அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்.... - சமகால அரசியல் நோக்கு
irumbuthirai
November 15, 2020
கடந்த வாரங்களைப் போலவே இவ்வாரமும் வேறு அரசியல் தலைப்புகள் நடைபெற்ற போதிலும் அவற்றை விஞ்சி கொரோனா முக்கிய பேசு பொருளானது.
எனினும் முஸ்லீம் ஜனாஸா விவகாரத்தை முக்கிய விவாதப் பொருளாக சமூகத்தில் மாற்றுவதற்கு சில ஊடகங்கள் வலிந்து களமிறங்கியிருந்தன.
#இவ்வார அமைச்சரவைக் கூட்டம்#
வழமை போன்று இவ்வார அமைச்சரவைக் கூட்டம் திங்கட்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இவ்வாரமும் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வருவது குறித்து பேசப்பட்டது.
அமைச்சர் அலி சப்ரி முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பான விடயங்களை சபையில் முன்வைத்தார். முஸ்லீம் சமூகத்தில் இருந்து வரும் கோரிக்கையையும், அதன் நியாயத் தன்மையையும் முன்வைத்தார். எனினும் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.
#சூடு பிடித்த முஸ்லீம் ஜனாஸா விவகாரம்#
முஸ்லீம் ஜனாஸா விவகாரம் கடந்த வாரத்தில் பேசுபொருளாக மாறும் என்று நாம் கடந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அந்த வகையில் இவ்விவகாரம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அங்கே என்ன முடிவுகள் எட்டப்பட்டன என்பது தொடர்பான விடயங்கள் யாருக்கும் தெரியாத நிலையில் அகில இலங்கை ஜாமியதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷேஹ் ரிஸ்வி முப்தி அவர்கள் ஜனாஸா அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக கூறிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக ஆரம்பித்தது.
அதனைத் தொடர்ந்து அதன் எதிர்வினைகள் சமூக வலைத்தளங்களில் சூடு பிடித்தன. சாதகமாகவும், பாதகமாகவும் என்று இழுபட்டுச் செல்ல மறுநாள் காலை செய்திப் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்களில் இவ்விடயம் பேசு பொருளாக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் செய்ய தயாரான இயக்கங்கள் நன்றிக் கடிதம் எழுதின. கட்சி தாவியோரின் ரசிகர்கள் தங்கள் தலைவரால் கிடைத்த வெற்றி என்று மார்தட்டினர். தடை செய்யப்பட்ட போது அமைதி காத்த ஆளும் கட்சி உள்ளூர் அரசியல் அல்லக்கைகள் தமது ஆட்சியால் முஸ்லீம் சமூகத்திற்கு விமோசனம் கிடைத்ததாக கதையளந்தனர். சிலர் இனவாதிகளுடன் மல்லுக்கட்டினர். இனவாதிகள் இனவெறியை கக்கினர். நடுநிலை சிந்தனை கொண்டோர் அமைதியாக நிதானம் காக்க வேண்டினர். மதியமாகும் போது நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஜயருவன் பண்டார அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சொல்லி எல்லா சந்தோசம், கவலைகளுக்கும் ஆப்பு சொருவியதோடு இவ்விவகாரம் நின்று போனது.
வெற்றிக் கொண்டாட்டம் போட்டோர் மீண்டும் கட்டிலுக்கு அடியில் பதுங்கினர். இனவெறிக் கூட்டம் வெற்றி எக்காளமிட்டது. அத்துடன் புவியியல் பேராசிரியரை அழைத்து வந்து நுண்ணுயிர் பரவல் தொடர்பில் நிகழ்ச்சி நடாத்தி பஞ்சாயத்து நடத்தினர் சில தொலைக்காட்சி சேவையினர். வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்படும் என்று கட்சி தாவிய இளம் MP எம்பிக் குதித்தார். ஆனது எதுவும் இல்லை.
#பசிலை பாராளுமன்றத்திற்கு அழைத்த பின்பரிசை எம்பிக்கள்#
ஜனாதிபதி, பிரதமரின் சகோதரரும் முன்னாள் அமைச்சரும் SLPP இன் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவை பாராளுமன்றத்திற்கு வருமாறு கோரி ஆளும் கட்சியின் பின்வாரிசை உறுப்பினர்கள் 19 பேர் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
தற்போது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக பசில் உள்ளதுடன், சீரழிந்து போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு பாரானுமன்றத்தில் பசிலின் பிரசன்னம் அவசியம் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
#பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் நியமனம்#
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களாக பெரும்பாலும் மாவட்டத்தின் ஆளும் தரப்புசிரேஷ்ட அரசியல் தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவதே வழக்கமாக இருந்தது.
ஆனால் இம்முறை மிக அதிகமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் காணப்பட்டதன் காரணமாகவும், வரையறுக்கப்பட்ட அமைச்சுப் பதவிகளையே வழங்க முடியும் என்பதாலும் அமைச்சுப் பதவிகளை ஏற்காத இளம் அரசியல்வாதிகள் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் மாவட்டத்தின் ஏனைய இளம் உறுப்பினர்களுக்கு எந்த அவகாசமும் வழங்காமல் செயலாற்றுவதாக பின்வரிசை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் முறையிட்டு இருந்தனர். இதற்கு தீர்வாக பிரதேச அபிவிருத்தி குழுக்களை உருவாக்கி, அதன் தலைவர்களாக அவர்களை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது.
அதன் முதல் கட்டமாக பொருத்தமான தலைவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை பசில் ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.
#சூடு பிடித்த கட்சித்தலைவர் கூட்டம்#
பாராளுமன்றத்தில் கட்சித்தலைவர் கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. கடந்த வாரம் மற்றும் இவ்வார பாராளுமன்ற கூட்ட ஒழுங்குகள் தொடர்பில் கலந்துரையாடல் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது.
கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஒருநாள் விவாதத்துடன் நிறைவு செய்ய ஏற்கனவே அரசு தீர்மானம் செய்திருந்தது. எனினும் எதிர்க்கட்சி அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு, கொரோனா தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதம் ஒன்றைக் கோரி பெற்றுக்கொண்டது.
அத்துடன் 2020க்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வாரம் (17 ஆம் திகதி) சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான விவாதத்தை 10 நாட்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்ள ஆளும் தரப்பு திட்டமிட்டிருந்தமை தொடர்பிலும் கடந்த வார கட்டுரையில் அலசியிருந்தோம். கட்சித் தலைவர் கூட்டத்தில் இந்த விடயத்தை ஆளும் தரப்பு முன்வைத்த போது எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டது. வரவு செலவுத் திட்ட விவாதம் எதிர்க்கட்சிக்கானது என்றும் அதனை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி தரப்பு சொல்ல, கோவிட் 19 நிலைமையில் சிரமமானது என்று ஆளும் கட்சி சொல்ல கடும் வாத விவாதங்களின் முடிவில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் தீர்மானம் எதுவும் இன்றி புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
புதன்கிழமை மீண்டும் கூடிய நிலையில் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தை 4 நாட்களில் இருந்து 5 நாட்களுக்கும், குழுநிலை விவாதத்தை 6 நாட்களில் இருந்து 15 நாட்கள் என்ற அடிப்படையிலும் அதிகரிக்க ஆளும் தரப்பு இணங்கியதை தொடர்ந்து விவகாரம் நிறைவுக்கு வந்தது.
#இலங்கை மக்களை பரிசோதனை கூட எலிகளாக்க முடியாது#
கோவிட் 19 க்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. உலகில் பல நாடுகள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் இம்முயற்சி வெற்றி பெறவில்லை.
எனினும் உலக சுகாதார ஸ்தாபனம் தடுப்பு மருந்து ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றது. இலங்கை சனத்தொகையில் 20% கு குறித்த மருந்தை வழங்க இலங்கை அரசு கோரியுள்ளது.
முறையாக உறுதி செய்யப்படாத இந்த மருந்தை பயன்படுத்தல் தொடர்பில் SJB இன் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
"இலங்கை மக்களை பரிசோதனை கூட எலிகளாக்க முடியாது" என எதிர்க்கட்சி தலைவர் சஜித் அங்கே கூறினார். தேவையான மருந்தை போதுமான அளவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும் அதனை தேவையுடைய எல்லோரும் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
#சூடு பிடித்த அண்டிஜன் பரிசோதனை#
இலங்கையில் கோவிட் தொற்றினை இனம் கண்டு கொள்ள PCR பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. அதே நேரம் உலகில் சில நாடுகள் அண்டிஜன் பரிசோதனையையும் பயன்படுத்துகின்றன. இப்பரிசோதனை இலங்கையில் நடைமுறையில் உள்ள ஒன்று அல்ல.
இந்நிலையில் 100,000 அண்டிஜன் பரிசோதனை Kit களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளது. இவை கிடைக்கப் பெறுவதற்கு சில நாட்கள் கடக்கும் என்ற நிலையில் அண்டிஜன் பரிசோதனை Kits ஒரு லட்சத்தை கொள்வனவு செய்வதற்கு அரசு விலை மனுக் கோரியுள்ளது.
இவை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க அரசுக்கு மிக நெருக்கமானவரும், தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் ஒருவருமான வர்த்தகர் ஒருவர் இரண்டு லட்சம் அண்டிஜன் பரிசோதனை kits களை இறக்குமதி செய்துள்ள தகவல்கள் ஊடகங்களில் கசிந்தன. மருத்துவ சட்டத்தை மீறி இவை கொண்டு வரப்பட்டுள்ளதாக பல தரப்பினரும் குற்றம் சாட்டி வரும் நிலையில் குறித்த Kits களை கொள்வனவு செய்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் இரண்டு விலைமனுக்களையும் வழங்கியுள்ளன. எனவே, அங்கே முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறது என எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
#2020 வரவு செலவுத் திட்டம்#
இலங்கை வரலாற்றில் வரவு செலவுத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்படாத ஆண்டாக 2020 ஆம் ஆண்டு வரலாற்றில் இடம் பெறுகிறது.
வழமையாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். எனினும் கடந்த நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதன் காரணமாக புதிதாக தெரிவாகும் தலைமைக்கு தனது கொள்கைகளுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாமல் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை மாத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்ற பின்னர் பாராளுமன்றத்தைக் களைத்து புதிய பாராளுமன்றம் அமையும் வரையில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதை தள்ளிப் போட்டார்.
மார்ச் மாதம் கொரோனா பரவியதைத் தொடர்ந்து தேர்தல் பிற்போடப்பட்டது. இதனால் ஏப்ரல் மாதத்தின் பின்னர் அரச செலவுகளை மேற்கொள்ளல் தொடர்பில் வாத விவாதங்கள் நடந்தன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி அரசு செலவுகளை மேற்கொண்டதுடன், அதற்கான கணக்குகள் புதிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.
புதிய பாராளுமன்றம் கூட்டப்பட்ட பின்னரும் அரசு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை. அதற்குப் பதிலாக குறைநிரப்பு பிரேரணைகள், இடைக்கால நிதி அறிக்கைகள் மூலம் கணக்குகளை சரி செய்து கொண்டது.
அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை ஒரு இடைக்கால நிதி அறிக்கையையும், குறைநிரப்பு பிரேரனையையும் பிரதமர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
பொதுவாக நிதி, பொருளாதார விவகாரங்களில் கருத்துக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட ஒரு விடயம் அரசியல் அரங்கில் குறிப்பிட்டு செல்லத்தக்கதாக உள்ளது. இவ்வாண்டு அரசு மேற்கொள்ளும் சில செலவுகளை கடந்தாண்டு செலவாக அதாவது 2019 கடன்களுக்காக என்று பெருமளவு நிதியை ஒதுக்கி உள்ளதாகவும் அது அரச கணக்கீட்டு நியமங்களுக்கு ஏற்ப பிழையானது என்று நிதி தொடர்பான செயற்குழுவில் தாம் நிதியமைச்சின் செயலாளரிடம் சுட்டிக் காட்டிய போது அவர் அதை ஏற்றுக கொள்ள மறுத்து, ஏதேனும் சிக்கல் இருப்பின் கணக்காய்வாளர் நாயகத்தின் ஆலோசனையைப் பெற்று திருத்தலாம் என்று கூறியதாகவும், தான் கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தில் வினவிய போது அது முற்றிலும் பிழையான முறை என சொல்லப்பட்டதாகவும் மிகப் பெரும் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
#மக்கள் குறை கேட்க எதிர்க்கட்சி வகுத்த வியூகம்#
எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து கோவிட் 19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களின் குறைகளை முன்வைப்பதற்கான பொறிமுறை ஒன்றை அறிமுகம் செய்யப் போவதாக குறிப்பிட்டார். "பெறுமதியான வேலை. முறையாக செய்யுங்கள்" என சஜித் அனுமதி வழங்கினார்.
மநூஷ, மரிக்கார், நளின் உட்பட சில உறுப்பினர்கள் இதில் இணைந்து கொண்டனர். அதன் அடிப்படையில் இவர்கள் தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை அறிமுகம் செய்தனர். அவற்றிற்கு அழைப்புக்கள் தொடராக வர ஆரம்பித்தன. அழைப்புக்கள் எல்லாவற்றையும் பதிவு செய்து அதற்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு சஜித் ஆலோசனை வழங்கினார்.
#கோவிட் தாக்கம்#
கொவிட் 19 இன் தாக்கம் காரணமாக இலங்கை சனத்தொகையில் 64% ஆனோரின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார கூறினார். அத்துடன் 7% க்கு பூரண வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
உண்மையில் வீதிகளை அண்டி சிறு வியாபாரங்கள் செய்து வந்தோர் பலரின் வருமானம் இல்லாமல் போயுள்ளது. சுற்றுலாத்துறையில் இருந்த பலர் வீதிக்கு வந்து விட்டனர் என்றும் அங்கே பேசப்பட்டது.
இடையில் குறுக்கிட்ட மனுஷ "600 பில்லியனுக்கு மேற்பட்ட தொகைக்கு நகைகள் அடகு வைகலப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டார்.
#கட்சிப் பணியில் சஜித்#
களுத்துறை நகர பிதா உட்பட 11 உறுப்பினர்கள் கடந்த வாரம் சஜித் ஐ சந்தித்தனர். ஒன்றாக இணைந்து செயற்பட அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித, குமார வெல்கம ஆகியோருடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேராவும் கலந்து கொண்டார்.
அதே வேளை சஜித் கடந்த வாரம் கட்சி அரசியல் தொடர்பில் மிக முக்கிய நபர் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். மிக நீண்ட நேரம் இச்சந்திப்பு இடம் பெற்றதுடன் இணைந்த அரசியல் பயணம் ஒன்றிற்கு அவர் இணக்கம் தெரிவித்தார். குறித்த நபர் ஜனாதிபதி சட்டத்தரணி, முன்னாள் மேலதிக சொலிஸிடர் ஜெனரல் ஸ்ரீ நாத் பெரேரா ஆவார். இந்த சந்திப்பில் SJB செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் கலந்து கொண்டார்.
# ஐதேக பிரதித் தலைவருக்கு முன்னாள் நீதியரசர் வழங்கிய ஆலோசனை#
கடந்த வாரம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் ஐதேக பிரதித் தலைவர் கேகாலையில் நடந்த சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டார். முன்னாள் பா.உ சந்தித் சமரசிங்ஹ வீட்டில் நீண்ட நேரம் இச்சந்திப்பு இடம் பெற்றது. முன்னாள் பா.உ க்களான ஆஷு மாரசிங்ஹ, கஸ்தூரி அனுராத ஆகியோரும் இதில் பங்குபற்றினர்.
அதன் பின்னர் ருவன் கொழும்பு வாலுகாராம விகாரையில் நடந்த கடின உற்சவத்தில் பங்கு பற்றினார்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு பாதுகாப்பு வேண்டி கோட்டை நாக விகாரையில் தொடராக 7 நாட்கள் ரதன சூத்ர ஓதும் நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார். அங்கே முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா வை சந்தித்தார்.
"எப்படி ருவன். உங்களுக்கு பாரிய சவால் உள்ளது" என்று சரத் ஆரம்பித்தார்.
"டி எஸ் சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க ஆகியோர் தொடங்கிய புள்ளியில் இருந்து நான் கட்சியை மீள ஆரம்பிக்கப் போகிறேன்" என ருவன் பதில் அளித்தார்.
"ருவன் க்கு அது ஒரு சிக்கல் அல்ல. விஜேவர்த்தனவின் பக்கத்தில் என்றால் அதுவும் முடியும். இல்லையென்றால் சேனாநாயக்க பக்கம் என்றால் அதுவும் முடியும்" என்று சரத் என் சில்வா குறிப்பிட்டார்.
இலங்கையின் பழம் பெரும் அரசியல் குடும்பமான விஜேவர்த்தன குடும்பத்தின் வாரிசு ருவன் என்பது குறிப்பிடத்தக்கது. தாய் வழி சேனாநாயக்க தொடர்பும் உள்ளது.
இவை கடந்த வார நிகழ்வுகளே. அடுத்த வாரம் வரவு செலவுத் திட்டம் சூடு பிடிக்கலாம். முஸ்லீம் ஜனாஸா விவகாரம் தொடர்ந்து புகை கக்கும் எரிமலையாக வைத்துக் கொள்ளப்படலாம். அத்துடன் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் பதவி தொடர்பில் சர்ச்சை ஒன்று உருவாகலாம்.
- fபயாஸ் MA fபரீட்.
அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்.... - சமகால அரசியல் நோக்கு
Reviewed by irumbuthirai
on
November 15, 2020
Rating: