Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பாவித்தால் பதிவு செய்ய வேண்டும் - அமைச்சர் கெஹெலிய
irumbuthirai
December 19, 2020
சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மத்தியில் சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்காக நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்யும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை ஒன்று இருப்பதாக அறிகின்றோம் என ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,
சமூக ஊடகங்கள் மூலமாக ஏற்பட்டுள்ள பாரிய முரண்பாடு மற்றும் வேறுபாடுகள் காரணமான அவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு எமக்கு உண்டு.
இதற்கமைவாக சகல சமூக ஊடகங்களும் அதாவது முகபுத்தகம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோரை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நாம் எமது அமைச்சில் தயாரித்துள்ளோம்.
தற்பொழுது சமூக ஊடகங்களுக்கு மாத்திரமே இதனை நாம் தயாரித்துள்ளோம். சுயகட்டுப்பாடு தொடர்பில் நான் முன்னர் 2010ஆம் ஆண்டில் முயற்சித்தேன். அப்பொழுது அமைச்சராக இருந்த வேளையில் நான் இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தேன். பலமுறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளேன்.
எதிர்வரும் திங்கட்கிழமையும் (21) இதுதொடர்பிலான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய காலத்தின் தேவையும் ஏற்பட்டுள்ளது என நான் நினைக்கின்றேன் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பாவித்தால் பதிவு செய்ய வேண்டும் - அமைச்சர் கெஹெலிய
Reviewed by irumbuthirai
on
December 19, 2020
Rating: