திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-10-2020 நடந்தவை...
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 16ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- கம்பஹாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானம் இழந்தோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கும் செயற்திட்டம் இன்று முதல் முன்னெடுப்பு.
- கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை திறப்பு.
- கம்பஹா மாவட்டத்தில் காவற்துறை ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 388 ஆக அதிகரிப்பு என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு.
- யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேஷன் தெரிவிப்பு.
- கொழும்பு - கப்பல் தளத்தில் கடமையாற்றும் மற்றுமொரு நபருக்கும் கொரோனா தொற்று உறுதி. அந்த வகையில் இதுவரையில் கொழும்பு - கப்பல் தளத்தில் மாத்திரம் 21 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
- லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 வயது குழந்தை மற்றும் தாய் தந்தை ஆகியோருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிப்பு.
- கட்டுநாயக்க வர்த்தக முதலீட்டு வலயத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா. அதன்படி, கட்டுநாயக்க முதலீட்டு வர்த்தக வலயத்தில் இதுவரையில் மொத்தமாக 268 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- உடனடியாக அமுலாகும் வகையில் குளியாபிட்டி, பன்னல, கிரிஉல்ல, தும்மலசூரிய, நாரம்மல ஆகிய காவற்துறை அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் காவற்துறை ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டது.
- கொழும்பு - கோட்டை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் துறை பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
- அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி சுகாதார விதிமுறைகள் பாராளுமன்றத்தில் பின்பற்றப்படுவதில்லை என குற்றம்சாட்டினார் எதிர்க்கட்சித் தலைவர். இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றம் பொது இடம் அல்ல என்றார். இதன் பின்னர் இருவருக்கும் இடையில் பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன.
- தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு இன்று தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு.
- இன்றைய தினம் மாத்திரம் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் 120 பேர் மினுவாங்கொடை பிரேண்டிக்ஸ் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
- Irumbuthirainews
கொரோனா உறுதியான பொலிஸ் பரிசோதகர்
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள மேல் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (20) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அதிகாரி Covid அறிகுறிகள் காரணமாக பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆட்பதிவு திணைக்களத்தின் அவசர அறிக்கை
ஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டையை பெற்று கொள்வதற்காக நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொண்ட விண்ணப்பதாரர்கள் தாமதிக்காமல் தங்களுடைய விண்ணப்பங்களை கிராம சேவகர்களிடம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்தில் உள்ள அடையாள அட்டை பிரிவிடம் ஒப்படைக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக...
இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளலாமா? சபாநாயகரின் பதில்...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு சபை அமர்வுகளில் பங்கேற்க இடமளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்தார்.
ரயில் சேவைகளில் மாற்றம்...
தற்போதைய கொரோனா நிலைமையை கவனத்தில் கொண்டு இன்று (20) தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Online முறையில் பல்கலைக்கழக பரீட்சைகள்?
இணைய வழியில் (Online) பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-10-2020 நடந்தவை...
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 15ம் நாள் அதாவது திங்கட்கிழமை (19) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- உயர் தர பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் அதனை அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 1988 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த வாரம் நாட்டில் தீர்மானமிக்க வாரமாக மாறவுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவிப்பு.
- ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை (20) காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையங்கள் திறந்திருக்கும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு.
- புறக்கோட்டையில் நான்காம் குறுக்கு தெருவில் மொத்த வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி என அறிவிப்பு.
- ஒவ்வொரு வாரமும் செய்வாய்க்கிழமைகளில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக கலந்துரையாடல் கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு நாளை (20) இணைய (Online) வழியில் அதாவது Zoom முறையில் நடத்துதப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு.
- கொழும்பு மெனிங் சந்தையில் உள்ள சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானது.
- கொரோனா தொற்றாளர் பல்வேறு பகுதிகளில் இருந்து இனங்காணப்பட்டு வருவதனால் இவ்வாரம் நடைபெறவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்கட்சியின் பிரதான ஒருகிணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு. சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
- உயர்தரப் பரீட்சை நடைபெறும் மத்திய நிலையங்களில் சுகாதார பாதுகாப்பை அதிகரிக்கும் முகமாக அந்த நிலையங்களுக்கு ரூபா 15 ஆயிரம் வீதம் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிப்பு.
- யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலைமை சுமூகமாக காணப்படுகின்றது எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவிப்பு.
- கொழும்பு மெனிங் சந்தை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை பராமரித்துச் செல்லும் கந்தானை, கபால சந்தி பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
- Irumbuthirainews
நிரந்தர நியமனம் பெறவிருக்கும் உதவி ஆசிரியர்கள்..
எதிர்வரும் 23ஆம் திகதி மலையக உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நீடிக்கப்பட்டது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை
2020 செப்டம்பர் மாதம் 30 திகதி காலாவதியாகவுள்ள வாகன சாரதி அனுமதிப் பத்திரம் செல்லுப்படியாகும் கால எல்லை டிசம்பர் மாதம் 31 திகதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை நிலையங்களில் இருக்கும் குறைபாட்டை அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம்
தற்போது நடைபெறும் உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை
தற்பொழுது நாடு முழுவதிலும் நடைபெறும் க. பொ. த உயர்தர பரீட்சை வெற்றிகரமாக நடைபெறுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மாணவர்களை கொவிட் 19 வைரசு தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பரீட்சை மத்திய நிலையங்களில் சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கு ரூ. 15000 மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பினவருமாறு:
நாடு முழுவதிலும் தற்பொழுது நடைபெறும் க. பொ. த உயர்தர பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களை கொவிட் 19 வைரசு தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பரீட்சை மத்திய நிலையங்களில் சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கு மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் தெரிவித்துள்ளார்
தற்பொழுது உயர்தர பரீட்சை நடைபெறும் பரீட்சை மத்திய நிலையங்களின் எண்ணிக்கை 2648 ஆகும். அத்தோடு இவ்வாறு பரீட்சை மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படுகின்ற பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா ரூபா 15, 000 வீதம் இந்த நியியுதவி வழங்கப்படும்.
இந்த நிதியுதவியை இன்றைய தினம் சம்பந்தப்பட்ட கணக்கில் வைப்பீடு செய்யுமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்களினால் ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார். கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஆகியோரின் வழிநடத்தலின் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கல்வி அமைச்சின் சுகாதார அலகினால் வழங்கப்படும் இந்த நிதி; , தற்பொழுது சம்பந்தப்பட்ட பரீட்சை மத்திய நிலையங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்கள்;; உள்ளிட்ட பணியாளர் சபையின் சுகாதார பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள முக கவசம், பாதுகாப்பான ஆடை அணிகளை அணிதல் மற்றும் கிருமிநாசினி சவர்க்காரம் வழங்குதல் போன்ற சுகாதார வசதிகளுக்கு மேலதிகமாக என்ற ரீதியிலாகும்.
இதே போன்று நாடு முழுவதிலும் பரீட்சை மத்திய நிலையங்களில் க.பொ. த உயர் தர பரீட்சை தற்பொழுது எவ்வித பிரச்சினைகளும் இன்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாக வலய கல்வி பணிப்பாளர்கள் உறுதி செய்வதாகவும் அனைத்து பரீட்சார்த்திகளைப் போன்று சேவையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் சுகாதார பாதுகாப்பை வழங்குவதற்கு ஆகக் கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அ.த.தி.)