அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை! (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு)
அரச ஊழியர்கள் வெளிநாடு செல்வது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு இன்றைய தினம் (22) வெளியிட்டுள்ளது. 14/2022 இலக்கம் கொண்ட குறித்த சுற்றறிக்கை "சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு / வெளிநாட்டு சம்பளமற்ற லீவு வழங்குதல்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்ல அல்லது வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் தொழில் ஒன்றில் ஈடுபடல் போன்ற நோக்கங்களுக்காக அரச உத்தியோகத்தர் சேவை காலத்தில் அதிகபட்சம் 05 வருடங்களுக்கு உட்பட்டு உத்தியோகத்தரின் சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு ஏற்புடையதாக கொள்ளக்கூடிய வகையில் சம்பளம் இல்லாத வெளிநாட்டு லீவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் 35 வயதுக்குட்பட்ட அரச உத்தியோகத்தர்கள், தகவல் தொழில்நுட்ப அறிவு, ஆங்கிலம் அல்லது வேறு எந்த மொழி / மொழிகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் தொழில் பயிற்சியை பூர்த்தி செய்வதற்கு அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு உட்பட்டு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த சுற்றறிக்கை அறிமுகப் படுத்துவதற்கு முன்னர் தாபன விதிக்கோவை ஏற்பாடுகளின் கீழ் வெளிநாடு சென்று இதுவரை நாடு திரும்பாத, அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை கால பகுதியில் உள்ள உத்தியோகத்தர்கள், சம்பளத்துடனான லீவு அல்லது சம்பளமற்ற லீவைப் பெற்றிருப்பதன் காரணமாக கட்டாய சேவை காலத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள், கட்டாய சேவை காலத்தை நிறைவு செய்துள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் தகுதிகாண் காலத்தில் உள்ள நிறைவேற்றுதரத்தில் அல்லாதவர்களுக்காகவும் இந்த விடுமுறை பெறலாம்.
ஏற்கனவே சம்பளமற்ற அல்லது சம்பளத்துடன் வெளிநாடு சென்றுள்ள ஊழியர்கள் இந்த ஏற்பாடுகளுக்கு அமைய சம்பளமற்ற லீவு பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் வெளிநாட்டிலிருந்தே எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கலாம்.
இந்த ஏற்பாடுகளின் கீழ் வெளிநாடு செல்லும் சகல ஊழியர்களும் வெளிநாட்டு நிதி கணக்கிற்கு (NRFC) பணம் அனுப்ப வேண்டும்.
அந்தவகையில்,
ஆரம்ப நிலை சேவை வகுதியை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மாதாந்தம் 100 அமெரிக்க டொலர்களும்
இரண்டாம் நிலை சேவை வகுதியை சேர்ந்தவர்கள் மாதாந்தம் 200 அமெரிக்க டொலர்களும்
மூன்றாம் நிலை சேவை வகுதியை சேர்ந்தவர்கள் மாதாந்தம் 300 அமெரிக்க டொலர்களும்
நிறைவேற்றுத்தர சேவை வகையை சேர்ந்தவர்கள் மாதாந்தம் 500 அமெரிக்க டொலர்களும் அனுப்ப வேண்டும்.
உத்தியோகத்தர் வெளிநாட்டில் தொழில் செய்யும் போது மேற்கூறப்பட்டுள்ள பணத்தை அல்லது தொழில் மூலம் கிடைக்கும் சம்பளத்தில் 25 வீதத்தை அனுப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு பணம் அனுப்பீடு செய்வதற்காக வெளிநாடு சென்ற நாள் முதல் 2மாத நிவாரணம் வழங்கப்படுவதுடன் மூன்றாவது மாதத்திலிருந்து பணம் அனுப்ப வேண்டும்.
இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் 2022-6-22ஆம் திகதி முதல் நடைமுறையாகும்.
இந்த சுற்றறிக்கைகளை மும்மொழிகளிலும் இங்கே பார்வையிடலாம் மற்றும் டவுன்லோட் செய்யலாம்..