இதுவரை இல்லாத புதிய கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிப்பு
irumbuthirai
May 30, 2021
கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது முதல் இன்றுவரை ஆயிரக்கணக்கான முறையில் வைரஸ் திரிபுகள் நடைபெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளன.
வைரஸ்களில் எப்போதும் பிறழ்வுகள் (திரிபுகள்) ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். ஆனால் சில பிறழ்வுகள் முக்கியமற்றதாக இருக்கலாம். ஆனால் சில திரிபுகள் வீரியம் கொண்டதாக மாறிவிடுகிறது.
அந்த வகையில் இந்திய கொரோனா திரிபும் இங்கிலாந்து கொரோனா
திரிபும் சேர்ந்த புதிய வகையான கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் குயேன் தெரிவித்தார் என ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்த புதிய வகையானது பழைய வகை வைரஸ்களை காட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக இந்த வகை காற்றில் வேகமாகப் பரவி வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவில் B.1.617.2 என்ற புதிய வகை வைரஸ் முதன்முதலில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் கண்டறியப்பட்டது. இந்த வகை பிரிட்டன் வகை என்று சொல்லக்கூடிய B.1.1.7-ஐ காட்டிலும் வேகமாக பரவக் கூடியது என நிபுணர்கள் கண்டறிந்தனர். தற்போது இந்த இரண்டு வகையான வைரஸ் திரிபுகளையும் கலந்த ஒரு வைரஸ் திரிபே வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறைந்த எண்ணிக்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வியட்நாமும் உள்ளடங்குகிறது. இன்றுவரை அந்நாட்டில் சுமார்
6,700 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் கடந்த மாதத்தில் (ஏப்ரல்) இருந்து இனங்காணப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது அங்கு முன்னரை விட வேகமாக பரவி வருகிறது.
இதேவேளை ஃபைசர் மற்றும் ஆஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்துகள் இந்த வகையான வைரஸிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுவரை இல்லாத புதிய கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிப்பு
Reviewed by irumbuthirai
on
May 30, 2021
Rating: