அம்பரபொல ரீயூனியன் சொசைட்டியின் வெற்றிகரமான இரத்ததான முகாம்
Irumbu Thirai News
August 14, 2022
அம்பரபொல ரீயூனியன் சொசைட்டி (Ambarapola Reunion society) அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு ஒன்று அம்பரப்பொல கலாசார மண்டபத்தில் நேற்று (13.08.2022) வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுமார் 100 பேர் பங்கு பற்றியதோடு 76 பேரிடமிருந்து இரத்தம் தானமாகப் பெறப்பட்டது. மேற்படி அமைப்பினரால் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இத்தகைய எண்ணிக்கையில் கொடையாளர்கள் திரண்டமை மிகப் பெரிய வெற்றியாகும்.
மேலும் இந்நிகழ்வில் உடுநுவர பிரதேச சபையின் தலைவர், உபதலைவர் போன்றோரும் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்தனர்.
பொதுவாக நடமாடும் இரத்ததான நிகழ்வு என்பது தேசிய இரத்த பரிமாற்று சேவைக்குப் போன்றே நாடு முழுவதுமுள்ள இரத்த வங்கிகளுக்கும் மிக முக்கியமானதாகும். இரத்ததான முகாம்களில் பெற்றுக் கொள்ளும் இரத்தத்தை இரத்த வங்கிக்கு கொண்டு சென்ற பின்னர் அதில் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
அதாவது குறித்த இரத்தத்தின் மூலம் பரவும் நோய்கள் அந்த இரத்தத்தில் காணப்படுகின்றதா என்பது பரிசோதிக்கப்படும். அவ்வாறே எந்த வகை இரத்தம் என்பதும் பரிசோதிக்கப்படும்.
அதன் பின்னர் தனியான இயந்திரங்கள் மூலம் குறித்த இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்கள் , இரத்தக் கலங்கள், பிளாஸ்மா மற்றும் Cryoprecipitate ஆகிய மூலக் கூறுகள் பிரித்தெடுக்கப்படும். அதன் அடிப்படையில் ஒரு இரத்த வழங்கியின் இரத்தத்தின் மூலம் நான்கு மூலக் கூறுகள் சில சந்தர்ப்பங்களில் மூன்று மூலக் கூறுகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
அதன் அடிப்படையில் நீங்கள் தனமாக வழங்கும் ஒரு பக்கெட் இரத்தத்தின் மூலம் மூன்று உயிர்கள் சில வேளைகளில் நான்கு உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.
இவ்வாறு பிரிக்கப்பட்ட இரத்தத்தை 35 நாட்கள் சிலபோது 45 நாட்கள் வைத்துக் கொள்ள முடியும். அந்தக் காலத்தினுள் சேகரிக்கப்பட்ட பெற்றுக் கொள்ளும் இரத்தத்தை இங்கே மட்டுமல்ல. தேசிய இரத்த பரிமாற்று சேவைக்குரிய நாடு முழுவதிலுமுள்ள இரத்த தேவையுள்ள வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்படும்.
குறிப்பாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலை போன்ற இடங்களுக்கும் இந்த இரத்தத்தையும், அதன் மூலக் கூறுகளையும் விநியோகம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் இவ்வாறான ஒரு இரத்ததான நிகழ்வினால் நோயாளர்களுக்குக் கிடைக்கும் நன்மை அளப்பரியது.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் முழு மனித சமுதாயத்தையும் வாழ வைத்தவர் போன்றவராவார். - அல் குர்ஆன் - சூரா மாயிதா 32 ஆம் வசனம். அதன் அடிப்படையில் இரத்த தானம் மேற்கொள்ளும் ஒரு நபர் மூன்று அல்லது நான்கு பேரை வாழ வைக்கும் மாபெரும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்கின்றார்.
பொதுவாக எமது சமூகத்தில் இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு மிக அரிதாக உள்ள காலத்தில் சில தொண்டு நிறுவனங்கள் முன் வந்து மேற்கொள்ளும் இவ்வாறான நிகழ்வுகள் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது மட்டுமன்றி சமூகம் தொடர்பில் நன்மதிப்பை ஏற்படுத்தவும் பங்காற்றுகின்றன.
மேற்படி நிகழ்வு தொடர்பில் அம்பரபொல ரீயூனியன் சொசைட்டியின் செயற்குழு உறுப்பினரான சகோதரர் M.J.M. இக்ரம் தெரிவிக்கையில்,
"அம்பரப்பொல கிராமத்தின் முன்னேற்றத்திற்காக கிராம வாலிபர்கள் ஒன்றிணைத்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய இந்த அமைப்பு ஊர் மட்டத்தில் பல சமூக சேவைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த கொவிட் தடுப்பூசி ஏற்றல் வேலைத் திட்டத்தின் போது மூன்று தடுப்பூசி ஏற்றல் வேலைத் திட்டங்களை பம்பரதெனிய வைத்தியசாலை, உடுநுவர சுகாதார மருத்துவ அதிகாரி காரியாலயம் ஆகியவற்றோடு இணைந்து நமது அமைப்பானது அனைவரும் பாராட்டும்படியாக மேற்கொண்டிருந்தது.
அதே போன்று கொவிட் 19 தொற்றுக் காலத்தில் வருவாயிழந்த குடும்பங்களுக்காக உலருணவுப் பொருள் விநியோகம் போன்ற வேலைத் திட்டங்களையும் இந்த அமைப்பு மேற்கொண்டது. மேலும் ஊரில் உள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு புலமைப் பரிசில்களையும் இது வழங்கி வருகிறது.
மேலும் ஊர் வாலிபர்களை ஒன்று திரட்டி சமூக மேம்பாட்டுக்கு உதவும் எமது பிரதான இலக்கினை நாம் கடந்த காலங்களில் அடைந்திருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகவே, இவ்வருடம் இரத்ததான முகாம் ஒன்றை நடாத்துதல் தொடர்பில் திட்டமிட்டோம். அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே பேராதனை போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு அவசரமாக இரத்தத் தேவை உள்ளதாக தகவல்கள் எமக்கு கிடைத்தன. அதனைத் தொடர்ந்து உடுநுவர பிரதேச சபையின் உப தலைவர் சப்வான் ஹாஜியார் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலுடன் எமது ARWS சங்கமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்தோம்.
எமது சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆண், பெண் பாகுபாடின்றி இந்த நிகழ்வில் பங்கு பற்றியமையும், பிரதேசத்தைச் சேர்ந்த பல மாற்று மத நண்பர்கள் இதில் பங்குபற்றியமையும் எமக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும் என தெரிவித்தார்.
கல்வி கலாச்சாரம் சமூக சமய மேம்பாட்டை வளர்த்தலும் தனிமனித ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ ஆளுமையை கட்டி எழுப்பலும் என்ற தொனிப்பொருளில் இவ்வமைப்பு செயல்பட்டுக் கொண்டிருப்பதுடன், நாட்டில் உள்ள பொருளாதாரப் பிரச்சினையுடன் பாடசாலைகள் தினங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பிள்ளைகளின் கல்வி எவ்வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற உன்னத நோக்குடன் ஊருக்கு ஒரு பாடசாலை என்ற திட்டத்தையும் சுற்றுப்புற ஆசிரியர்களைக் கொண்டு மாலை நேரம் ஒரு பாடசாலையை போலவே ARWS கழகம் செய்து கொண்டு வருகின்றது எனத் தெரிவித்த முதல் தலைவர் M.S.M. Riyas அவர்கள் இரத்ததான நிகழ்வில் பங்கு பற்றியவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது சங்கம் சார்பான மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்தார்.
தானம் வழங்கியோரினையும், அதனை ஏற்பாடு செய்ய உழைத்த அனைவரினதும் தியாகத்தையும், உழைப்பையும் எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொள்வானாக!
தகவல்: Fayas M.A. Fareed.
அம்பரபொல ரீயூனியன் சொசைட்டியின் வெற்றிகரமான இரத்ததான முகாம்
Reviewed by Irumbu Thirai News
on
August 14, 2022
Rating: