திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-10-2020 நடந்தவை...
irumbuthirai
October 25, 2020
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 19ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- பேருவளை மீனவத் துறை முகத்தில் 20 மீனவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிச் செய்யப்பட்டுள்ளதையடுத்து பேருவளை மீன்பிடி துறைமுகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம். இதேவேளை, பேருவளை பிரதேச சபையையும், அளுத்கம மீன் வர்த்தக கட்டட தொகுதியையும் மூடுவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை.
- ஊரடங்கு உத்தரவை மீறிய 691 பேர் இதுவரை கைது என அறிவிப்பு.
- ஹோமாகம பகுதியில் உள்ள மீன் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா தொற்றுறுதி.
- கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் பாதிக்கப்பட்டார் என்ற நிலையில் கொஸ்கம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பி சென்ற நபர் கைது. 26 வயதான குறித்த இளைஞன் பொரள்ள பகுதியில் அமைந்துள்ள சகஸ்புர தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவிப்பு.
- காலி பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு கொவிட் 19 தொற்றுறுதியான ஒருவர் சென்றநிலையில் அந்த அஞ்சல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
- கொவிட் 19 பரவல் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய காரியாலங்களும் மீள் அறிவிப்பு வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிப்பு. எனினும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் காணப்படும் பிரதேச செயலக காரியாலத்தில் அமையப்பெற்றுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் வாயிலாக நடைபெறும் எனவும் அந்த ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை விநியோகம் உள்ளிட்ட அந்த திணைக்களத்தின் ஏனைய சேவைகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, 0115 226126, 0115 226115, 0115 226100, 0115 226150 ஆகிய தொலைபேசி இலக்கங்களு்ககு தொடர்பு கொள்ளுமாறும் அந்த திணைக்களம் கேட்டுக்கொண்டது.
- சீன அரசாங்கம் 25 ஆயிரம் பி.சீ.ஆர் பரிசோதனை கருவிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகம் இதனை தெரிவிப்பு.
- பாணந்துறை நகரத்தில் காணப்படும் அனைத்து மீன் விற்பனை நிலையங்களும் தற்காலிகமாக மூடல்.
- உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை மருதானை மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு.
- களுத்துறை மாவட்டத்தின் வலல்லவிட்ட பிரதேச சபைக்குட்பட்ட குலாவிட்ட வடக்கு மற்றும் தெற்கு, வெதவத்த, மகுருமஸ்வில்ல மற்றும் மகலன்தவ ஆகிய கிராமங்கள் தனிமைப்படுத்தப்படுள்ளதாக தெரிவிப்பு.
- உடன் அமலாகும் வகையில் எதிர்வரும் திங்கள் (26) காலை 5 மணி வரை களுத்துறை மாவட்டத்தின் பயாகல, பேருவளை, அளுத்கம ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு அமுல்.
- இலங்கையில் இதுவரையில் நாளொன்றில் அதிகளவான கொரோனா தொற்றுறுதியானோர் இன்றைய தினம் பதிவாகினர். அதாவது 866 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 23-10-2020 நடந்தவை...
Reviewed by irumbuthirai
on
October 25, 2020
Rating: