மீளப் பெறப்பட்ட அதே இஸ்லாம் பாட நூல்களை வழங்குமாறு கல்வி அமைச்சர் உத்தரவு!
Irumbu Thirai News
November 01, 2022
பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட இஸ்லாம் பாட நூல்களில் சர்ச்சைக்குரிய விடையங்கள் அடங்கியிருப்பதாக தெரிவித்து அந்த பாட நூல்கள் மீள பெறப்பட்டன. இது கோத்தாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இடம்பெற்றது.
ஆனால் அவ்வாறு பெறப்பட்ட பாட நூல்களுக்கு பதிலாக வேறு நூல்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இது தொடர்பில் பல தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் நீதிக்கான மையத்தின் தலைவர் ஷஹ்பி எச் இஸ்மாயில் தலைமையிலான குழுவினர் பல்வேறு தரப்புகளை இது தொடர்பில் சந்தித்து வருகின்றனர்.
நேற்றைய தினம் மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உட்பட அதன் பிரதிநிதிகளையும் சந்தித்தனர்.
அதன் அடுத்த நகர்வாக, இன்றைய தினம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் உட்பட அதன் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் ஆகியோர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவை சந்தித்து இது தொடர்பில் விளக்கம் அளித்துள்ளனர்.
இதன் போது மீளப் பெறப்பட்ட பாட நூல்களை மீண்டும் மாணவர்களுக்கு தற்காலிகமாக நவம்பர் 15 ஆம் தேதிக்கு முன் வழங்குமாறு அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். மேலும் அடுத்த வருடம் இதில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமாயின் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
மீளப் பெறப்பட்ட அதே இஸ்லாம் பாட நூல்களை வழங்குமாறு கல்வி அமைச்சர் உத்தரவு!
Reviewed by Irumbu Thirai News
on
November 01, 2022
Rating: