

October 11, 2020

2020 ஆம் ஆண்டியில் நடைபெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரிட்சைக்காக தோற்றவுள்ள மாணவர்களின் சுகாதார நிலை உள்ளிட்ட ஏனைய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை அறிந்ததே... 
இவ்வாறு தகவல்களை உள்ளீடு செய்த பின்னர் 
தனது அல்லது தமது குடும்பத்தவரின் உடல் நிலைமையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவ்வாறான சந்தப்பத்தில் மீண்டும் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
பரீட்சார்த்திகள் Online பதிந்தபின் தனது அல்லது குடும்பத்தின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது..... பரீட்சார்த்திகள் Online பதிந்தபின் தனது அல்லது குடும்பத்தின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது..... Reviewed by irumbuthirai on October 11, 2020 Rating: 5

Online இல் தம்மை பதிவு செய்ய முடியாத பரீட்சார்த்திகள் என்ன செய்ய வேண்டும்?

October 11, 2020

2020 ஆம் ஆண்டியில் நடைபெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரிட்சைக்காக தோற்றவுள்ள மாணவர்களின் சுகாதார நிலை உள்ளிட்ட ஏனைய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை அறிந்ததே. 
இதற்கமைவாக பரீட்சைகள் நடைபெறுவதற்கு முன்னர் அனைத்து மாணவர்களும் தமது தகவல்களை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள படிவத்தில் உள்ளிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு இந்த தகவல்களை உள்ளிடுவதற்காக குறிப்பிட்ட பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களின் தகவல்கள் https://info.moe.gov.lk/ என்ற இணையவழியூடாக வழங்குமாறும் கோரப்பட்டது. 
ஆனால் இணையவழியூடாக இத்தகவல்களை வழங்கமுடியாமல் 
போகும் மாணவர்கள் தாம் பரீட்சைக்கு தோற்றும் மத்திய நிலையத்தில் தகவல்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கான படிவம் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரீட்சை திணைக்களத்தினால் பரீட்சை மத்திய நிலைய பொறுப்பதிகாரியிடம் பெறலாம். இணையவழியூடாக தகவல்களை சமர்ப்பிக்க முடியாமல் போன மாணவர்கள் இந்த படிவத்தில் (ஒரு மொழியில்) பூரணப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும். 
அத்தோடு இதில் பதிவாகும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்று அனைத்து மாகாண வலைய கல்வி பணிப்பாளர்களுக்கும், பரீட்சை மத்திய நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இதற்கமைவாக பரீட்சாத்திகளினால் முழுமைப்படுத்தப்பட்ட தகவல்களின் இரகசிய தன்மையை பாதுகாப்பதற்கு கல்வி அமைச்சு முன்னிற்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Online இல் தம்மை பதிவு செய்ய முடியாத பரீட்சார்த்திகள் என்ன செய்ய வேண்டும்? Online இல் தம்மை பதிவு செய்ய முடியாத பரீட்சார்த்திகள் என்ன செய்ய வேண்டும்? Reviewed by irumbuthirai on October 11, 2020 Rating: 5

அரசியல் களத்தில் திரைக்கு பின்னால்...... - சமகால அரசியல் பார்வை..

October 11, 2020

#20 ஐ விஞ்சிய கோவிட் 19 ன் 2ஆம் அலை.#  
கடந்த வாரங்களில் மிக சூடாக இருந்த அரசியல் தலைப்பு அரசியலமைப்பிற்கு முன் மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம். எனினும் கடந்த வார இறுதியில் திடீர் என்று ஏற்பட்ட கோவிட் 2 ஆம் அலை காரணமாக 20 இன் அரசியல் சூட்டை தாண்டி கோவிட் அரசியல் அரங்கில் சூடான பேசு பொருளாக மாறியது. 
கடந்த மார்ச் இல் ஆரம்பித்த முதல் அலை வெற்றிகரமாக நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதில் அரசாங்கம், இராணுவம், சுகாதார அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்பு மெச்சத்தக்கது. இத்தகைய பின்னணியில் எழுந்திருக்கும் இரண்டாம் அலை மிக வீரியமாக எழுந்திருக்கிறது. ஏற்கனவே, மோசமான கடன் சுமையில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஈஸ்டர் தாக்குதல், மத்திய வங்கி பிணை முறி மோசடி, தற்போது கோவிட் என நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த இரண்டாவது அலை குறித்து அரசு கரிசனையுடன் செயலாற்ற ஆரம்பித்துள்ளது. 
லொக்டவுன் போன்ற ஒன்றிற்கு செல்வதால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பு, மேலதிக சுமை ஒரு புறமும், சமூக பரவல் ஏற்படாமல் கட்டுப்படுத்தலில் எதிர்நோக்கும் சவால் மறுபுறமும் என பாக்கு வெட்டிக்கு அகப்பட்ட பாக்கு போல அரசின் நிலை உள்ளது. 
கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அத்துடன் சுகாதார சேவையில் ஈடுப்பட்டுள்ளோருக்கு எவ்வித விஷேட சலுகைகளும் வழங்கப்படாமை குறித்தும் அரசின் கவனத்தை ஈர்த்ததுடன், தனிமைப்படுத்தப்படும் சுகாதார ஊழியர்களுக்கு தனியான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். அத்துடன் சுகாதார துறை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டமை குறித்தும் அவர் பாராளுமன்றில் பேசினார். 
#ஆளும் தரப்புக்குள் தொடரும் 20 சர்ச்சைகள்
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கூட்டம் கடந்த வாரம் கூட்டப்பட்டிருந்தது. ஜனாதிபதியினால் கூட்டம் கூட்டப்பட்டிருந்த போதிலும் கோவிட்-19 2 ஆம் அலை காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலைமையினால் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 
அமைச்சர்களான தினேஷ் மற்றும் ஜோன்ஸ்டன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இறுதியாக இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர 20 தொடர்பில் கேள்வி எழுப்பினார். "என்ன இந்த 20. நிறைய பேர் எம்மிடம் இது பற்றி கேட்கின்றனர். எனக்கு என்றால் 20 பற்றி ஒன்றும் தெரியாது. இது தொடர்பில் எமக்கு தெளிவூட்டுங்கள். 19 க்கு எதிராக வாக்களித்த ஒரே உறுப்பினர் நான். இப்போது 20 ஐயும் எதிர்க்குமாறு சில அமைப்புக்கள் எம்மிடம் சொல்லி வருகின்றன" எனத் தெரிவித்தார். 
இதற்கென பிரதமருடன் தனியான பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்து தருவதாக தினேஷ் மற்றும் ஜோன்ஸ்டன் தெரிவித்தனர். 
அரச தரப்பு பா.உ விஜயதாச ராஜபக்ஷ 20 தொடர்பில் அரசுடன் முரண்பட்ட கொள்கையில் உள்ளார். தனது மனசாட்சிப்படி 20 க்கு ஆதரவு வழங்க முடியாத நிலை இருப்பதாக அவர் ஜனாதிபதிக்கு நீண்ட கடிதம் ஒன்றை கடந்த வாரம் எழுதினார். அதன் பிரதி பிரதமருக்கு வழங்கப்பட்டது. கடந்த வாரம் இடம்பெற்ற ஆளும் கட்சி பா.உ கூட்டத்திலும் இவர் கலந்து கொள்ளவில்லை. 

#20 தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவு படுத்தல்
20 தொடர்பில் தெளிவுபடுத்த கோரி ஆளும் தரப்பு உறுப்பினர்கள் ஊடகங்கள் வாயிலாக பேசும் அளவிற்கு சென்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அது தொடர்பில் கூட்டம் ஒன்றை கூட்டியிருந்தார் பிரதமர். 
அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் அலி சப்ரி ஆகிய இருவருக்கும் 20 தொடர்பில் தெளிவு வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. 

#ஆளும் கட்சி பின்வரிசை உறுப்பினர்களின் நலன்புரிச் சங்கம்
ஆளும் கட்சியின் பொறுப்புக்கள் எவையும் அளிக்கப்படாத பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தமக்கு பொறுப்புக்கள் வழங்கப்படாமை குறித்து அதிருப்தியுடனேயே உள்ளனர். 
குறைந்த பட்சம் பிரதேச ரீதியான அபிவிருத்திக் குழுக்களின் தலைவர் பதவிகளையாவது பெற்றுத்தர வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. இது தொடர்பில் பாராளுமன்ற ஓய்வறையில் ஓரிரு சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன. பிரமித பண்டார தென்னக்கோன், சுமித், திஸ்ஸகுட்டி ஆரச்சி, ஜகத் குமார, நளின் பெர்னாண்டோ, அஜித் ராஜபக்ஷ போன்றவர்கள் இதில் முன்னணியில் இயங்கினர். இவர்கள் கடந்த புதன் கிழமை பாராளுமன்ற ஓய்வறையில் சந்தித்து கலந்துரையாடினார். 
தம்முடைய தனிப்பட்ட ஆளணியினரை கூட முறையாக நியமித்துக் கொள்ள முடியாமல் தாம் இருப்பதாகவும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்கள் முழு அதிகாரங்களையும் எடுத்து செயற்படுவதால் பின்வரிசை உறுப்பினர்களுக்கு செய்வதற்கு எதுவுமே இல்லை என்று குறைப்பட்டுக் கொண்டனர். 
பதுளை பா.உ சாமர சம்பத் தசநாயக்க எழுந்து "என்ன பிரச்சனை இருப்பினும் நாம் அரசுக்காக முன்வந்து பேசுகிறோம். நான் சு.க உறுப்பினர். ஆனால் அரசுடன் எப்போதும் நிற்கிறோம்" என்று தெரிவித்தார். எதிர்க்கட்சியில் இருந்து வரும் சவால்களை முறியடிக்க ஒரு குழுவாக நாம் முகம் கொடுக்க வேண்டும் என்று பிரமித கூற, பின்வரிசை உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்திருப்பது அரசைப் பாதுகாக்கும் அதே வேளை மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காகவுமே என்று திஸ்ஸகுட்டி ஆராச்சி கூறினார். 
இந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அவ்விடத்தால் பிரதமர் வந்தார். "என்ன எல்லோரும் சேர்ந்திருக்கிறீர்கள்" என்று பிரதமர் கேட்டார். "இல்லை sir. நாங்கள் நலிவுற்றோர்கான நலன்புரி சங்கம் ஒன்றை உருவாக்கினோம்" என்று திஸ்ஸகுட்டிஆராச்சி கூற, "நல்லது. ஏதாவது இருப்பின் எனக்கும் சொல்லுங்கள்" என்று கூறிவிட்டு பிரதமர் நகர்ந்து சென்றார். இவர்கள் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, ஆளும் கட்சி பிரதான கொரடா ஜோன்ஸ்டன் ப்ராணாந்து ஆகியோரிடம் தமது சோகக்கதைகளை பகிர்ந்து கொண்டனர். 
பின்னர் பசில் ராஜபக்ஷவிடமும் சொல்வதற்கு முடிவு செய்து, ஜகத் குமார பா.உ அவர்கள் அது தொடர்பில் தொலைபேசி ஊடாக அறிவித்தார். 

#பந்துலவின் முகக் கவச விற்பனை
கோவிட் 19 தொற்றினால் முகக் கவச விற்பனை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட முகக் கவசங்களுக்கு பதிலாக உள்ளூர் உற்பத்தியாளர்களால் மேற்கொள்ளப்படும் தயரிப்புக்களை ஊக்குவிக்க வணிக அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை மேற்கொண்டார். 
பொதுவாக சந்தையில் 50, 60 ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படும் முகக் கவசம் ஒன்றை 20 ரூபாய் விலையில் விற்பனை செய்யும் நடவடிக்கைய அமைச்சர் முன்னெடுத்துள்ளதுடன் கடந்த புதன் கிழமை ஒரு பெட்டி முகக் கவசங்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பாராளுமன்றத்துக்கு சென்று ஒவ்வொரு பா.உ. கும் 5 முகக் கவசம் வீதம் பங்கிடுமாறு ஊழியர் ஒருவரிடம் வழங்கினார். 
#கொரானாவின் முன் பின் தங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் தினமு (வெல்வோம்)
ஐ.ம.ச. இன் பா. உ. கூட்டம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. "தற்போது நாடு அபாயகரமான நிலையில் உள்ளமையால் நாம் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்" என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் ஆரம்பித்து வைத்தார். 
"நீங்கள் முதல் அலை ஏற்பட முதலே பாராளுமன்றத்தில் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்தீர்கள். அரசு அதனை கணக்கில் எடுக்கவில்லை. அதன் விளைவாக மாதக் கணக்கில் நாட்டை முடக்கி வைக்க வேண்டி ஏற்பட்டது. தற்போது இரண்டாம் அலை உருவாகியுள்ளது. 
இம்முறையும் அரசு இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை" என்று பா.உ ஜே. சி அலவதுவல கூறினார். சற்று தாமதமாக வந்து இணைந்து கொண்ட பா.உ ஹரின் 'தினமு' வேலைத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்தார். கடந்து 3 வாரங்களாக வார இறுதியில் நடந்த சிறு கூட்டங்கள், அதன் நன்மைகள் குறித்து இங்கே கலந்துரையாடப்பட்டது. முடிவில் அரசியல் ரீதியாக இக்கூட்டங்கள் பாரிய நன்மைகளை கொண்டு வந்ததாக பரவலாக சொல்லப்பட்டது. 
எனினும் நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு அவற்றை ஒத்தி வைக்க சஜித் கேட்டுக் கொண்டதுடன், சஜித் ஐ மையப்படுத்தி விகாரைகளில் நடைபெறும் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. 

#கோவிட் நிழலில் 20 ஐ நகர்த்தல் தொடர்பில் எதிர்க்கட்சியின் நகர்வு
கோவிட் அவலங்களிடையே 20 ஐ நகர்த்தி செல்ல அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்க்கட்சி ஆலோசனை செய்தது. 
20 ஆம் திருத்தத்தின் வாயிலாக கணக்காய்வு நடவடிக்கைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று பிரதமர் சொல்கிறார். ஆனால், விமல் வீரவங்ச கணக்காய்வு அவசியம், கணக்காய்வு ஆணைக்குழு அவசியம் என்கிறார். கடிதம் எழுதுகிறார். உடனே பிரதமர் பதில் அறிக்கை விடுக்கிறார். அரசினுள் பிளவுகள் உள்ளது என்பது இதன் மூலம் புலப்படுகிறது. 
அவ்வாறே அரசில் இருக்கும் அரசியலமைப்பு நிபுணரான விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதி அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதுதி 20 ஆவது திருத்தத்திற்கு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். அது மட்டுமல்ல இது மிகப் பயங்கரமான ஒரு திருத்தம் என்றும் சொல்லி இருக்கிறார் என மனுஷ நாணயக்கார எம். பி. குறிப்பிட்டார். கணக்காய்வு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மிகுந்த அவதானமாக உள்ளது. பிரதமரின் அறிக்கைக்கு பதிலும் அளித்தது. அதில் 20 திருத்தம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
 
#சீன உயர்மட்ட ராஜதந்திரியின் வருகை
கடந்த ஓரிரு நாட்களில் அரசியல் அரங்கில் பேசப்பட்ட முக்கிய விடயம் சீன கமியூனிஸ்ட் கட்சியின் பொலியுட் பியூரோ உறுப்பினரும், வெளிவிவகார ஆலோசனை கமிட்டி தலைவருமான இராஜதந்திரி ஒருவரின் திடீர் விஜயமாகும். 
கோவிட் நிலை காரணமாக உலக அளவில் இராஜதந்திர பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சீன இராஜாதந்திரிகள் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றால் வருகை தந்தமை குறித்து பாராளுமன்றத்தில் காரசாரமான வாத விவாதங்கள் எழுந்தன. 
குறிப்பாக குறித்த இராஜாதந்திரியை சந்திக்க செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாயிலாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோவிட் தொற்று ஏற்படலாம் என்று எதிர்க்கட்சி தொடர்ந்தும் சொன்னதுடன், இந்த அவதானம் மிக்க சூழலில் இந்த அவசர சந்திப்பு எதற்கு என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. 
இவை எல்லாம் ஒருபுறம் நடக்க சீன இராஜதந்திரி இலங்கைக்கு வந்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து விட்டு சென்றார்.
 
#முற்றும் அமெரிக்க - சீன முறுகல். பலிகடா இலங்கையா?
பொதுவாக அமெரிக்காவில் ரிபப்ளிகன் கட்சி ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும் வன்முறை மூலம் பிரச்சனைகளை தீர்க்க முயல்வது இயல்பு. 
இம்முறை அந்த எல்லையையும் தாண்டி டிரம்ப் இன் செயற்பாடுகள் சென்று கொண்டிருக்கின்றன. பகிரங்கமாக சீனாவுடன் முரண்பட்ட கொள்கையை அவர் கடைபிடிக்கிறார். குறிப்பாக சீன நிறுவனங்கள் மீது விதித்த தடைகள், கொரானா வைரஸ் ஐ சீன வைரஸ் என்றது, சீனாவை மட்டம் தட்ட இந்தியாவுடன் மிக நெருங்கிய உறவை உருவாக்கி வருவது என நிறைய. அந்த வகையில் அண்மையில் அமெரிக்க, இந்திய, அவுஸ்திரேலிய, ஜப்பானிய கூட்டு ஒன்று உருவாகி இருக்கிறது. 
சுதந்திர இந்து பசுபிக் போக்குவரத்து இதன் நோக்கம் என்று சொல்லிக் கொண்ட போதிலும், அமெரிக்க, சீன தூதரக மட்ட அதிகாரிகள் எதிர் எதிர் நாடுகளை பகிரங்கமாக விமர்சனம் செய்யும் அளவுக்கு நிலைமைகள் சீரின்றி உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பெரும்பாலும் இந்து சமுத்திரக் கடல் பரப்பில் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாக இருக்கலாம். இங்கேதான் இலங்கை பலியாடாக வருகிறது. மேற்படி எல்லா வல்லரசுகளுக்கும் இலங்கை மீது ஒரு கண் உண்டு. நாம் ஏற்கனவே குறிப்பிட்ட சீன இராஜதந்திரியின் விஜயத்திற்கும் மேற்படி நாளு வலய வல்லரசுகளின் கூட்டத்திற்கும் தொடர்பு இருக்கலாம். 
1990 ல் சோவியத் வீழ்ச்சியின் பின்னர் தற்போது மீண்டும் ஒரு அமெரிக்க, சீன பனிப்போர் உருவாகி வருகிறது. இது இந்து சமுத்திரத்தை மைய்யப்படுத்தி உருவாகி உள்ளது. 
தொடர்ந்தும் அணிசேரா கொள்கையை கடைப்பிடித்து வந்த இந்தியா அமெரிக்கவுடன் ஒரு அச்சில் வந்து இணைந்தது சீனாவுடன் உள்ள போட்டியில் வெல்ல முடியாத இயலாமையின் வெளிப்பாடா? மோடி போன்ற பாசிச ஆட்சியாளரின் மற்றோரு முட்டாள் முடிவா அல்லது இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றமா என்பது புரியாத புதிர். 
எனினும் இந்த புதிய பனிப்போர் நிலைமையில் இலங்கை முக்கிய புள்ளியாய் திகழப் போகிறது. 13 திருத்தம் தொடர்பில் இந்திய பிரதமரின் கருத்து, அதற்கான இலங்கை அமைச்சரின் பதில்கள், அமெரிக்க MCC ஒப்பந்தம், அமெரிக்க இராஜாதந்திரிகள் வருகை, இலங்கை மீதான சீன அக்கறைகள் என்பன இந்த பனிப்போரின் இலங்கையின் வகிபாகத்தை முற்கூட்டியே வெளிக்காட்டி நிற்கின்றன. 
எதிர்வரும் நாட்கள் மிக தீர்மானம் மிக்கவையாக மாறும். 20 ஆம் திருத்த சட்டம், சீன பிரசன்னத்திற்கான இந்திய, அமெரிக்க எதிர்வினைகள், கோவிட் இன் நிலை, இந்திய பிரதமர் மீது இலங்கை அமைச்சர் சொன்ன குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான இந்திய எதிர்வினைகள் என்பன அரசியல் அரங்கை சூடுபிடிக்க செய்யும். கோவிட் நிலைகள் பொருளாதார செயற்பாடுகள் மீது ஏற்படுத்தப் போகும் தாக்கம் இவை எல்லாவற்றையும் விட அடித்தட்டு மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும். பார்க்கலாம் அடுத்த வாரம். 
fபயாஸ் MA fபரீட்.
அரசியல் களத்தில் திரைக்கு பின்னால்...... - சமகால அரசியல் பார்வை.. அரசியல் களத்தில் திரைக்கு பின்னால்...... - சமகால அரசியல் பார்வை.. Reviewed by irumbuthirai on October 11, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 09-10-2020 நடந்தவை...

October 10, 2020

 


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 5ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள் விற்பனை நிலையங்கள் என்பவற்றை திறக்க இன்று (9) முதல் அனுமதி. 
  • இம்முறை புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக சுகாதார பாதுகாப்புடன் கூடிய விசேட ரயில் பெட்டிகளை இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவிப்பு. 
  • கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் 5 மாத குழந்தையின் தந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தை கடந்த ஆகஸ்ட் முதல் அங்கே சிகிச்சை பெற்று வருகிறது. எனினும் தாய்க்கும் பிள்ளைக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கண்டியைச் சேர்ந்த இவர்கள் தற்காலிகமாக கொடிகாவத்த பிரதேசத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
  • தாதியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹொரணை ஆதார வைத்தியசாலையின் 5 ஆம் மற்றும் 9 ஆம் வார்டுகளை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தாதியரின் கணவர் மினுவங்கொடை பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் பணி புரிவதாகவும் அவருக்கும் மற்றும் மேலும் ஒரு குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவிப்பு. 

  • கம்பஹா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிப்பு. 
  • நாட்டில் 18 பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று அவதான நிலைமை காணப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும் பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அவதானம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதன் காரணமாக பண பரிவர்த்தனையின் போது மிகவும் கவனமாக செயற்படுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பு. 
  • உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் அனர்த்த நிலையினால் ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்த்து அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக செயற்பாட்டு மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், பரீட்சை திணைக்களம், முப்படை மற்றும் பொலிஸார் ஆகியோரை இணைத்து இந்த மத்திய நிலைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் துரித தொலைபேசி இலக்கமான 117 மற்றும் பரீட்சை திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கமான 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் இக் காலப்பகுதியில் 24 மணித்தியாலமும் செயற்படும். பரீட்சைகள் தொடர்பில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளையும் இந்த தொலைபேசியூடாக அறிவிக்க முடியும் என தெரிவிப்பு. 
  • கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள நெக்ஸ்ட் (Next) ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக Covid-19 செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் அங்கு பணிபுரியும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. குறித்த பெண் சீதுவ பிரதேசத்தை சேர்ந்தவர். 
  • பா.உ. ஹரீன் பெனாண்டோவின் பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக அவரது பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் நெகட்டிவ் (Negative) என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் கடந்த புதன்கிழமை தனியார் வைத்தியசாலையில் இந்த பரிசோதனையை மேற்கொண்டார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை வழங்கும் முகமாக தாமாகவே முன்வந்து இந்த பரிசோதனையை செய்திருந்தார். 
  • கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி. 
  • மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் சிலருடன் சேர்ந்து கடந்த 29ஆம் திகதி முதல் 04ம் திகதி வரை கதிர்காம பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற கம்பளை, உடகல்பாய என்ற இடத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்பளை வைத்தியசாலையில் வைத்து இவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  • ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஊரடங்கு சட்டத்திற்கான அனுமதிப் பத்திரம் தொடர்பில் பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன்படி, தமது பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு சட்டத்திற்கான அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் என பொலிஸார் அறிவிப்பு. 
  • தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக பிரத்தியேக பரீட்சை நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகார பிரிவுகளில் பரீட்சைகளுக்கு தோன்றும் மாணவர்களுக்கு விசேட பரீட்சை மத்திய மத்திய நிலையங்களை ஏற்படுத்தி கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • நேற்றைய தினம் (08) தற்காலிகமான மூடப்பட்ட மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் பணிகள் இன்றைய தினம் (09) மீண்டும் வேறு உத்தியோகத்தர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 85 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  • covid-19 தீவிரமாக பரவியுள்ள கம்பஹா மாவட்டத்தில் தபால் சேவைகளை முன்னெடுக்கும் பணிகளை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தற்காலிக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார் . அதேபோல், கொழும்பு டி ஆர் விஜயவர்த்தன மாவத்தை மத்திய தபால் பரிமாறல் வாடிக்கையாளர் சேவையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்படுகிறது. 
  • வடமேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. வடமேல் மாகாண பிரதம செயலாளர் பி.பீ.எம். சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். 
  • ஒக்டோபர் 12, 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கும் பிராந்திய அலுவலகத்திற்கும் பொது மக்கள் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
  • மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களின் எண்ணிக்கை 1083 ஆக அதிகரிப்பு. அந்த வகையில் இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 9-10-2020 இரவு 9.15 ஆகும்பொழுது 4,523 ஆக அதிகரித்தது. 
  • irumbuthirainews.
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 09-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 09-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 10, 2020 Rating: 5
Powered by Blogger.