கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் உத்தியோகபூர்வ அறிவிப்பு! (அறிவித்தலின் தமிழ் மொழிபெயர்ப்பும் வீடியோவும் இணைப்பு)
அவர் வெளியிட்ட அறிவிப்பை இங்கே தருகிறோம்.
கோதாபய ராஜபக்ஷ அவர்களின் பதவி விலகல் கடிதம் என்னிடம் கிடைக்கப்பெற்றுள்ளது. 2022-07-14ம் திகதியிலிருந்து ஜனாதிபதி அவர்கள் தனது பதவியிலிருந்து உத்தியோபூர்வமாக விலகி உள்ளார்.
இப்போதிலிருந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகிறது. இந்த நடவடிக்கை நிறைவு பெறும் வரை அரசியல் யாப்பின் அடிப்படையில் பிரதமர் அவர்கள் பதில் ஜனாதிபதியாக கடமையாற்றுவார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதானது, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் என்னால் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது போல் 1981 ம் ஆண்டு 2ம் இலக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் கொண்ட சட்டம் மற்றும் அரசியல் யாப்பின் 40 ஆம் சரத்திற்கு அமைய இடம்பெறும். இந்த செயற்பாட்டை மிகவும் விரைவாகவும் வெற்றிகரமாகவும் நிறைவு செய்வது எனது நோக்கம்.
தெற்காசியாவின் மிகப் பழமை வாய்ந்த ஜனநாயக நாடு என்று பெருமைப்படும் நாம், இந்த விடயத்தை உயர்ந்த ஜனநாயக வரம்புக்குள் நிறைவேற்றுவது எமக்கு மட்டுமல்ல உலக அரசியல் வரலாற்றிலும் முக்கிய நிகழ்வாக இருக்கும்.
அந்த வகையில் இந்த ஜனநாயக செயற்பாட்டுக்கு உயர்ந்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு பிரதானிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுகிறேன்.
விசேடமாக எமது நாட்டின் கௌரவமான அன்பான பிரஜைகளிடம் நான் வேண்டிக் கொள்வது, உரிய ஜனநாயக முறைப்படி பாராளுமன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் சுதந்திரமாகவும் தமது மனசாட்சி படியும் தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் அவசியமான சுமுகமான நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறான சுமுகமான நிலைமையின் கீழ் 07 நாட்கள் என்ற மிகக் குறுகிய காலத்தினுள் இந்த செயற்பாட்டை நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட சகல தரப்பினரிடமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேன்.
அந்த வகையில் 2022-07-16ம் திகதி சனிக்கிழமை பாராளுமன்ற கூட்டப்படும் எனவே சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகிறேன். இது தொடர்பாக நீங்கள் அனைவரும் வழங்கும் ஒத்துழைப்பிற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். என்று தனது அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் இந்த அறிவிப்பு தொடர்பான வீடியோவை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.