தாராவிஹ் தொழுதுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தேன்... நடுச்சாமத்தில் வந்திருக்கிறார்கள்... படைத்தவனிடமே ஒப்படைக்கிறேன் - ரிசாத் பதியுதீன்
irumbuthirai
April 25, 2021
நேற்று (24) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியால தடுப்புக் காவலில் விசாரிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுப்புக்காவல் உத்தரவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகளுக்கு உதவியமை மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.
இதேவேளை கைது செய்யப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் ஃபேஸ்புக் காணொளியில் கருத்து தெரிவித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன்,
சபாநாயகரின் முன் அனுமதியோ கைது செய்வதற்கான உத்தரவோ (Warrent) ஒன்றும் இல்லாமல் திடீரென இவர்கள் இந்த அதிகாலை வேளையில் வந்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டின் ஜனநாயக கட்சி ஒன்றின் தலைவர். 04 பாராளுமன்ற உறுப்பினர்கள் 169 பிரதேச சபை உறுப்பினர்களை கொண்ட கட்சி. ஒரு சமூகத்தின் அல்லது சமூக கட்சியின் தலைவர். எந்த ஒரு குற்றமும் செய்யாத என்னை இந்த நடுச் சாமத்தில் வந்து கூட்டிக்கொண்டு போவது அரசியல் பழிவாங்கலாகவே கருதுகிறேன். சமூகத்துக்கு செய்த அடக்குமுறையாக, சமூக குரலை நசுக்குவதற்காக சமூகம் பேசக்கூடாது என்பதற்காக செய்த பெரிய சதியாக இதைப் பார்க்கிறேன்.
இது ரமலான் மாதம். எங்கள் எல்லோரையும் படைத்த அல்லாஹ் ஒருவன் இருக்கிறான். அவன்தான் எல்லோரையும் ஆட்சி செய்பவன்.
இந்த மக்களிடம் நான் வேண்டிக்கொள்வது...
நீங்கள் எல்லோரும் அல்லாஹ்விடம் கையேந்துங்கள். 200 மையத்துகளை எரித்து எப்படி சந்தோசம் கொண்டாடினார்களோ அதேபோன்றுதான் இன்று என்னையும் கைது செய்கிறார்கள்.
எந்த ஒரு குற்றமும் நான் செய்யவில்லை. என்னென்ன பொய்களை சொல்லி கொண்டுபோய் என்னை தண்டிப்பதற்கான சதிகளை செய்கிறார்களோ தெரியவில்லை.
சமூகத்துக்காக பேசிய ஒரே காரணத்திற்காக ஒரு ஜனநாயகக் கட்சியின் தலைவரை இந்த நடுச்சாமம் மூன்று மணிக்கு தூங்கி கொண்டு இருக்கும் போது... நான் நோன்பாளி என்ற வகையில் நோன்பைத் திறந்து தராவீஹ் தொழுதுவிட்டு தூங்கிக் கொண்டிருந்த போது நடுச்சாமத்தில் வந்து கூட்டிக்கொண்டு போகிறார்கள்.
எனது மனைவி கேட்டார்... ஏன் காலையில் வந்து கூட்டிச் செல்லலாம் தானே என்று... இல்லை அவசரமாக கூட்டி செல்ல வேண்டும் என்றனர். சரி சபாநாயகரின் அனுமதியாவது இருக்கிறதா? என்று கேட்டார். அதுவும் இல்லை.
இது பொலிஸின்... இந்த அரசாங்கத்தின் அராஜகம். 100 குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது. இந்த நடுச்சாமம் வீட்டை உடைத்து கொண்டு
வந்தது போல் தான் வந்திருக்கிறார்கள்.
ஜனநாயகத்தை விரும்பும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களிடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் கட்சித் தொண்டர்களிடமும் நான் வேண்டிக் கொள்வது இன்று எனக்கு செய்த இந்த அநியாயத்திற்கு எதிராக நீங்கள் தட்டிக் கேளுங்கள். இந்த அநியாயத்துக்கு எதிராக ஜனநாயக ரீதியான அத்தனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து.. இது போன்று இன்னொரு அரசியல் தலைவரை அநியாயமாக கைது செய்யாமல் இருக்க வேண்டும்.
படைத்த அல்லாஹ்விடத்திலேயே ஒப்படைக்கிறேன். ஆதரவாளர்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன். இது ரமலான் மாதம். அல்லாஹ் விரும்பும் மாதம். குர்ஆன் இறக்கப்பட்ட மாதம். அமல் செய்து அதிகமதிகமாய் கையேந்துங்கள். இந்த அநியாயக்காரர்களுக்கு நேர்வழி இருக்குமென்றால் அல்லாஹ் நேர்வழியை கொடு! இல்லையென்றால் யா அல்லாஹ் இவர்களை அழித்துவிடு!! என்று நீங்கள் கையேந்துங்கள்.
இன்னும் யார் யாருக்கு என்ன அநியாயங்களை செய்யப்போகிறார்களோ தெரியாது. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. எந்த பாவமும் செய்யவில்லை. என்னுடைய கை சுத்தமானது.
எனவே அநியாயமாக அபாண்டமாக ஏதோ ஒன்றை சுமத்திக் கொண்டு என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
தாராவிஹ் தொழுதுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தேன்... நடுச்சாமத்தில் வந்திருக்கிறார்கள்... படைத்தவனிடமே ஒப்படைக்கிறேன் - ரிசாத் பதியுதீன்
Reviewed by irumbuthirai
on
April 25, 2021
Rating: